• Latest News

    July 05, 2014

    கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு அழைத்துவர ரமபோஷாவால் முடியும்!- அரசாங்கம் நம்பிக்கை

    பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர முடியாது என கூறிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு அழைத்துவர இலங்கை வரவுள்ள தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில் ரமபோஷாவினால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

    தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி சிறில் ரமபோஷாவின் இலங்கை விஜயம் மற்றும் தீர்வு செயற்பாடுகள் குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
    இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான செயற்பாட்டில் தென்னாபிரிக்க பிரதிநிதி சிரில் ரமபோஷாவின் விஜயமானது பாரிய திருப்பு முனையாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    காரணம் தென்னாபிரிக்காவில் மிகவும் முன்னேற்றகரமான தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு ரமபோஷா மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவர். அந்தவகையில் இலங்கையில் தீர்வுத்திட்டம் ஒன்று எட்டப்படுவதற்கு அவர் சிறந்த மார்க்கமாக அமைவார் என்பதில் சந்தேகம் இல்லை.

    குறிப்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர முடியாது என கூறிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு அழைத்துவர அவரால் முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

    அத்துடன் போத்தல் மட்டும் புதிதல்ல அதில் உள்ள வைனும் புதிதுதான் என்பதனை அரசாங்கம் கூட்டமைப்புக்கு வெளிக்காட்ட வேண்டும் என்ற எண்ணக்கருவையும் ரமபோஷா சிறந்த முறையில் உணர்த்துவார் என்பது எமது நம்பிக்கையாகும். அதாவது அரசாங்கம் இந்த இடத்தில் அர்ப்பணிப்பை வெளிக்காட்டவேண்டும் என்பதனை அவர் உணர்த்துவார்.

    இது இவ்வாறு இருக்க பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ளது. அதாவது அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தி அதன்மூலம் எட்டப்படுகின்ற இணக்கப்பாட்டுக்கு அமைய தெரிவுக்குழுவுக்கு வருவது குறித்து சிந்திக்க முடியும் என்று கூட்டமைப்பின் தரப்பில் கூறப்படுகின்றது.

    ஆனால் தீர்வு செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு முக்கியமான தரப்பாக கருத முடியுமே தவிர தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்று அவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்துவது கடினமாகும்.

    அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏக பிரதிநி்தியாக ஏற்று அரசாங்கம் பேச்சு நடத்தினால் அது ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மனோ கணேசன் ஆகியோரின் கட்சிகளுக்கு செய்கின்ற அநீதியாகிவிடும்.

    இந்த நாட்டில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல கட்சிகள் உள்ளன என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கூட்டமைப்பை தெரிவுக்குழுவுக்கு அழைத்துவர ரமபோஷாவால் முடியும்!- அரசாங்கம் நம்பிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top