'வாக்களிக்கச் செல்லாத நல்ல வாக்காளர்களே, கெட்ட ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு காரணமாகின்றார்கள்' என்று உலகப் புகழ்பெற்ற அரசியல் அறிஞர் ஒருவர் சொன்னார். ஒவ்வொருவரின் வாக்கும் நல்ல ஆட்சியாளர்களை தெரிவு செய்வதற்கு மட்டுமன்றி, மோசமானவர்கள் அதிகாரத்திற்கு வராமல் தடுப்பதற்கும் அத்தியாவசியமானது என்பதையே இந்தக் கூற்று உணர்த்தி நிற்கின்றது.
நாட்டு மக்களை அரசியல் அதிகாரத்தின் மூலம் ஆட்டிப் படைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவதற்கான அல்லது அவர்களினதும் அதனூடாக நாட்டினதும் தலையெழுத்தைத் தீர்மானிப்பதற்கான ஒரு வாய்ப்பு நமக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறைதான் கிடைக்கின்றது. எனவே இன்னும் ஒரு ஐந்து நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் வாக்களிப்பதும், அவ்வாக்கு சரியான வேட்பாளருக்கு கிடைப்பதையும் உறுதி செய்வது நமது தார்மீகக் கடமையாகும்.
இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் அன்னச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றன. தேசிய காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு என்ற சிறுகட்சி ஆகியன மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்றன. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி திசைகாட்டிச் சின்னத்தில் களமிறங்கியுள்ள அனுர குமார திசாநாயக்கவுக்காக பிரச்சாரம் செய்கின்றது. இதுதவிர எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட 3 முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
ஒப்பீட்டுத் தெரிவு
இந்தப் பின்னணியில், நாளுக்குநாள் களநிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன. வாக்களிப்பு தினம் வரைக்கும் எதனையும் சரியாக கணிப்பிட்டுக் கூற முடியாது. கருத்துக் கணிப்பு என்ற பெயரிலும் ரகசிய அறிக்கை என்ற பெயரிலும் வெளிவருகின்ற புள்ளிவிபர தகவல்கள் பெரும்பாலும் போலியானவையே. யாராவது ஒரு வேட்பாளிடம் ஒரு செயற்றிட்டத்தை சமர்ப்பித்து அதற்காக இலட்சக்கணக்கில் பணம் பெற்று சில நிறுவனங்கள் செய்கின்ற பம்மாத்து வேலை என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். எனவே, இந்த கதைகளுக்குப் பின்னால் போகாமல் முஸ்லிம்கள் மனச் சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.
இப்போது களத்தில் இருக்கின்ற பிரதான வேட்பாளர்களான சஜித் அல்லது கோத்தாபய ஆகியோருக்கு சார்பாக வாக்களிப்பதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும் உள்ளன. அதேபோல் வாக்களிக்காமல் விடுவதற்கு காரணமாகக் கூறக்கூடிய அனுபவங்களும் முஸ்லிம்களுக்கு உள்ளன. ஆக மொத்தத்தில், நிஜத்தில் இலங்கையில் உள்ள 99 சதவீத முஸ்லிம் வாக்காளர்களும் 100 சதவீதம் மனம் விரும்பி வாக்குப்போடும் அளவுக்கு வேட்பாளர்கள் யாரும் இல்லை என்றே கூற வேண்டும்.
எனவே, இருப்பதில் பரவாயில்லை என்ற ரகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஒப்பீட்டுத் தெரிவின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில் வாக்களிப்பில் கூடிய கவனம் செலுத்துவதோடு, எந்த வேட்பாளர் தன்னுடைய தெரிவாக இருக்கின்றார் என்பதையும், பகுத்தறிவைப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் தீர்மானிக்க வேண்டும்.
தெளிபடுத்தாத கட்சிகள்
முஸ்லிம் அரசியல் பரப்பில், மேடைபோட்டு ஆளுக்காள் வசைபாடிய முஸ்லிம் கட்சிகள், மற்றையக் கட்சிகளுக்கு எதிராக ஆதரவாளர்களை தூண்டிவிட்ட அரசியல் தலைவர்கள் எல்லோரும் முஸ்லிம் சமூகத்தின் கடைநிலை வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் முக்கியத்துவத்தையும், எவ்வாறு நிராகரிக்கப்படாமல் வாக்களிக்க வேண்டும் என்பதையும் இதுவரை எடுத்துச் சொல்லவில்லை.
சுருங்கக் கூறின் முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் எந்தப் பக்கத்திற்கு ஆதரவளித்தாலும் இந்த முறை தேர்தலில் களத்தில் இறங்கி சரியாக வேலை செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. இன்றும் யார் வேட்பாளர், சின்னம் என்ன, எப்படி வாக்குப் போட வேண்டும் என்ற குழப்பங்கள் நிறையப் பேருக்கு இருப்பதை அவதானிக்க முடிகின்றது தமிழ் மற்றும் சிங்கள மக்களின் நிலையும் இதுதான்.
மக்களிடையே வாக்களிப்பு பற்றிய ஆர்வம் குறைவாகக் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் குழப்பங்களும் தெளிவின்மைகளும் நிறையவே இருக்கின்றன. அரசாங்க ஊழியர்களின் (தபால்மூல) வாக்குகளே கணிசமாக நிராகரிக்கப்படும் ஒரு நாட்டில், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும், வாக்களிக்கும் முறை குறித்தும் பாமர மக்களுக்கு இன்னும் அதிகமாக தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். இது விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமன்றி தமிழ் சிங்கள அரசியல்வாதிகளும் தமது கடமையை மறந்து செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
இந்தப் பின்னணியில் நிலைமைகளை உற்றுநோக்கினால், வாக்களிப்பு வீதம் குறைவடைவதற்கான, மந்தமான வாக்குப்பதிவு இடம்பெறுவதற்கான நிகழ்தகவுகள் அதிகமாகத் தெரிகின்றன. அத்துடன் நீளமான வாக்குச்சீட்டு மற்றும் புள்ளடி இடுதல், இலக்கமிடுதல், இரண்டாம் விருப்பு போன்ற குழப்பங்களால், வாக்களிப்பு பற்றி தெளிவில்லாத வாக்காளர்கள் தர்மசங்கடமான ஒரு நிலையை எதிர்கொள்ளலாம் என்றும் அனுமானிக்க முடிகின்றது.
இந்த நிலை போக்கப்பட வேண்டும். இலங்கையர் எல்லோருமே வாக்குரிமை மற்றும் வாக்களிப்பின் தார்ப்பரியத்தை உணர்ந்து கொண்டு கட்டாயமாக வாக்களிக்கச் செல்வதுடன் முறையாக வாக்களிக்கவும் வேண்டியது அவசியமென்றே இக்கட்டுரை ஒவ்வொரு பொது மகனையும் தனித்தனியாக வலியுறுத்த விரும்புகின்றது. அத்துடன் தங்களது குடும்பத்தினருக்கு இவ்விடயத்தை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இலங்கையில் வாக்குரிமை
இலங்கையில் ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்ட வாக்குரிமையே காணப்பட்டது. 1931ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு கொண்டுவந்த பிரேரணையின் மூலம் இலங்கை மக்களுக்கு சர்ஜன வாக்குரிமை கிடைத்தது. உலகின் விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளிலேயே அனைவருக்குமான வாக்குரிமை கிடைத்திருந்த ஒருகாலத்தில், தென்னாசியாவிலேயே முதன்முதலாக பெண்கள் உட்பட சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்திய நாடு இலங்கையாகும். அதன்பின்னர் 1972 மற்றும் 1978ஆம் ஆண்டு குடியரசு யாப்புகளின் ஊடாக ஒரு அடிப்படை உரிமையாக வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
சுமார் 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில் இம்முறை கிட்டத்தட்ட 16 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். நவம்பர் 16 இல் நடைபெறவுள்ள வாக்கெடுப்புக்காக 1 கோடி 70 இலட்சம் வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையால் 2 அடிக்கும் சற்று நீளமான மிகநீண்ட வாக்குச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தபால்மூல வாக்களிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், நாடெங்கிலும் 45ஆயிரம் வாக்களிப்பு நிலையங்களில் சாதாரண மக்களுக்கான வாக்கெடுப்பை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. செல்லுபடியாகும் வாக்குகளில் 50 சதவீதத்தை விட ஒரு வாக்கேனும் எடுக்க வேண்டியது முதன்மைத் தேவைப்பாடாக காணப்படுகின்றமையால், சிலவேளை விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதை முன்னுணர்ந்து, 'தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவிக்க காலதாமதமாகலாம்' என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முன்கூட்டியே அறிவித்திருக்கின்றார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 16 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். அதுபோலவே மலையகத் தமிழர்கள் உள்ளடங்கலாக 20 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களின் வாக்குகள் இருக்கின்றன. எனவே, சிங்களச் சமூகத்தின் செல்லுபடியாகும் வாக்குகளில் முக்கால் வாசிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே ஒரு வேட்பாளரால் சிறுபான்மையினரின் பேராதரவு இன்றி வெற்றிபெறலாம். அவ்வாறில்லாதபட்சத்தில், முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் வாக்குகளே மறைமுகமாக தீர்மானிக்கும் சக்தியாக தொழிற்படும் என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வாக்கெடுப்பு நடைமுறை
மக்களிடமிருந்து பிரிபட முடியாத வரப்பிரசாதமாக இருக்கின்ற இறைமை மற்றும் ஜனநாயகத்தைப் போலவே வாக்குரிமையும் ஒரு மிகப் பெரும் வரப்பிரசாதமாகும். அந்த அடிப்படையிலும் சிறந்த ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், பொருத்தமற்ற ஒருவர் ஆட்சியாளராக வந்து விடக் கூடாது என்ற வகையிலும், நமது வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டியது நம்மீதுள்ள வரலாற்றுப் பொறுப்பாகும்.
அந்தவகையில், நவம்பர் 16ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரையும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்களிப்பதில் அசட்டையாகவும் ஆர்வமின்றியும் இருக்காமல் முஸ்லிம்களும் தமிழர்களும் நேர காலத்துடன் சென்று வாக்களிக்க வேண்டும்.
வாக்களிக்கச் செல்லும் ஒவ்வொரு வாக்காளரும் ஆளடையாள ஆவணத்தையும், வாக்காளர் அட்டையையும் கட்டாயமாக கொண்டு செல்ல வேண்டும். அந்த வகையில், ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் ஆணையாளர் அனுமதித்த ஆளடையாள ஆவணங்களான செல்லுபடியான வெளிநாட்டு கடவூச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமாருக்கான அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் திணைக்களத்தினால் கிராம அலுவலர் ஊடாக விநியோகிக்கப்படுகின்ற தற்காலிக அடையாள அட்டை என்பவற்றில் ஏதேனுமோர் ஆவணத்தை கொண்டு செல்லுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
வாக்கெடுப்பு நிலைய அலுவலர் அலுவலர் வாக்காளர் வசமுள்ள ஆளடையாள ஆவணத்தை (பரிசீலித்துப் பார்த்து அதிலுள்ள நிழற்படமும், நபரின் முகத்தோற்றமும் ஒத்திசையுமாயின் வாக்காளரை இரண்டாவதாகக் காணப்படுகின்ற அலுவலரிடம் அனுப்புவார். இரண்டாம் அலுவலர் வாக்காளர் வசமுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை கேட்டு வாங்கி அவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் தேடிப்பிடித்து, பெயரையும் தொடர் இலக்கத்தையும் சத்தமாக மொழிவார். அதன் பின்னர் ஆட்சேபனை எதுவுமில்லையெனில் வாக்காளரை அடுத்து அமர்ந்துள்ள அலுவலரிடம் அனுப்புவார்.
அங்குள்ள மூன்றாம் அலுவலர் வாக்காளரின் இடதுகை சிறுவிரலில் மை பூசுவார். விரலில் மையைப் பூசுவதற்கு இணங்காவிடத்து அத்தகைய வாக்காளர் ஒருவருக்கு வாக்கினை பிரயோகிக்க முடியாமற் போகக் கூடும் என்பதுடன் விரலை அடையாளமிட்டதன் பின்னரே அவருக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும். அதனை தொடர்ந்து, மறைக்கப்பட்டுள்ள கூட்டிற்குள் சென்று வாக்குச்சீட்டில் தாம் விரும்பிய கட்சிக்கு அல்லது சுயேட்சை குழுவுக்கு வாக்கினை அடையாளமிட்டு, அதனை மடித்து வாக்குச்சீட்டை வாக்குப் பெட்டிக்குள் இட வேண்டும். இதுவே தேர்தல்கள் தொடர்பான பொதுவான விதிமுறையாகும்.
இதேவேளை, உடற்குறைபாடு உள்ளவர்கள் வாக்களிப்பதற்கும் ஒருவரது வாக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தால் ;கேட்டுப்பெறும் வாக்கு' ஒன்றை பெறுவதற்கும் தேர்தல் விதிமுறைகளில் விஷேட ஏற்பாடுகள் இருப்பதாக துறைசார்ந்தோர் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் நேர்மைத்தன்மையான வாக்காளர் ஒருவருக்கு வாக்குரிமையை உறுதி செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.
இந்த நாட்டில் குறிப்பாக முஸ்லிம்கள் மீது கெடுபிடிகளும் சந்தேகப் பார்வையும் அதிகரித்துள்ள சூழ்நிலையில் இத்தேர்தல் நடைபெறுகின்றமையால், சட்டம் ஒழுங்கு மற்றும் மேற்குறிப்பிட்ட தேர்தல் நியதிகளை முஸ்லிம் வாக்காளர்கள் மிகக் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும்.
மிகக் குறிப்பாக. தங்களது அடையாளத்தை உறுதிசெய்யும் ஆளடையாள ஆவணமொன்றை கட்டாயம் கொண்டு செல்வதுடன், வாக்களிக்கும் பெண்கள் முகத்தை மூடும் வகையில் புர்கா போன்ற ஆடைகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளமையால், அவ்வாறான முழுமுகத்தையும் ஆடைகளை அணியாமல் செல்வதே தேவையற்ற சிக்கல்களில் தவிர்ந்து கொள்ள வழியாகும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
இவ்விடத்தில் வாக்களிப்பு முறை பற்றி கடுமையான தெளிவின்மை எல்லா மக்களிடையேயும் காணப்படுகின்றது. எனவே கடைசி நேர பதற்றத்தையும், வாக்கு செல்லுபடியாவதையும் தவிர்ப்பதற்காக வாக்களிப்பு பற்றிய முன்னறிவுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்வதே சிறப்பாகும்.
வாக்களிப்பது எவ்வாறு?
இம்முறை உங்களுக்கு மிக நீளமான வாக்குச் சீட்டு வழங்கப்படும். அந்த வாக்குச் சீட்டை கையில் எடுத்தவுடன் நீங்கள் வாக்களிக்க விரும்புகின்ற வேட்பாளரின் பெயர் மேலிருந்துஅ கீழாக எத்தனையாவது இடத்தில் இருக்கின்றது என்று பாருங்கள். அதற்கு எதிரே பக்கவாட்டில் அவர் போட்டியிடும் சின்னம் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திய பின், அதற்கு எதிரே உள்ள வெற்றுக் கூட்டில் உங்களது வாக்கினை இடுங்கள்.
வாக்களிப்பை இரு வகையில் மேற்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதில் மிகவும் இலகுவானதும் சிக்கலற்றதும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு எதிரே வழக்கம் போல புள்ளடி இடுவதாகும். இதுதவிர, புள்ளடிக்குப் பதிலாக முதலாம் இலக்கத்தையும் இடுவதற்கு முடியும்.
ஒரு வேட்பாளருக்கு பிரதான வாக்கையும் வேறு ஒருவர் அல்லது இருவருக்கு விருப்பத் தெரிவு வாக்குகளையும் இட விரும்பும் வாக்காளர், தனது முதன்மைத் தெரிவுக்கு 1ஆம் இலக்கத்தையும் மற்ற இருவருக்கும் 2, 3ஆம் இலக்கங்களையும் இடலாம்.
ஆனால், புள்ளடி என்பது முதன்மைத் தெரிவான 1ஆம் இலக்கத்திற்கு சமம் என்று கருதப்படும் என்பதால், புள்ளடியை போட்டுவிட்டு 1ஆம் இலக்கமோ 2,3 ஆம் இலக்கங்களோ போட்டால் வாக்கு நிராகரிக்கப்படும். அதேபோன்று புள்ளடியிட்டுவிட்டு 2ஆம் இலக்கத்தை போடுவது பிழையான முறை என்றும், மூன்று வேட்பாளர்களுக்கும் 3 புள்ளடிகளை இடும் வாக்கு நிராகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்த பிரதான வேட்பாளரும் விருப்பு வாக்களிப்பதற்கு ஊக்குவிக்காத படியாலும், சரியான முறையில் விருப்பு வாக்கை அளிக்காவிட்டால் அவ்வாக்கு செல்லுபடியற்றதாகும் என்றபடியாலும், சிறுபான்மை வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு மட்டும் புள்ளடியிட்டு அல்லது 1ஆம் இலக்கத்தை மாத்திரம் இட்டு வாக்களிப்பதே சிக்கலற்ற வாக்களிப்பு முறை என குறிப்பிடலாம்.
தேர்தல் விதிகள், வாக்களிப்பு முறை பற்றி ஒவ்வொரு பொதுமகனும் அறிந்திருப்பதுடன் அதுபற்றி பாரமரர்கள், அடிமட்ட மக்கள், படிப்பறிவு அற்றவர்கள், வயோதிபர்களுக்கு விளங்கப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் அனைத்து தமிழ், முஸ்லிம் வாக்காளர்களும் பின்னடிக்காமல் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். எந்த வேட்பாளருக்காகவும் சண்டை பிடித்து, ஊர் வாரியாக முரண்படாமல் அமைதியாகச் சென்று வாக்களிப்பதே புத்திசாலித்தனம் என்பதை மறந்துவிடக் கூடாது.
வாக்குரிமை என்பது மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். ஊலகின் பல நாடுகளில் வாழும் ஒரு குறிப்பிட்ட சில மக்கட் பிரிவினருக்கு இவ்வுரிமை இன்னும் கிடைக்கவில்லை. நமக்கு அவ்வுரிமை கிடைத்திருக்கின்றது. எனவே அதன் பெறுமதி உணர்ந்து நாம் வாக்குரிமையை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
அந்தவகையில், நானும் நீங்கள் ஒவ்வொருவரும் யாரால், எப்படிப்பட்ட ஜனாதியால் ஆளப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காக உங்கள் 'புள்ளடிகளை' பயன்படுத்துங்கள். தவறாகப் பயன்படுத்தினால், அதற்கு பிராயச் சித்தம் தேட இன்னும் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் நினைவில் இருக்கட்டும்.
(ஏ.எல்.நிப்றாஸ் - வீரகேசரி 10.11.2019)

0 comments:
Post a Comment