• Latest News

    November 15, 2017

    கோபால் எழுதிய “பிரபஞ்சமும் வாழ்வியலும்” நூல் வெளியீட்டு விழா

    - ஆர். மூர்த்தி -
     மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுதிய “பிரபஞ்சமும் வாழ்வியலும்” நூல் வெளியீட்டு விழா அண்மையில்  மட்டக்களப்பு தேவநாயகம் அரங்கில் நடைபெற்றது. தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் முன்னிலை வகிப்போர் என்ற வரிசையில் கிழக்கு பல்கலைக் கழகத்தின் முன்னாள் பீடாதிபதி மா.செல்வராஜா, சிரேஷ்ட சட்டத்தரணி க.நாராயணபிள்ளை, மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் தேசபந்து மு.செல்வராசா மற்றும் முதன்மை அதிதிகளாக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
    முதல் பிரதிபெறும் அதிதியாக மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் தேசகீர்த்தி, சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி கலந்து கொண்டு முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தலைமையுரையை ஆற்றி சட்டத்தரணி மு.கணேசராசா தனதுரையில் நூல் ஆசிரியரான கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்கள் மட்டக்களப்பின் பரந்த நிலப்பகுதியான படுவான்கரைப் பிரதேசத்தில் வெல்லாவெளி எனும் பழம்பெரும் கிராமத்தில் பிறந்து ஒரு மரபுக்கவிஞராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் பின்னர் வரலாற்று ஆய்வாசிரியராக பரிணமித்து தற்போது “பிரபஞ்சமும் வாழ்வியலும்” எனும் அவரின் 20தாவது நூலின் மூலம் தத்துவாத்த எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இவரை சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருப்பது இந்த மண்ணில் பிறந்த அனைவருக்கும் பெருமை எனக் குறிப்பிட்டார்.
    ஏற்புரையினை நிகழ்த்திய நூலாசிரியர் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்கள் தனது படைப்புக்களுக்கு எமது  மக்கள் வழங்குகின்ற மதிப்பினை விட வெளிநாடுகளில் அதிக மதிப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக அமெரிக்காவில் 7 பல்கலைக்கழகங்களில் தனது 5 நூல்களை வரலாற்று ஆய்வு கற்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் குணசிங்கனின் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பிற்கு வருகைதந்து மண்முனை எனும் சிற்றரசினை உருவாக்கி ஆட்சிசெய்த கலிங்க இளவரசி உலகநாச்சியும், சிங்கள மக்களிடையே பேசப்படுகின்ற கலிங்க நாட்டு இளவரசி ஹேமமாலாவும் ஒருவரையே குறிப்பதாக தனது ஆய்வில் குறிப்பிட்ட விடயத்தினை அமெரிக்க கலிபோனியா பல்கலைக்கழகம் மேலும் விரிவுபடுத்தி ஆய்வு செய்யவுள்ளதாகவும் அவ்வாய்விற்கு தன்னை உதவ வேண்டுமென அப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் தன்னைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடடார். இதுபோன்று தனது “மட்டக்களப்புத் தேசமும் வரலாறும் வழக்காறும்” எனும் நூலினை தமது ஆய்வு நடவடிக்கைகளுக்காகவும், ஏனைய பயன்பாட்டிற்காகவும் 10 வருடங்களுக்கு உரிமை ஒப்பந்தமொன்றை அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிறுவனம் ஒன்று பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நமது வரலாற்றிக்கு நமது மக்கள் காட்டும் கரிசரணையை விட வெளிநாட்டு மக்கள் அதிக கரிசரணை காட்டுகின்றார்கள்; எனத் தெரிவித்தார்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கோபால் எழுதிய “பிரபஞ்சமும் வாழ்வியலும்” நூல் வெளியீட்டு விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top