• Latest News

    May 14, 2020

    புடவைக் கடைகளுக்கு பெண்கள் செல்ல வேண்டாம்; அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா, பள்ளிவாசல்கள் சம்மேளனம் கூட்டாக வேண்டுகோள்

    (அஸ்லம் எஸ்.மௌலானா)
    நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, றமழான் பெருநாளுக்கான புத்தாடைகளை கொள்வனவு செய்வதற்காக பெண்கள் புடவைக் கடைகளுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் என்பன கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

    இவ்விடயத்தை வலியுறுத்தி இவ்விரு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

    கொரோனா தொற்று அபாயம் காரணமாக கடந்த சில வாரங்களாக எமது நாட்டில் பெரும்பாலான நாட்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்போது பகல் வேளையில் முழுமையாக தளர்த்தப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் மக்களிடையேயான சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகின்றது. இக்கட்டுப்பாடுகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கின்ற நிபந்தனையுடனேயே அரசாங்கம் இவ்வாறு ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியிருக்கிறது.

    இந்நிலையில் முஸ்லிம்கள் தற்போது றமழான் நோன்பை அனுஷ்டித்து வருகின்றோம். அதேவேளை அடுத்த சில நாட்களில் வரவுள்ள பெருநாளை கொண்டாடுவதற்கான தயார்படுத்தல்களிலும் எமது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய அம்சமாக எமது பகுதி மக்கள் புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    இத்தருணத்தில் நாம் விடுக்கும் வேண்டுகோள் யாதெனில், புத்தாடை கொள்வனவுக்காக எமது பெண்கள் கடைத்தெருக்களுக்கும் புடவைக் கடைகளுக்கும் செல்வதை முற்றாகத் தவிர்த்து, ஒவ்வொரு குடும்பத்தின் சார்பிலும் ஆண்கள் மாத்திரம் சுகாதார முறைமைகளை கடைப்பிடித்தவாறு உரிய இடங்களுக்கு சென்று குறுகிய நேரத்தினுள் தேவையான ஆடைகளையும் பொருட்களையும் கொள்வனவு செய்து கொண்டு, வீடுகளுக்கு திரும்பி விடுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்களாகிய நாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி, முன்மாதிரியான சமூகமாக திகழ்வோம்" என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புடவைக் கடைகளுக்கு பெண்கள் செல்ல வேண்டாம்; அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா, பள்ளிவாசல்கள் சம்மேளனம் கூட்டாக வேண்டுகோள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top