• Latest News

    November 14, 2017

    ஈரான் - இராக் எல்லையில் நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி 400 பேர் பலி


    ஈரான் - இராக் எல்லையில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 400 பேர் பலியாயினர். மேலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    ஈரான் - இராக் எல்லையோரம் ஹலாப்ஜா என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் இரு நாட்டு எல்லையோரம் உள்ள பல கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகும் நில அதிர்வுகள் நேற்று காலை வரை தொடர்ந்து கொண்டே இருந்தன. இதனால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, ‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை நில அதிர்வுகள் தொடர்ந்தன. இராக்கின் வடக்கில் குர்திஸ் பகுதியில் உள்ள சுலைமானியா நகரின் தென்கிழக்குப் பகுதியில் ஹலாப்ஜா என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது’’ என்று உறுதிப்படுத்தியது.
    இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு குவைத், துபாய், பாகிஸ்தான் பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஈரான் நாட்டின் சர்போர்-இ-சஹாப் நகரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இராக்கில் 7 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
    நிலநடுக்க பாதிப்பு உள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பகுதியில் அவசர நிலையை சுலைமானியா அதிகாரிகள் பிரகடனப்படுத்தினர்.
    கடந்த 2003-ம் ஆண்டு ஈரானில் 6.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வரலாற்றுச் சிறப்புமிக்க பாம் நகரம் முற்றிலும் சேதம் அடைந்தது. இதில் 26 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    இராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து செய்திகளை வெளியிட்டு வரும் அல் ஜஸீரா நிருபர் இம்ரான் கான் கூறும்போது, ‘‘வழக்கமாக பாக்தாத் நகரம் நிலநடுக்கத்துக்குட்பட்ட பகுதிகளில் வரவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் பாதிப்பு உணரப்பட்டது. முதலில் வெடிகுண்டுதான் வெடித்து சிதறியது என்று எண்ணினேன். சில விநாடிகளுக்குப் பிறகுதான் நிலநடுக்கம் என்பதை உணர்ந்தேன். வீதிகளுக்கு ஓடிவந்த மக்கள் முகத்திலும் நிலநடுக்கத்தின் பீதி இருந்தது’’ என்றார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஈரான் - இராக் எல்லையில் நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி 400 பேர் பலி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top