கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நியமனத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவிற்கு கடிதமொன்றை கையளித்துள்ளது.
எட்டு அம்சங்களை கொண்ட இந்த கடிதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கூட்டமைப்பினால் ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,எட்டு அம்சங்களை கொண்ட இந்த கடிதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி என்ற விடயம் மிக முக்கியமானதாகும். கடந்த 30 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் கட்டமைவில்லாத ஏற்பாடுகள் தான் இருந்து வந்தது. இதனால் உள்ளூராட்சி சபைகளில் பல பிரச்சினைகள் உருவாகின. இதனால் கிழக்கு மாகாணத்தில் இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டியது அவசியமாகும்.
இதே நேரம், தற்போது உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்கவுள்ளதாக நாம் அறிகின்றோம். இது நடைபெறுமாயின் அதியுயர் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையான உள்ளூராட்சிக்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருப்பர்.
உதாரணமாக மத்திய அரசாங்கத்தின் உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம், கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சர் ஒரு முஸ்லிம்,மேற்குறிப்பிட்டவாறு உள்ளூராட்சி ஆணையாளர் அமைவாராயின் 3 இனங்களும் சமமாக வாழும் இந்த மாகாணத்தில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர் இருக்கும் போது இந்த மாகாணத்தின் இனச் சமத்துவம் பேணப்படமாட்டாது.
எனவே தற்போதைய உள்ளூராட்சி ஆணையாளரையே அதில் இருத்துமாறும், இல்லாதவிடத்து இன்னொருவரை மற்றைய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த கோரிக்கை நியாயமானதொரு சமநிலைப்பட்ட நிர்வாகத்தை பேணுவதற்கான வேண்டுகோளாகும். இதற்கு மேலாக வேறு எதனையும் கருத்தில் கொண்டு எழுதப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண பிரதம செயலாளருக்கும் இந்த கடிதத்தின் பிரதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.தண்டாயுதபாணி, ஆர்.துரைரெட்ணம், ஜீ.கருணாகரம் (ஜனா), கே.துரைராஜசிங்கம், ஜீ.கிருஸ்ணபிள்ளை, என்.இந்திரகுமார் (பிரசன்னா), ரி.கலையரசன், கே.நாகேஸ்வரன், எம்.நடராஜா, எம்.ராஜேஸ்வரன், ஜே.ஜனார்த்தனர் ஆகியோர் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக எம்.வை.சலீம், மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment