எம்.வை.அமீர்-
இலங்கை முஸ்லிங்களின் தலைநகர்,
பிராந்தியத்தின் இதயம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சரியாத கோட்டை என்றல்லாம் பேசப்படும்
கல்முனை மண்ணுக்கு அமைச்சுப்பதவி ஒன்றை வழங்கி அம்மண் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற உணர்வலைகள்
இப்பிராந்தியம் எங்கும் எதிரொலிக்கின்றன என்று கல்முனை மாநகரசபையின் முன்னாள்
பிரதிமுதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் தெரிவித்தார்.
மறைந்த தலைவர் அவர்களுக்குப்பின் சுமார் 15 வருடங்களாக கல்முனை மண் அமைச்சுப்பதவி ஒன்றை பெறுவதில் இருந்து
புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இம்முறையாவது அமைச்சுப்பதவி ஒன்றை வழங்குவதன் ஊடாக
கல்முனை கொவ்ரவிக்கப்படுமா என கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் அவர்களிடம் வினவிய
போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர்
ஏ.ஆர்.எம்.மன்சூர் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் போன்றவர்கள்
சக்திவாய்ந்த அமைச்சர்களாக கல்முனையை தளமாகக்கொண்டு இப்பிராந்தியத்தை அபிவிருத்தி
செய்தனர். தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பிரிவைத் தொடர்ந்து கல்முனைக்கு
அமைச்சுப்பதவி ஒன்று வழங்கப்படாதது ஒரு குறைதான் என்று குறிப்பிட்ட பஷீர், இம்முறை
எங்களது தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் கல்முனைக்கான அரசியல் உயர் அந்தஸ்த்து என்ற
விடயத்தில் கரிசனை கொள்வார் என்றும் தெரிவித்தார்.
கல்முனை அபிவிருத்தி மற்றும்
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை நிறுவும் விடயம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின்
அபிவிருத்தி விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிக சிரத்தை எடுக்கவுள்ளதாக
குறிப்பிட்ட பஷீர், குறித்த விடயங்களை களத்தில் இருந்து நடைமுறைப்படுத்த
கல்முனைக்காக அமைச்சுப்பதவி ஒன்றை வழங்க கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று
நம்புவதாகவும் தெரிவித்தார்.
மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்
அவர்களின் மறைவைத் தொடர்ந்து அபிவிருத்தி விடயத்தில் அம்பாறை மாவட்டம்
பின்தள்ளப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்ட அவர், எதிர்காலத்தில் சகல குறைகளையும்
நிவர்த்திக்க கட்சி காத்திரமான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும்
தெரிவித்தார்.
இம்முறை தேர்தல் களத்தில் கல்முனை பல்வேறு
சவால்களை சந்தித்ததாக தெரிவித்த ஏ.ஏ.பஷீர், அவைகள் அனைத்தையும் கட்சிப்போராளிகள் சுமார்
25000 க்கு மேற்பட்ட வாக்குகளை எங்களுக்கு வழங்கி முறியடித்ததாகவும்
தெரிவித்தார்.
எங்களது கட்சித்தலைவர் அவர்களால் உத்தேசிக்கப்பட்டுள்ள
எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு அமைச்சுப்பதவி ஒன்றை வழங்குவதன் ஊடாக
தலைவருக்கு ஏற்படும் சுமைகளை குறைத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்த ஏ.ஏ.பஷீர்,
பொத்துவில் தொகுதி மக்களுக்கு சிறந்த அரசியல் அதிகாரம் ஒன்றை வழங்கி அம்மக்களின்
அபிலாசைகளையும் நிவர்த்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பலத்த சவால்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையை ஏற்று வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி
தெரிவிப்பதாக குறிப்பிட்ட ஏ.ஏ.பஷீர், இம்மக்களின்அபிலாசைகளை அடைந்து கொள்ள
அனைவரும்ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.

0 comments:
Post a Comment