• Latest News

    November 03, 2019

    யார் வெற்றி பெறக் கூடாது?

    ஸ்.றிபான் -
    ஜனாதிபதித் தேர்தலுக்குரிய பிரச்சாரங்கள் சூடுபிடித்துக் கொண்டிருக்கின்றன. தான் வெற்றி பெற்றால் இலங்கையை சுவிட்சமானதும், பாதுகாப்பானதுமான நாடாக மாற்றுவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவித்துக் கொண்டாலும், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் வாய்ப்பு புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவரில் ஒருவருக்கே இருக்கின்றது. இந்த இருவரில் யார் வெற்றி பெற்றாலும் பௌத்த மேலாதிக்கவாதிகளின் ஆதிக்கம் மேலும் அதிகரித்து சிறுபான்மை மக்களின் வாழ்வியலில் நெருக்கடிகளை ஏற்படுத்திவிடுமோ என்று தமிழர்களும், முஸ்லிம்களும் கவலையுடனே ஜனாதிபதித் தேர்தலை எதிர் கொண்டிருக்கின்றார்கள். 

    இவ்விரண்டு வேட்பாளர்களும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சிறுபான்மைக் கட்சிகளுடன் உடன்படிக்கைளை செய்து கொள்ளவோ அல்லது பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஏற்றுக் கொள்வதற்கோ தயாரில்லாத நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே பேரினவாதக் கட்சிகள் யாவும் இந்த முடிவில் இருந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளர்களின் இந்த முடிவால் சிறுபான்மைக் கட்சிகள் என்ன செய்வதென்ற குழப்பத்தில் உள்ளன. குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பே மிகப் பெரிய குழப்பத்தில் உள்ளது. முஸ்லிம் கட்சிகளை பொறுத்த வரை உடன்படிக்கைகளை செய்வது என்பதோ, நிபந்தனைகளையோ விதிப்பது என்பதோ பெரிய விவகாரமில்லை. ஏனெனில், முஸ்லிம் கட்சிகள் அரசியல் உரிமை என்ற பேரில்; ஒரு இணக்க அரசியலையே மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களின் அரசியல் இவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கின்ற பின்னணியில் முஸ்லிம்களின் வாக்குகளை இலக்கு வைத்து யாரோ ஒரு வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்காக ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கோசத்துடன் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் களத்திற் குதித்துள்ளார்.

    பௌத்த மேலாதிக்கம்
    இலங்கையின் அரசியலை எடுத்துக் கொண்டால், பௌத்த மேலாதிக்க கடும்போக்காளர்களின் ஆதிக்கம் தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கின்றது. பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக பேரினவாத அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பௌத்த மேலாதிக்க கடும்போக்குவாத தேரர்களுடனும், அத்தகைய அமைப்புக்களுடனும் உறவுகளை வைத்துச் செயற்பட்டுள்ளமையை காண முடியும். இந்த அமைப்புக்கள் மூலமாக வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே அந்த அமைப்புகளின் கொள்கைகளை அமுல்படுத்துகின்றவர்களாக ஆட்சியாளர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். பேரினவாத அரசியல்வாதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக பௌத்த மேலாதிக்க கடும்போக்காளர்களுடன் ஆட்சியாளர்கள் உறவுகளை பேணி வந்தமையால்தான் இன்று சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லிம்களின் வாழ்விடங்களையும் தாக்கி அழிப்பதற்கும் துணிந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களை பாதுகாத்து ஊக்கப்படுத்துகின்றவர்களாக ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.

    ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடன் செயற்பட்ட பௌத்த மேலாதிக்க கடும் போக்கு தேரர்களும், அமைப்புக்களும் தற்போது தங்களுக்கு என ஒரு வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு ஆட்சியாளர்களுக்கு மூக்கனாங் கயிறு போட்டு இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர்  பௌத்த மேலாதிக்க கடும்போக்காளர்கள் பல தடவைகள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பொது பலசேனவின் தோற்றத்தின் பின்னரே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. ஜாதிக ஹெல உறுமய எனும் கட்சி பௌத்த மேலாதிக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் உருவாக்கப்பட்டது. இன்று இனவாதம் பேசும் சம்பிக்க ரணவக்க, கலகொட அத்த ஞானசார தேரர், உதயன்கம்மன்வில, அத்துரலிய ரதன் தேரர் போன்றவர்கள் இந்தக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்கள். ஜாதிக ஹெல உறுமய மிதவாத போக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றுதான் அதிலிருந்து பிரிந்து ஞானசார தேரர் போன்றவர்கள் பொது பல சேனவை ஆரம்பித்தார்கள். பொது பல சேன பௌத்த மதத்தை பாதுகாக்கும் அமைப்பு என்று தம்மை அறிமுகம் செய்து கொண்டது. ஆனாலும், அதன் அனைத்து நடவடிக்கைகளும் பௌத்த தர்மத்திற்கு மாற்றமாகவே இருக்கின்றது. முஸ்லிம்களின் மதம், உடை, உரிமை போன்ற விடயங்களில் ஜனநாயகத்திற்கு மாற்றமாக மூக்கை நுளைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது போதாதென்று அத்துரலிய ரத்ன தேரர் தனி நபராக பௌத்த மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

    மேலும், பிரதான பேரினவாத அரசியல் கட்சிகளில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகளும பௌத்த மேலாதிக்க எண்ணத்தைக் கொண்டுள்ளர்hகள். இவர்கள் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக இனவாத்தை கையில் எடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
    இவ்வாறு பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக இனவாத போக்குடைய தேரர்களும், அரசியல்வாதிகளும் செயற்பட்டுக் கொண்டிருப்பதனை எந்தவொரு அரசாங்கமும் கண்டிக்கவில்லை. அவர்களை தண்டிக்கவுமில்லை. சட்;டமும், ஒழுங்கும், பாதுகாப்பு தரப்புக்களும் பௌத்த மேலாதிக்க இனவாத போக்குடையவர்களை பாதுகாக்கும் பாசறையாகவே; இருந்து வருகின்றன. ஆதலால், ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பௌத்த மேலாதிக்க இனவாதிகளின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு வருமென்று நமபிக்கை வைக்க முடியாதுள்ளது. அதனால், யார் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு குறைந்த பாதிப்பு ஏற்படும் என்று கணித்தே வாக்களிக்க வேண்டும்.

    வெற்றி வாய்ப்பைக் கொண்டுள்ளவர்களாக சஜித் பிரேமதாஸவும், கோத்தபாய ராஜபக்ஷவும் உள்ளார்கள். இந்த இரு வேட்பாளர்களின் பின்னாலும் பௌத்த மேலாதிக்கவாதிகள் உள்ளார்கள். பௌத்த இனவாத மேலாதிக்கத்தை முதலில் போதித்தவர் அநாகரிக்க தர்மபால ஆவார். இவரது கருத்துக்களுடன் உடன்படும் ஒருவராகவே சம்பிக்க ரணவக்க உள்ளார். இவர் அல் - ஹைதா, அல் - ஜிஹாத் எனும் நூலை எழுதி முஸ்லிம்களின் மீது பலத்த சந்தேகங்களை முன் வைத்துள்ளார். இந்த நாடு பௌத்தர்களுக்கு மாத்திரமே சொந்தம் என்று உரிமை கோரும் ஒருவராக இருக்கின்றார். அதே வேளை, ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னரும், அதற்கு முன்னரும் முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் மிக மோசமான கருத்துக்களை முன் வைத்த அத்துரலிய ரத்ன தேரர், உதயன் கம்மன்வில, விமல்வீரவன்ச, எஸ்.பி.திஸாநாயக்க, கருணா அம்மான், வியாழேந்திரன் போன்றவர்கள் கோத்தாவுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த கூட்டல், கழித்தலை வைத்துக் கொண்டுதான் முஸ்லிம்கள் விடை காண வேண்டும். அதாவது, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் பௌத்த மேலாதிக்கம் தணியாது என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால், சிறுபான்மையினர் வெற்றி வாய்ப்புள்ள ஒருவருக்கு வாக்களிப்பதா அல்லது தங்கள் இனத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதா என்ற முடிவினை எடுத்துக் கொள்வதில் முஸ்லிம்களிடையே இன்னும் சரியான முடிவு எடுக்கப்படவில்லை. இதே வேளை, சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால்தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்று ஒரு சில முஸ்லிம் தலைவர்களும், கோத்தபாய வெற்றி பெற்றால்தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்று இன்னும் சில அரசியல் தலைவர்களும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். யார் வந்தாலும் தமது நிலை இதுதான் என்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடாகும்.

    ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினரின் வாக்குகள் அமைய இருக்கின்றன. அதனால், சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். என்றாலும், அவர்கள் சிறுபான்மைக் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, ஜனாதிபதியை தீர்மானிக்கும் வாக்குகளாக பௌத்த இனவாத அமைப்புக்களினதும், தேரர்களினதும் கருத்துக்களினால் கவரப்பட்டுள்ள வாக்காளர்களின் வாக்குகளும் அமைய இருக்கின்றன. இதனால்தான் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸவும், கோத்தபாய ராஜபக்ஷவும் சிறுபான்மையினரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். பௌத்த இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக சிறுபான்மைக் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென்று தெரிவித்துக் கொண்டு, சிறுபான்மையினரிடம் நிபந்தனையில்லா ஆதரவை வேண்டுகின்றார்கள். இந்நிலை எதிர்காலத்தில் மிகப் பெரிய அபாய அறிவிப்பாகும்.

    ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளர்
    இந்த அபாயம் முஸ்லிம்களின் முன்னிலையில் இருக்கின்ற நிலையில்தான் முஸ்லிம்களின் இரண்டரை இலட்சம் வாக்குகளை தருமாறு ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம்களிடம் கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்.

    அது மட்டுமன்றி தான் வெற்றி பெறும் வேட்பாளருமில்லை. ஆனால், ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளர் என்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். அதாவது, தனக்கு வாக்களிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் தனக்கு முதலாவது வாக்கை அளிப்பதோடு, இரண்டாவது விருப்பு வாக்கை வெற்றி வாய்ப்புள்ள, தாம் தெரிவிக்கும் மற்றுமொரு வேட்பபாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். அதனை தாம் செய்யப்போவதில்லை, அதனை சிவில் சமூகத்தினர் தெரிவிப்பார்கள் என்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
    ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் நமது கனவு எனும் பெயரில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். அதில் முஸ்லிம்களின் சரிஆப் பிரச்சினை, முஸ்லிம்களின் தனியார் சட்டம் பற்றியும், முஸ்லிம்களின் வேறு பிரச்சினைகளையும் அடையாளப்படுத்தியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை யாவும் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்தை எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைவர்களினாலும் முன் வைக்க முடியாது.

    இங்கு பிரச்சினை முஸ்லிம்களை பிரச்சினைகளை அடையாளப்படுத்தியதல்ல. மாறாக அப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்று ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி வேட்பாளர்கள் சஜித் பிரேமதாஸவிடமோ அல்லது கோத்தபாய ராஜபக்ஷவிடமோ முன் வைக்கும் போது அவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் பிரச்சினையாகும். மேற்படி இரண்டு வேட்பாளர்களும் பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளை பெரும்பான்மையாகப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் மிகக் கவனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பௌத்த மதத்தையும், நாட்டையும் பாதுகாப்போம் என்றும், அதற்கான உத்தரவாதங்களையும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், எந்தவொரு அரசியல் கட்சியினதோ அல்லது தனி நபர்களினதோ நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம். மூவின மக்களும் நிம்தியாக வாழும் சூழலை ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேட்பாளர்கள் ஹிஸ்புல்லாஹ் நமது கனவில் உள்ள கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று ஒரு போதும் நம்ப முடியாது. இத்தகைய கோரிக்ககைகளை ஏற்றுக் கொள்ளும் போது, பௌத்த மேலாதிக்க இனவாதிகள் இனவாத பிரச்சாரங்களை மேற்கெண்டு பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளை இல்லாமல் செய்திடுவார்கள் என்று இரு வேட்பாளர்களும் அச்சங் கொள்கின்றாhகள். ஆதலால், தனது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கு சிவில் சமூகத்தின் ஊடாக இரண்டாவது விருப்பு வாக்கை வழங்குவது என்பது மிகுந்த சிக்கல்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி, பிரயோசனமற்றதாகவும் மாறிவிடும்.

    மேலும், 35 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டிடுகின்றார்கள். அவர்களுக்கு போட்டியிடும் உரிமையுள்ள போதிலும், தாம் தோற்பது நிச்சயம் என்று தெரிந்து கொண்டும், நாட்டில் இனவாத போக்கும், அதன் கொரூரமும் அரங்கேறி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில முஸ்லிம் வாக்குகளை மாத்திரம் வேண்டி நிற்பது பௌத்த சிங்கள மக்களிடையே இனவாத சிந்தனையை மேலும் வலுவடையச் செய்திடும். அத்தோடு, இதுவரைக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்கள் புள்ளடி மூலமாக வாக்கை பயன்படுத்தியவர்களுக்கு விரும்பு வாக்கு அடிப்படையில் இலகத்தை இடும் நிலை என்பது கூட பல நடைமுறைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை பெறுபேறு என்று தெரிந்து கொண்டு போட்டியிடும் வேட்பாளர்களின் நடவடிக்கைகள் சில வேளைகளில் ஜனநாயகத்திற்கு எதிராகவும் அமையும்.

    மேலும், ஹஸ்புல்லலாஹ்வின் கோரிக்கைகளை சஜித் பிரேமதாஸவும், கோத்தபாய ராஜபக்ஷவும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதில் எம்மைப் பொறுத்த வரை மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. இந்நிலையில் இரண்டு பேரும் ஏற்றுக் கொள்ளாது போனால் ஹிஸ்புல்லாஹ்வுக்கு முஸ்லிம்கள் அளிக்கும் வாக்குகளின் பெறுமதி என்ன நிலையை அடையும். தனது தேர்தல் விஞ்ஞபானத்தை ஏற்று சுமார் இத்தனை ஆயிரம் அல்லது இலட்சம் வாக்காளர்கள் வாக்கு அளித்துள்ளார்கள். அதனால், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் தனது கோதரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று வாதிடலாம் என்று தெரிவித்துக் கொண்டிருப்பதில் என்ன அறிவுவார்ந்த விடயம் இருக்கின்றது. ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் தீர்மானம் என்றும் சொல்லலாம். ஆதலால், பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் போது, அந்த ஜனாதிபதி தமது இலக்கை நோக்கிச் செல்வார். ஆதலால், எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தாம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக ஜனநாயகத்திற்கு மாற்றமாகவும், வாக்காளர்களை ஏமாற்றும் விதத்திலும் கருத்துக்களை முன் வைப்பதனை தடை செய்ய வேண்டும்.

    உடன்படிக்கைகள்
    தற்போதுள்ள அரசியல் சூழலில் எந்தவொரு சிறுபான்மைக் கட்சியும் வெற்றி வாய்ப்பைக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளர்களுடன் உடன்படிக்கை செய்து கொள்வது என்பது அவர்களின் வெற்றிவாய்ப்பை மழுங்கடிக்கச் செய்துவிடும். பௌத்த இனவாதிகள் பௌத்தர்களின் அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் நிபந்தனைகளுக்கு அடிபணியக் கூடாதென்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இனவாதிகளும், பௌத்த பீடங்களும் இத்தகையதொரு கொள்கையில் இருந்து கொண்டிருக்கின்றன. இதனால்தான் அவர்கள் புதிய அரசியல் யாப்பையும், வடக்கு, கிழக்கு இணைப்பையும், சமஸ்டி முறையையும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், இந்த ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மையினர் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் தேர்தல்ல. மேலும், யார் வெற்றி பெற்றாலும் சிறுபான்மையினருக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கப் போவதுமில்லை. அதற்கு பௌத்த இனவாதிகளும், பௌத்த பீடங்களும் இடங் கொடுக்கப் போவதுமில்லை. ஆதலால், சிறுபான்மையினரை பொறுத்த வரை ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறக் கூடாதென்பதற்கு முன்னிலை அளிக்க வேண்டியுள்ளது. அதனால், இதனைக் கருத்திற் கொண்டுதான் முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டை அரசியல் கட்;சிகளின் நிலைப்பாட்டை விட்டும் வெளியேறி முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் என்பதற்கு முன்னுரிமை அளித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.
    Vidivelli 01.11.2019

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யார் வெற்றி பெறக் கூடாது? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top