• Latest News

    August 08, 2016

    அழிந்து கொண்டிருக்கும் ஒலுவில் தடுத்து நிறுத்துவது யார்..?

    சஹாப்தீன்-
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பினால் மிகவும் நேசிக்கப்பட்டதொரு கிராமம் ஒலுவில். அஸ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்து மக்கள் மத்தியில் கொண்டு சென்ற போது அம்பாறை மாவட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அவரின் கொள்கையை ஆதரித்தார்கள். அதிலும், ஒரு சில கிராமங்கள் நூறு வீதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்தன. அந்த வரிசையில் ஒலுவில் கிராமம் முதலாவது இடத்தை வகிக்கின்றது. ஒலுவில் மக்களின் இந்த ஆதரவினால் நெகிழ்ந்து போன அஸ்ரப், 'நான் மரணித்தால் ஒலுவில் மண்ணில்தான் என்னை அடக்கம் செய்ய வேண்டும்' என்று பகிரங்கமாக அறிவித்தார்.
    அஸ்ரப் ஒலுவில் கிராமத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த போதே அரநாயக்காவில் அவர் பயணித்த ஹெலிகொப்டர் கோர விபத்துக்குள்ளாகி மரணித்தார். அவரின் இறுதி விஜயம் கூட ஒலுவிலை நோக்கியதாகவே இருந்தது மட்டுமல்லாது, தான் குடியிருப்பதற்கு இக்கிராமத்தில் ஒரு வீட்டையும் கட்டியிருந்தார். இவ்வாறு ஒலுவில் மண்ணை நேசித்த அஸ்ரப்பின் உடல் ஒலுவில் மண்ணில் அடக்கம் செய்யப்படவில்லை. தனது உடலை ஒலுவிலில் அடக்கம் செய்ய வேண்டுமென்ற அவரது விருப்பத்தைக்கூட அவரின் அரசியல் வாரிசுகள் நிறைவேற்றவில்லை. இதுதான் அஸ்ரப்பின் கொள்கைக்கு விழுந்த முதல் அடியாகும்.
    இதன் பின்னர் அவரின் கொள்கைகள் படிப்படியாக மாற்றப்பட்டன. இக்கொள்கைகள் இன்று முஸ்லிம் சமூகத்தை அடமானம் வைத்து பணம் சம்பாதிக்கும் நிலைக்கு வந்துள்ளது. அஸ்ரப் உயிரோடு இருந்த காலத்தில் அவரை ஒழித்துக் கட்ட வேண்டுமென்று மடித்துக் கட்டிக் கொண்டு நின்றவர்கள்; ஒன்று சேர்ந்து முஸ்லிம் சமூகத்தின் கொள்கை வகுப்பாளர்களாக மாறியுள்ளமைதான் முஸ்லிம் சமூகம் அரசியலில் பின் தங்கியிருப்பதற்கான காரணமாகும்.
    அஸ்ரப் ஒலுவில் கிராமத்தை நாடும், சர்வதேசமும் திரும்பிப் பார்க்கும் வகையில் பல அபிவிருத்திப் பணிகளைச் செய்தார். இதனால், ஒலுவில் உலக அளவில் பேசப்பட்டது. ஒலுவில் துறைமுகம், தென்கிழக்கு பல்கலைக் கழகம் ஆகியவற்றை அமைத்தார். இதன் மூலமாக ஒலுவில் பொருளாதார வளர்ச்சியும், கல்வி வளர்ச்சியும் பெற்று திகழும் என்று அவர் கனவு கண்டார். இந்த இரு அபிவிருத்திப் பணிகளும் நிறைவடைவதற்கு முன்னதாகவே அவர் மரணித்து விட்டார்.
    அஸ்ரப்பினால் பெரிதும் நேசிக்கப்பட்ட ஒலுவில் மக்கள் அவரின் மரணத்தின் பின்னர் தொடரான சோகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் சோகங்களை அரசியல் அதிகாரத்தைக் கொண்டு இல்லாமல் செய்யலாம். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமோ, அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ, அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்ததாக தம்மை உயர்த்திப் பேசிக் கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வோ தமக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒலுவில் மக்களின் சோகங்களை இல்லாமல் செய்வதற்கு முன்வரவில்லை .
    ஒலுவில் துறைமுகத்திற்காக பொது மக்களின் காணிகள் 2008ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்டன. இவ்வாறு சுவீகரிக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் அஸ்ரப் உயிருடன் இருக்கும் போது நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொண்டார்கள். மிகுதியாக உள்ளவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு வைத்தும் நஷ்டஈடு பெற முடியாதவர்களாக உள்ளார்கள். இன்றும் அவர்கள் தங்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தருமாறு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் நஷ்டஈடு பெற்றுத் தருகின்றோம் என்று வாக்களித்தாலும் அதனை சாத்தியமாக்கும் எந்த நடவடிக்கைளையும் எடுக்கப்படவில்லை.
    துறைமுகத்தை அமைக்கும் போது, இதுவொரு பொருத்தமற்றதொரு அபிவிருத்தி, ஒலுவிலை கடல் அழித்துவிடுமென்று நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் தெரிவித்தார்கள். இதே வேளை, துறைமுக வேலைகளுடன் கரையோரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஒலுவில் மக்கள் அரசியல் ரீதியாக அஸ்ரப்பின் மீது கொண்ட அன்பின் காரணமாக துறைமுகத்தை அமைப்பதற்கு பூரண ஆதரவு வழங்கினார்கள். எங்கள் கிராமத்தின் பொருளாதாரம் உயரும் என்று நம்பினார்கள்.

    ஆனால், அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் துறைமுக வேலைகள் ரவூப் ஹக்கீமினால் துரிதப்படுத்தப்பட்டன. தற்போது அங்கு மீன் பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்தை அமைக்கும் போது கரையோரத்தை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலரிப்பை தடுப்பதற்கு பாரிய கருங்கற்கள் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மீன் பிடித்துறைமுகத்தை அமைத்துவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வந்து அதனைத் திறந்து வைத்தார்கள்.
    கடலரிப்பை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், ஒலுவில் கடற்கரை பிரதேசத்தில் உள்ள பல தென்னந் தோட்டங்கள் முற்றாக அழிந்து போய் உள்ளன. கடற்கரை பிரதேசத்தில் உள்ள ஏனைய காணிகளும், மீன் பிடித் தொழிலாளர்களின் வாடிகள் யாவும் கடலுக்கு இரையாகியுள்ளன. கடல் சுமார் 200 மீற்றர் வரைக்கும் முன் நோக்கி வந்துள்ளது. கடலின் இந்த ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்காது போனால், தமிழ் நாட்டில் அத்திப்பட்டிக் கிராமம் போல் ஒலுவில் கிராமமும் கடலினால் விழுங்கப்பட்டு விடுமோ என்று இக்கிராம மக்கள் பயந்து கொண்டிருக்கின்றார்கள். ஒலுவில் கிராமம் இவ்வாறு நாளுக்கு நாள் அழிந்து கொண்டிருப்பதனை பார்ப்பதற்கு நாளாந்தம் ஆயிரக் கணக்கில் ஏனைய பிரதேச மக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு கிராமம் அழிந்து கொண்டிருப்பதனை பார்ப்பதற்கு கூடும் மக்கள் அந்த அழிவுகளுக்கு மத்தியில் படங்களைப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு போட்டோக்களை எடுப்பவர்களில் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றார்கள். ஒலுவில் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதனை பார்வையிடும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், மறுநாள் தமது விஜயம் பத்திரிகைகளில் வந்துள்ளதா என்று காட்டுகின்ற ஆர்வம் அதிகமாகும்.
    ஒலுவில் துறைமுக வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இக்கிராம மக்கள் கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும் பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்தார்கள். ஆனால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கண்துடைப்பாக ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு ஆய்வுகளின் அடிப்படையில் நடைபெறவில்லை. இதனால், அந்நடவடிக்கைகள் ஒலுவில் கிராமத்தை கடல் துவசம் செய்வதனை தடுத்து நிறுத்தவில்லை.
    கடந்த பொதுத் தேர்தலில் எங்களுக்கு வாக்களியுங்கள் கடலரிப்பை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம் என்று தெரிவித்தார்கள். ஒலுவில் வாக்காளர்களும் வாக்களித்தார்கள். குறிப்பிட்ட கட்சியினால் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்வதற்கு இக்கிராம மக்களின் வாக்குகள் உதவிய போதிலும், இக்கிராம மக்களின் சோகங்களை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசார்ட் பதியுதீனிடமும் கடலரிப்பை தடுத்து நிறுத்துமாறு ஒலுவில் மக்கள் கோரிக்கையை முன் வைத்தார்கள். அவர் கடலரிப்பை பார்வையிட வந்தார். அதே தினத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமும் வருகை தந்து கடலரிப்பை பார்வையிட்டார். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் போட்டி போட்டு கலரிப்பை பார்வையிட்டார்கள். கடலரிப்பை பார்வையிடுவதில் போட்டி போட்டுக் கொண்ட இவர்கள் அதனை தடுப்பதற்கு போட்டி போட்டு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் ஒலுவில் கிராம மக்களின் அச்சம் நீங்கியிருக்கும்.
    ஒலுவிலில் சுமார் 16500 பேர் உள்ளார்கள். இவர்களில் சுமார் 6000 பேர் வாக்காளர்களாக உள்ளார்கள். இந்த வாக்குளைப் பெற்றுக் கொள்வதில் அரசியல்வாதிகள் போட்டியிட்டுக் கொண்டாலும், ஒலுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகும். இதனால், தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் ஒலுவில் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்குகளை கேட்டுள்ளார்கள். ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களும் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு வீடுகளுக்கு சென்றுள்ளார்கள். ஆனால், இன்று இக்கிராம மக்கள் தங்களின் வீடுகளுக்கு வந்து வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
    நமது கிராமத்தில் துறைமுகம் அமைந்தால் தங்களின் பொருளாதாரம் கொளிக்குமென்று நம்பியவர்கள் ஏமாந்துள்ளார்கள். குறிப்பாக தென்னந் தோட்ட உரிமையாளர்களும், கடற் தொழில்களும் வருமானமின்றி நடு வீதிக்கு வந்துள்ளார்கள். தங்களின் மீன் பிடி வல்லங்களைக் கூட நிறுத்தி வைப்பதற்கு இடமின்றி உள்ளார்கள். இழந்து நடுவீதிக்கு வந்துள்ளார்கள். இவர்களுக்கு நஸ்டஈடுகளும் வழங்கப்படவில்லை.
    தங்களின் கிராமத்திற்கு ஏற்பட்டுள்ள துயரங்களை துடைப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்கமும் நடவடிக்கைகளை எடுக்காதிருப்பதனால் ஆத்திரமடைந்த ஒலுவில் கிராம மக்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டார்கள். கடலரிப்பை தடுத்து நிறுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினார்கள். இதில் பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டார்கள். கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மகஜர் ஒன்றினையும் வழங்கினார்கள். அதில்,
    01) ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணியினால் ஏற்பட்ட கடலரிப்பினை நிரந்தரமாக நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும்.
    02) மீனவர்கள் தொடர்ச்சியாக தொழிலை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் கடலரிப்பினை தடுப்பதோடு, அவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படவும் வேண்டும்.
    03) அவ்வப்போது ஏற்படும் கடலரிப்பினை தடைசெய்ய மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஆய்வறிக்கையுமற்ற, சாத்தியப்பாடற்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டு, உறுதி செய்யப்பட்ட நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
    04) ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினால் பாதிப்புற்ற பொது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், காலம் தாழ்த்தாது உடனடி தீர்வை வழங்கும் பொருட்டு, சுயாதீனமான ஆணைக்குழுவை நிறுவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆதலால், ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு அக்கிராம மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அரசியற் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்கமும் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதில் பொது போக்காக இருந்த ஒலுவில் மற்றுமொரு அத்திப்பட்டியாவதனை தடுக்க முடியாது.
    நன்றி: வீரகேசாி 07.08.2016
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அழிந்து கொண்டிருக்கும் ஒலுவில் தடுத்து நிறுத்துவது யார்..? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top