கடந்த சில நாட்களில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட சில அதிரடி மாற்றங்கள்
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பாதகமான நிலைப்பாட்டை
வெளிப்படுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முன்னாள்
ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின்
தீர்மானமிக்க அறிவிப்பு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க போட்டியிடுகிறார்.
இந்நிலையில்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின்
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சி உறுப்பினர்
கே.டீ.லால்காந்த, முதலாம் வாக்கினை அனுரகுமார திசாநாயக்கவுக்கும், இரண்டாம்
விருப்பத்தை எந்தவொரு வேட்பாளருக்கும் வழங்கலாம் என குறிப்பிட்டார்.
இந்தக்
கருத்து தேர்தல் களத்தில் அதிகம் பேசப்பட்டதுடன், மக்கள் மத்தியிலும்
சேர்க்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு மிகவும்
பின்னடைவான விடயமாக கருதப்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணியின்
இரண்டாம் விருப்பமாக பொதுஜன பெரமுன காணப்படும் என கோத்தபாயவுக்கு ஆதரவான
உறுப்பினர்கள் தெரிவித்தனர். எனினும் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தால்
அந்த எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள்
ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்க நேற்று நடத்திய மாநாடு தேர்தல்
களத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர
கட்சியின் மீது அதிருப்தி அடைந்த பெருமளவு உறுப்பினர்கள் நேற்றைய
மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி
வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன பெரமுன
கட்சியுடன் இணைந்து கொண்டது. இதன்போது அவர்களுடன் இணைந்து கொண்ட
உறுப்பினர்களை விடவும் நேற்றைய சந்திரிக்காவில் மாநாட்டில் அதிகளவான
உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் கோத்தபாய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கான பலம் அதிகரித்துள்ளது.
அத்துடன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு தங்களுக்கு கிடைக்கும் என பொதுஜன பெரமுன
கட்சியினால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐக்கிய தேசிய முன்னணிக்கு
கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில்
மில்லேனியம் செலென்ஞ் வேலைத்திட்டத்திற்கான எதிர்ப்பு நடவடிக்கையை பொதுஜன
பெரமுன பிரச்சாரம் செய்தது. எனினும் அதன் ஊடாக கோத்தபாயவின் அமெரிக்க
குடியுரிமை தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்தமையினால் மீண்டும் பொதுஜன
பெரமுன ஏமாற்றமடைந்துள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி தேர்தலின் இறுதி
வாரங்களுக்கு கோத்தபாய ராஜபக்சவின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பாரிய
நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், சஜித் பிரேமதாஸவின் தேர்தல்
பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளதாக குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

0 comments:
Post a Comment