• Latest News

    September 28, 2019

    ஊடகத்தின் முக்கியத்துவத்தினை சர்வதேச தலைவர்கள் உணர்ந்ததுபோன்று எமது தலைவர்களும் உணர்வார்களா ?

    இஸ்லாத்தை பற்றிய உண்மைகளை உலக மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக ஆங்கில தொலைக்காட்சி அலைவரிசையினை ஆரம்பிக்க மூன்று இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் எடுத்த தீர்மானமானது உலக இஸ்லாமிய மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
    உலகம் முழுவதிலும் இஸ்லாத்துக்கு எதிராக போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற சர்வதேச யூத சார்புடைய ஊடகங்களின் பிரச்சாரத்தினை முறியடிப்பதே இதன் நோக்கமாகும்.
    துருக்கி, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளின் தலைவர்களான முறையே எர்டோகான், இம்ரான்கான், மஹதீர் முஹமத் ஆகிய மூன்று தலைவர்களும் இஸ்லாத்தின் மீதுள்ள பற்றுதலையும், ஊடகத்தின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தது போன்று இஸ்லாம் பிறந்த மண்ணில் உள்ள தலைவர்கள் உணரவில்லை.  
    நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் இஸ்லாத்தை பற்றி தவறான கருத்துக்களை பரப்புவது மட்டுமல்லாது முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணமுள்ளன.
    உலகில் பல நாடுகளில் பெரும்பான்மை அரசுகளினால் அடக்கப்பட்டு உரிமை இழந்த முஸ்லிம்கள் தங்களது உரிமைக்காகவும், ஒடுக்கப்பட்ட விலங்கினை உடைத்தெறிய போராடுகின்ற அனைத்து இஸ்லாமிய போராட்ட இயக்கங்களும் பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்படுகின்றன.  
    அத்துடன் உலக வல்லரசுகளுக்கு அடிமைப்பட்டு இஸ்லாத்துக்கு முரணாக ஆட்சி செய்கின்ற பொம்மை ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க முயற்சிக்கின்ற போராளிகளும் பயங்கரவாதிகளாகவே காண்பிக்கப்படுகின்றார்கள்.
    இந்த செயல்பாடுகளை சர்வதேச பிரபலமான ஊடகங்கள் மிகவும் தந்திரமாகவும், மதிநுட்பமாகவும் செயலாற்றி வருகின்றது.
    சில நாடுகளில் தங்களது கைகளைக் கொண்டு தங்களது கண்களை குத்துவது போன்று எம்மவர்களைக் கொண்டே எமது சமூகத்தினர்கள் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் கொலை செய்யப்பட்டு வருகின்றார்கள்.  
    இன்று சர்வதேச ரீதியில் இயங்குகின்ற ஒவ்வொரு ஊடகங்களும் ஏதோ ஒருவகையில் தங்கள் இனத்துக்காகவும், மொழிக்காகவும், சமயத்துக்காகவும், இயங்கி வருவதுடன்,. இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தினையும், முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றன.  
    அந்தவகையில் ராய்டர், CNN, BBC போன்ற சர்வதேச ஊடகங்கள் அமெரிக்க வல்லாதிக்கத்தையும், யூத பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்துவதோடு இஸ்லாமிய போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதிலும், இஸ்லாமிய உலகை தொடர்ந்து பிளவுபடுத்தி வைத்திருப்பதிலும் கவனமாக செயல்படுகின்றன.
    இவ்வாறான செயல்பாடுகளை முறியடித்து உண்மையை உலகுக்கு எடுத்துக் கூறும் பொருட்டு மூன்று தலைவர்களின் சிந்தனையில் இது உருவானதற்கு அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி செலுத்த வேண்டும். அத்துடன் இந்த முயற்சிக்கு யூதர்களின் இடையூறுகள் வரமாட்டாது என்று எதிர்பார்க்கவும் முடியாது.  
    அதுபோன்று எமது நாட்டிலும் முஸ்லிம் சமூகத்துக்கு உள்ள பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் எடுத்துக் கூறும் விதத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் முஸ்லிம்களின் குரலாக செயல்படுகின்ற ஊடகம் ஒன்று மிகவும் அவசியமானது.  
    எமது சமூகத்தில் எத்தனையோ பணம் படைத்தவர்கள், அரசியல் தலைவர்கள் இருந்தும் இவ்வாறான விடயங்களில் ஆர்வம் காட்டாதது கவலையான விடயமாகும்.
    எனவே ஊடகத்தின் முக்கியத்துவத்தினை உலக தலைவர்கள் உணர்ந்தது போன்று எமது நாட்டில் உள்ள தலைவர்களும், பணம் படைத்தவர்களும் உணரவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். 

    முகம்மத் இக்பால்-
    சாய்ந்தமருது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊடகத்தின் முக்கியத்துவத்தினை சர்வதேச தலைவர்கள் உணர்ந்ததுபோன்று எமது தலைவர்களும் உணர்வார்களா ? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top