• Latest News

    March 28, 2016

    மாநாட்டின் 'சாதனைகள்'

    ஏ.எல்.நிப்றாஸ்-
    'ஒப்பரேஷன் சக்ஸஸ், பேஷன் டெட்' என்பது பிரபலமான ஆங்கில நகைச்சுவை சொற்றொடராகும். 1829ஆம் ஆண்டு தொடக்கம் மருத்துவத் துறையில் மட்டுமன்றி, இராணுவம், அரசியல் போன்ற துறைகளிலும் கூட 'சத்திரசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி மரணம்' என்ற அர்த்தமுடைய இச் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் பாலமுனையில் நடாத்தப்பட்ட தேசிய மாநாடு பற்றி இந்த சமூகம் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்களை எல்லாம் சாகக் கொன்றுவிட்டு, வெளியில் தெரியும் சிலுசிலுப்புகளுக்காகவும் பகட்டான விடயங்களுக்காகவும் அம்மாநாடு 'அமோக வெற்றி' எனக் கூறுவதை பார்க்கும் போது, மேற்சொன்ன ஆங்கில நகைச்சுவை வசனம்தான் ஞாபகத்திற்கு வருகின்றது. 

    முஸ்லிம் காங்கிரஸ் என்பது பத்தோடு பதினோராவது கட்சியல்ல. அந்தக் கட்சிக்கு என்று சில பிரத்தியேக பண்புகள், அடையாளங்கள் இருக்கின்றன. அந்தக் கட்சியின் ஒவ்வொரு செயலிலும் ஏதாவது ஒரு வித்தியாசம் இருந்ததை முன்னைய தலைவர் காலத்தில் மக்கள் கண்டுணர்ந்திருக்கின்றார்கள். அதுபோலவே, மு.கா.வின் தேசிய மாநாடுகளுக்கும் சிறப்பம்சங்கள் இருக்கின்றன. 

    தேசிய மாநாட்டின் தார்ப்பரியம்
    ஒரு தேசிய மாநாட்டில் உரையாற்றிய மறைந்த தலைவர் அஷ்ரஃப் தேசிய மாநாடு பற்றி குறிப்பிடுகையில், 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு விடுதலை வீரன். காற்றினால் தீயினால் வெள்ளத்தினால் அழிக்க முடியாத ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமென்று நாம் கனவு கண்டோம். துப்பாக்கி ரவைகளினால் சுடப்படாத முடியாத ஒரு தலைமைத்துவம் முஸ்லிம் சமூகத்திற்கு வேண்டும். அந்தத் தலைமைத்துவத்தை உருவாக்குகின்ற காரணத்தினாலேயே, சரித்திர நாயகனாக முஸ்லிம் காங்கிரஸ் வளர்ந்திருக்கின்ற காரணத்தினாலேயே... அந்த விடுதலை வீரனுக்காக முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு வருடமும் பெருநாள் போன்ற விழாவொன்றை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதுதான் தேசிய மாநாடுகளாகும்' என்று குறிப்பிட்டிருந்தார். 

    ஆக, மு.கா.வின் தேசிய மாநாடு என்பதன் தார்ப்பரியம் என்னவென்று மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமுக்கும் அவருக்கு சிரேஷ்டமான போராளிகளுக்கும் தெரியும். பெரும்பான்மை கட்சிகள் செய்வது போன்று, பிரமாண்டமான மேடைகளை அமைத்து பல்லாயிரக்கணக்கான மக்களை அழைத்துவந்து காண்பிப்பது மாத்திரம் முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டின் பண்பு என அவர்கள் ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். அக் கட்சியின் மாநாடு ஒரு களியாட்ட நிகழ்வோ, இசை நிகழ்ச்சியோ, தனிமனித ஆதிக்கம் கொண்ட நிகழ்வாகவோ ஒருபோதும் இருந்ததில்லை என்று அஷ்ரஃப் காலத்து மாநாடுகளில் கலந்து கொண்ட போராளிகள் கூறுகின்றனர். 

    மு.கா.வின் அநேக தேசிய மாநாடுகளை அப்போதிருக்கின்ற தவிசாளர்களே தலைமை தாங்கி நடாத்தியுள்ளனர். மாநாட்டில் மிக முக்கிய அம்சமாக தீர்மானம் எடுக்கும் அல்லது பிரகடனம் செய்யும் நிகழ்வுகள் இடம்பெறும். ஒவ்வொரு தீர்மானமாக தலைவர் மேடையில் இருந்து அறிவிக்க அதனை 'அல்லாஹுஅக்பர்!' என்று கையுயர்த்தி சொல்லி ஆதரவாளர்கள் ஆமோதிப்பார்கள். தீர்மானம் எடுத்தல் இதுபோல வேறு முறைகளிலும் இடம்பெறலாம். சிலவேளைகளில், மாநாட்டில் என்ன தீர்மானம் எடுக்கப்படப் போகின்றது என்பது பற்றி அல்லது அங்கு எவ்விடயம் முன்னுரிமைப்படுத்தப்படப் போகின்றது என்பது பற்றி முன்கூட்டியே போராளிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கும். முஸ்லிம்களின் அரசியல் விடுதலை இயக்கமாக உருவாகி பின்னர் ஒரு அரசியல் கட்சியாக பரிணாமம் எடுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அநேகமான தேசிய மாநாடுகள் இந்த சாதனைகளோடுதான் நடந்தேறியிருக்கின்றன. 

    இம்முறை பாலமுனையில் நடைபெற்ற தேசிய மாநாடும் கிட்டத்தட்ட இந்த பண்பியல்புகளோடு இருக்குமென்று மக்கள் வெகுவாக எதிர்பார்த்திருந்தனர். நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியதில் சிறுபான்மையினருக்கு குறிப்பிடத்தக்க பங்கிருக்கின்றது என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் அபிலாஷைகளில் அரசாங்கம் அக்கறை கொண்டு செயற்படுகின்றது. புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. உத்தேச அரசியலமைப்பே இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை கொண்டு வரப்போகின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு எனும்போது, வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைந்த தீர்வுப் பொதியை பெறுவதில் தமிழர்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்நிலையில், இதுபற்றி விரிவான கலந்துரையாடல்கள் சிவில் சமூகத்திற்குள் முன்னமே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மு.கா.வுக்குள் முரண்பட்டிருக்கின்ற தவிசாளர் பசீர் சேகுதாவூத், செயலாளர் ஹசன்அலி ஆகியோர் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் பற்றி வலியுறுத்தி வருகின்ற போதிலும் கூட முஸ்லிம்களின் பிரதான கட்சியான மு.கா. தனது தெளிவான நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக முன்வைக்கவில்லை. இதற்கப்பால், முஸ்லிம்களின் சிவில் பிரச்சினைகள் பலவும் தீர்க்கப்படாது கிடப்பில் கிடக்கின்றன. 

    மக்களின் மனக்கோட்டை
    இவ்வாறான ஒரு பின்புலத்தில் இத் தேசிய மாநாடு இடம்பெற்றதால், வழக்கத்தை விடவும் அதிகப்படியான மனக்கோட்டைகளை மக்கள் கட்டியிருந்தனர். மு.கா. தலைவர் இந்த மாநாட்டை பயன்படுத்தி தன்னுடைய சாணக்கியத்தை மீள நிரூபித்துக் காட்டுவார் என்று எண்ணியிருந்தனர். மக்கள் மட்டுமன்றி அரசாங்கமும், தமிழர் தரப்பும் இந்தியா போன்ற நாடுகளும் இந்நிகழ்வை அவதானித்துக் கொண்டிருந்தன. இந்நிகழ்வில், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பல தமிழ் சிங்கள அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர். ஆனால் இங்கு என்ன நடந்தது?...

    மறைந்த ஸ்தாபக தலைவர் அஷ்ரஃபுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி கூட செலுத்தவதற்கு அவகாசமின்றி 'ஆயிரம் விளக்கு' எழுச்சிப் பாடலுடன் மாநாடு ஆரம்பமானது. இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற இம்மாநாட்டில் முதலாவது அமர்வில் ஜனாதிபதியும் பிரதமரும் மேடையில் இருந்தனர். பின்னேர அமர்வுக்கு முன்னர் அவர்கள் விடைபெற்றுச் சென்றிருந்தனர். இவ்விரு அமர்வுகளிலும் மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் உரை நிகழ்த்தினார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் பார்வையாளர்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர். முதலாவது அமர்விலான அவரது உரையில் தனியே முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பற்றி பிரத்தியேகமாக எதையும் அவர் குறிப்பிடவில்லை. முஸ்லிம்களின் பிரச்சினை என்ன? அவர்களுக்கு என்ன தேவை? அரசியலமைப்பிலும் இனப்பிரச்சினை தீர்விலும் அவர்களுடைய வகிபாகம் எதுவாக இருக்க வேண்டும் என்ற எந்த நிலைப்பாட்டையும் மு.கா. தலைமை வெளிப்படுத்தவில்லை. தான் ஒரு தேசியவாதி என்ற தோற்றப்பாடு சிதைந்துவிடாமலும், யாருக்கும் நோகாமலும் அவர் உரையாற்றுவதில் கவனம் செலுத்தினார். தலைவர் சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்துகின்றார் என்று மக்கள் நினைக்க வேண்டும் ஆனால் அரசாங்கமோ மற்றைய தரப்பினரோ சீரியஸாக நினைக்கும் எதுவும் அதில் இருக்கக் கூடாது என்பது போல இருந்தது அவர் பேசிய மழுப்பலான, தொக்குநிக்கும் வசனங்கள். 

    தமிழிலான அவரது உரையில், 'நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட்டு, புதியதோர் அரசியல் யாப்பை உருவாக்குகின்ற சந்தர்ப்பத்தில் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்கள் வேண்டிநிற்கின்ற ஒரு கௌரவமான தீர்வு, இனப் பிரச்சினைக்கான தீர்வு என்று வருகின்ற போது அந்த தீர்வை உச்சக்கட்ட விட்டுக் கொடுப்போடு தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்கள மக்களின் அபிலாஷைகளையும் சரிவர புரிந்து கொண்டவர்களாக ஆனால் வீண் பிரச்சாரங்கள் விசமத்தனமான போராட்டங்கள் இவற்றை தெற்கிலே உருவாக்க எத்தனிக்கின்ற சக்திகளை முறியடிக்கின்ற பாங்கில் மிக லாவகமாக, பல தசாப்தகாலமாக சிறுபான்மை சமூகங்களின் போராட்டத்தை முன்னிலையில் நின்று போராடிய (?) ஒரு தலைவர் என்ற அடிப்படையில் இங்கிருக்கின்ற எல்லா சிறுபான்மை தலைமைகளையும் ஒன்றிணைத்து சகலருக்கும் நீதி நியாயம் கிடைக்கக் கூடிய ஒரு தீர்வை பெற்றுத் தருவதில் நீங்கள் முன்னின்று பங்களிப்புச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது....' என்று, முற்றுப்புள்ளிகள் இல்லாத தெளிவற்ற நீண்ட வசனங்களில் பிடிகொடுக்காமல் வழக்கம் போல ஹக்கீம் உரையாற்றினார். ஆனால், சிறுபான்மை இனங்களில் ஒன்றான முஸ்லிம்கள் வேண்டிநிற்கின்ற தீர்வு என்னவென்று அவர் எவ்விடத்திலும் குறிப்பிட்டதாக தெரியவில்லை. 

    சொல்ல மறந்த கதை
    இது ஒரு முக்கியமான மேடை. இந்த மேடையில் இருந்தவர்கள் நாட்டின் அரசியலின் முதுகெலும்புகள். எனவே, ஒரு சமூகத்தின் அரசியல் தலைமை என்ற வகையில் ஹக்கீம் என்ன செய்திருக்க வேண்டும்? வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வாழும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் என்னவென்று தெளிவுற இங்கு குறிப்பிட்டிருக்க வேண்டும். முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள், எல்லை விவகாரங்கள், ஒலுவில் காணி விவகாரம், சுனாமி வீட்டுத்திட்ட பகிர்ந்தளிப்பு, மீள்குடியேற்றம் உள்ளடங்கலான சிவில் பிரச்சினைகள் குறித்து இங்கு பிரஸ்தாபித்திருக்க வேண்டும். உத்தேச அரசியலமைப்பின் ஊடாக முஸ்லிம்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். 

    குறிப்பாக தீர்வுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படுமாக இருந்தால் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கும் தனிமாகாண அலகு போன்ற தீர்வொன்று வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்று மக்கள் முன்னிலையில் கோரியிருக்கலாம். இது தமிழர்களின் உரிமையில் பங்குகேட்பதாக அமையமாட்டாது. எனவே இதனை சம்பந்தன் ஐயா தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென கோரியிருக்கலாம். அதேபோல் தமிழர்களும் முஸ்லிம்களும் தீர்வுத் திட்டம் என்ற பெயரில் கேட்பது தனிநாடு அல்ல என்பதை இங்கு வந்திருக்கின்ற பெரும்பான்மை அரசியல்வாதிகள் நாட்டுக்கு விளங்கப்படுத்த வேண்டுமென கோரியிருக்கலாம். இப்படி நிறைய காரியங்களை செய்திருக்க வாய்ப்பிருந்தும் மு.கா. அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. எதையெல்லாம் செய்ய முடியும் என்பது அக் கட்சியின் தலைவரான றவூப் ஹக்கீமுக்கு நம்மைவிட நன்றாகவே தெரிந்திருந்தும் அவர் வசதியாக மறந்துவிட்டிருந்தார். 

    சரி, இரண்டாவது அமர்விலாவது ஏதாவது காத்திரமாக எதையாவது பேசுவார் என்று நினைத்தால், ஒரு தேர்தல் கூட்டத்தில் எதிர்க்கட்சிக் காரனை போட்டுத்தாக்குவது போல சிலரை குறிவைத்து தாக்கினார் ஹக்கீம். மாநாட்டுக்கு வந்து போயிருந்த தவிசாளாரும், வராமல் பகிஷ்கரித்த செயலாளரும் இதற்கு இலக்காகினர். முரண்பாடுகளை கட்சிக்குள்ளே பேசி;த் தீர்க்கலாம் என்று கூறிவிட்டு, அவரே அவ்விடயங்களை சாடைமாடையாக மேடையில் பேசினார். குள்ளநரிகள், குறுநில மன்னர்கள், கட்சியின் ஆடையுடுத்தி வந்து நாடகமாடுவோர்களை பற்றியெல்லாம் பேசினார். ஆனாலும் பேச வேண்டியதை அவர் பேசவில்லை. ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முஸ்லிம்களின் வகிபாகத்தை பற்றி குறிப்பிடுவதற்கும் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவதற்கும் முஸ்லிம் காங்கிரஸ் அமைத்த இந்த மேடையைப் பயன்படுத்தியது, ஒரு சாட்டை அடியாகும். 

    தேசிய மாநாட்டில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை எடுத்துரைந்திருந்தால், சிலவேளை அதற்கான ஒரு சிறு பதிலையேனும் ஜனாதிபதி, பிரமதர், அல்லது எதிர்க்கட்சி தலைவர் வழங்கியிருப்பார்கள். அல்லது சாதகமான சமிக்கையை வெளிப்படுத்தியிருப்பார்கள். அது வரலாற்றில் பதியப்பட்டிருக்கும். உலகமே அதற்கு சாட்சியாகவும் இருந்திருக்கும். ஆனால், அது இடம்பெறவில்லை. இதேவேளை, இம்மாநாட்டில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாமை கவனிக்கப்பட வேண்டிய இன்னுமொரு விடயமாகும்.

    தீர்மானங்களும் இல்லை
    பாலமுனை மாநாடு இடம்பெறுவதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்த மு.கா. தலைவர், 'இம் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் கொள்கைப் பிரகடனம் செய்யப்படும்' என்று சொல்லியிருந்தார். இருப்பினும், பாடலிசை, நடனம், எழுச்சிப் பாடல் என மேடையை அழகுபடுத்திய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் உயர்பீட உறுப்பினர்களும், மாநாட்டின் அடிநாதமாக கருதப்படும் தீர்மானங்கள் எதையும் மேற்கொள்ளாமலேயே மாநாட்டை முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர். தலைவரின் அசைவுகளை அறிந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்த போது, 'தவிசாளர் பசீர் சேகுதாவூத் வந்ததை கண்டு தலைவர் டென்சன் ஆகிவிட்டார் போல தெரிகின்றது' என்று கூறினர். ஆனால், தளபதிகளாவது இதை தலைவருக்கு எடுத்துச் சொல்லி, தீர்மானங்கள் மேற்கொள்ளும் ஏற்பாட்டை செய்யவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. 

    இவ்வாறுதான் முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாடு இடம்பெற்றிருக்கின்றது. இத்தனை குறைபாடுகளோடு நடைபெற்ற மாநாடு 'வெற்றி வெற்றி' என்று ஒரு தரப்பு புளகாங்கிதம் கொள்வதை காண முடிகின்றது. பௌதீக ரீதியாக, வெளித்தோற்றத்தில் பார்க்கின்ற போது இது ஒரு வெற்றிகரமான நிகழ்வாக தெரிந்தாலும், இந்த மாநாடு உண்மையான மாநாடாக அமைந்ததா? என்பதை மு.கா. சுய விசாரணை செய்ய வேண்டும். இம் மாநாடு வெற்றி என்றால், முஸ்லிம் காங்கிரஸ் நடாத்துவதற்கு எதிர்பார்த்த மாநாட்டின் இலக்கு இதுதானா? என்ற கேள்வியும் எழுகின்றது. 

    இந்த மாநாட்டில், உண்மையில் சாதனைகள், வெற்றிகள் என்று சொல்வதற்கும் சில விடயங்கள் உள்ளதை மறந்து விட முடியாது. பாலமுனை மாநாட்டுக்கு முன்னர் கட்சிக்கு உள்ளும் புறமும் இருந்து பல அழுத்தங்கள், சர்ச்சைகளுக்கு மத்தியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல மு.கா. தலைவர் இம்மாநாட்டை நடாத்திக் காட்டினார். அது ஒரு சாதனை. என்றுமில்லாதவாறு பல மில்லியன் ரூபா செலவில் பிரமாண்டமான மாநாடு நடத்தியது ஒரு சாதனை. கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளடங்கலாக நாட்டின் மிக முக்கிய அரசியல்வாதிகளை அழைத்து வந்தமை மிக முக்கிய வெற்றி. இப்படி சில சாதனைகளும் வெற்றிகளும் இருக்கின்றன. 

    என்னதான் இருப்பினும், இத்தனை ஆயிரம் ஆதரவாளர்கள், போராhளிகள், நூற்றுக்கணக்கான உயர்பீட உறுப்பினர்கள் எல்லோரையும் அரங்கில் வைத்துக் கொண்டு, ஒரு நிகழ்வை நடாத்தி, அதில் முஸ்லிம்களின் பிரச்;சினைகளை, அபிலாஷைகளை எடுத்துரைக்காமல் விட்டதன் மூலம் ஒரு வரலாற்று தவறை நிகழ்த்தியதை மேற்சொன்ன சாதனைகளால் ஈடு செய்ய முடியாது. பாலமுனையில் கிடைத்தது ஒரு அற்புதமான வாய்ப்பு. பால் நழுவி பாலில் விழும் நேரமாகப் பார்த்து பாத்திரத்தை தட்டி வீழ்த்தியது மிக பின்தங்கிய அரசியலாகும். 

    மு.கா.வின் தேசிய மாநாடுகள் பல வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிலைமையே இப்போது இருக்கின்றது. இந்நிலையில், ஒரு தேசிய நிகழ்வில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியாளர்களை முஸ்லிம் மக்களின் முன் அமரச் செய்து, அம்மக்களின் மனக்கிடக்கைகளை முன்வைக்கக் கூடிய இன்னுமொரு சந்தர்ப்பம் மிகக் கிட்டிய காலத்தில் கிடைக்குமா என்பது சந்தேகமே. இப்படித்தான், கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தாமல் தவற விட்டுவிட்டு, பின்பு எல்லாம் கைமீறிப் போன பிற்பாடு தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பது  இலங்கை முஸ்லிம்களுக்கு புதிய அனுபவமல்லவே. 

    'ஆயிரம் விளக்குகள்' அல்ல அலாவுதீனின் அற்புத விளக்குத்தான் நம்மிடம் கிடைத்தாலும், அதிலிருந்து கிடைக்கக் கூடியதைக் கூட பெற்றுக் கொடுத்து, இச் சமூகத்திற்கு விடிவுகாலத்தை ஏற்படுத்துவதற்கு லாயக்கற்றதாக ஆகிப் போனது நமது அரசியல்.
     (வீரகேசரி 26.03.2016)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாநாட்டின் 'சாதனைகள்' Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top