• Latest News

    August 27, 2020

    முஸ்லிம்களின் எதிர்பார்ப்பும் பிரதிநிதிகளின் நகர்வும்

    சஹாப்தீன் -
    பொதுஜன பெரமுன பாராளுமன்ற தேர்தலில் பெற்றுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியானது, பௌத்த மேலாதிக்க சிந்தனைக்கும், அக்கட்சியின் கொள்கைக்கும் கிடைத்த வெற்றி எனலாம். பொதுஜன பெரமுனக் கட்சியும், இன்றைய ஆட்சியும் ராஜபக்ஷ குடும்பச் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. சிங்கள மக்களிடையே மேலோங்கியுள்ள பௌத்த மேலாதிக்க சிந்தனையால் பாராளுமன்றத்தில் பலமானதொரு எதிர்க்கட்சி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சி பலமாக இருக்க வேண்டும். மிகவும் பலம் வாய்நத அரசும், பலவீனமான எதிர்க்கட்சியும் உள்ள நிலையில் நாட்டில் சட்டம், ஒழுங்கு, ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாப்பதும், சிறுபான்மையினரின் இருப்பு மற்றும் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்குவதும் ஆட்சியாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

    இன்றைய ஆட்சியினை நிறுவதற்கு மிகப் பெரிய பங்களிப்புக்களை வழங்கிய பௌத்த மேலாதிக்கவாதிகள் ஆட்சியாளர்களின் உதவியுடன் சிறுபான்மையினரின் அரசியல் மற்றும் மத உரிமைகளை பாதிக்கச் செய்யும் சட்ட மூலங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் விவாக, விவாகரத்து மற்றும் கலாசார அடிப்படையிலான முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாமல் செய்வதே இவர்களின் நோக்கமாகும். இலங்கையில் பௌத்த மேலாதிக்கத்தை நிலை நிறுத்தி, சிறுபான்மையினரை சட்டங்கள் மூலமாக அடிமைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். இதுவே பிரச்சினையாகும். அதனையே சிறுபான்மையினர் எதிர்க்கின்றனர். பௌத்த மக்களைப் போன்று ஏனைய மதங்களை பின்பற்றுகின்றவர்களுக்கும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க சட்டமும், ஒழுங்கும் வகை செய்ய வேண்டும். 

    இலங்கையை ஆட்சி செய்தவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகளை பறிப்பதிலும், தனியே பௌத்த சிங்களவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட வகையில் ஆட்சியை நிறுவதற்கும் எடுத்துக் கொண்ட தொடரான முயற்சி பொதுஜன பெரமுன மூலமாக நிறைவேறியுள்ளது. இன்றைய ஆட்சியில் சிறுபான்மையினரும், சிறுபான்மையினக் கட்சிகளும் பங்காளிகளாக இருந்தாலும், அவர்கள் பொம்மைகள் போன்றே இருப்பார்கள். கடந்த காலங்களில் சிறுபான்மையினரின் ஆதரவுடன் நிறுவப்பட்ட ஆட்சியில் கூட தமிழ், முஸ்லிம் கட்சிகள் பங்காளிகள் என்ற பேரில் பொம்மைகள் போன்றே இருந்தன. குறிப்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளுக்காகவே ஆட்சியாளர்களுடன் இணைந்து கொண்டார்கள். இன்று கூட அமைச்சர் பதவிகளுக்காக தூது விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

    இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்ட குடியேற்றங்கள், புதிய அரசியல் யாப்புக்களை உருவாக்கி சிறுபான்மையினருக்கு இருந்த காப்பீடுகளை இல்லாமல் செய்தார்கள். தற்போது கூட புதிய அரசியல் யாப்பு பற்றி பேசிக் கொள்கின்றார்கள். இன்னுமொரு புதிய அரசியல் யாப்பு வருமாக இருந்தால் சிறுபான்மையினரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்குரிய திட்டங்கள் உள்ளடக்கப்படும். இவ்வாறு பௌத்த பேரினவாதிகள் பௌத்த கடும்போக்கு தேரர்களுடன் இணைந்து செயற்பட்டு பலம் பெற்றிருப்பதற்கு சிறுபான்மையினரும் காரணம் எனலாம். 

    தமிழர்களும், முஸ்லிம்களும் பேரினவாத ஆட்சியாளர்களினால் ஒடுக்கப்படுவதாக தேர்தல் காலங்களில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்;. ஆனால், ஒற்றுமைப்பட்டு அதனை முறியடிப்பதற்குரிய திட்டங்களை வகுத்துக் கொள்ளவில்லை. தமிழர்களும், முஸ்லிம்களும் பகை அரசியலையும், இனவாத அரசியலையுமே செய்து கொண்டிருக்கின்றார்கள். தங்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் குறித்து இன்னும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்;தவில்லை. இத்தகைய கொள்கைதான் பௌத்த மேலாதிக்க அரசாங்கம் உருவாவதற்கு காரணம் எனலாம். தமிழர்களும், முஸ்லிம்களும் வேற்றுமைகளுக்கு மத்தியில் விட்டுக் கொடுப்புக்களை செய்து ஒற்றுமைப்படுவதற்கு இன்னும் தயாராகவில்லை.

    சிறுபான்மையினர் அரசியல் அதிகாரத்தை கேட்டுக் கொண்டிருப்பதனை சிங்கள மக்கள் நாட்டை பிரிக்கும் காரியமாகவே கருதுகின்றார்கள். அத்தோடு, இந்த சிந்தனைக்கு எதிராக சிங்கள மக்கள் ஓரணியில் நிற்க வேண்டுமென்ற நீண்ட கால கொள்கையை பௌத்த இனவாதிகள் வலுப் பெறச் செய்துள்ளார்கள். இதிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது என்பது இலகுவானதாக இருக்காது. அது மட்டுமன்றி ஜனநாயகக் கோட்பாடுகளை மதித்து நடக்கின்றவர்களின் தைரியமும், ஜனநாயகம் பற்றிய நல்லெண்ணமும் குறைவடைந்துள்ளது. இந்நிலை ஆபத்தானதாகும்.

    இதே வேளை, இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியாளர்களுடன் இணக்க அரசியலையே மேற்கொண்டுள்ளார்கள். எல்லா ஆட்சிக் காலங்களின் போதும் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள். மஹிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போதும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போதும் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அவர்கள் முஸ்லிம்களின் மீதான தாக்குதல்களை கண்டிக்கவில்லை. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களின் மீது பல இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. மஹிந்தராஜபக்ஷ எதிhக்கட்சியில் இருந்தார். அப்போது கூட முஸ்லிம்களின் மீது மேற்கொண்ட தாக்குதல்களை அவர் கண்டிக்கவில்லை. 

    அதே வேளை, ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நிம்மதி இருக்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரித்தது. பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிட்டன. ஆனால், சஜித் பிரேமதாஸ கூட முஸ்லிம்களின் மீது மேற்கொண்ட பௌத்த இனவாதிகளின் தாக்குதல்களை கண்டிக்கவில்லை. ஆதலால், ஆட்சியாளர்களும், சிங்கள பௌத்த அரசியல் தலைவர்களும் பௌத்த கடும்போக்கு இனவாதிகளை பகைத்துக் கொள்வதற்கு விரும்பமில்லை. 

    இத்தகையதொரு சிந்தனையையும், பின்னணியையும் பௌத்த சிங்கள அரசியல்வாதிகள் கொண்டுள்ள நிலையில்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுஜன பெரமுன ஆட்சி அமைத்துள்ளது. அதனால், பௌத்த இனவாதிகளை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளையே ஆட்சியாளர்கள் மேற்கொள்வார்கள் என்றுதான் அரசியல் ரீதியாக கணிக்க வேண்டியுள்ளது. 

    இதே வேளை, சிறுபான்மையினக் கட்சிகளையும், தலைவர்களையும் அரசியலிருந்து துடைத்துதெறிவதற்கு பொதுஜன பெரமுன திட்டங்களை வகுத்துள்ளது. பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் செயற்படக் கூடிய புதிய தலைவர்களை தமிழ், முஸ்லிம் மக்களிடையே உருவாக்குவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் சிறுபான்மையினக் கட்சிகளின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சமூகத்தை சார்ந்ததாக இருக்கவில்லை. தேர்தல் காலங்களில் முஸ்லிம் கட்சிகள் பொதுஜன பெரமுன ஆட்சி அமைத்தால் முஸ்லிம்களினால் நிம்மதியாக வாழ முடியாது. பௌத்த இனவாதிகளின் ஆதிக்கமே அரசாங்கத்தில் இருக்குமென்று தெரிவித்தனர். ஆனால், தேர்தல் முடிந்த கையுடன் பொது ஜனபெரமுனவுடன் இணைவதற்கு காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் கட்சிகளின் இத்தகைய நடவடிக்கைகளினால் முஸ்லிம்கள் விரக்தி அடைந்துள்ளார்கள். இந்நிலையை பொதுஜன பெரமுன சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. 

    அரசாங்கம் தமிழ், முஸ்லிம்களிடையே புதிய அரசியல் தலைமைகளை ஏற்படுத்தினால் அவர்களினால் சமூகத்தின் பிரதிநிதிகளாக செயற்பட முடியுமென்று சொல்ல முடியாது. தங்களை உருவாக்கிய ஆளுந் தரப்பினருக்கு ஏற்றவாறே செயற்படுவார்கள். முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொண்டால், முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்களையும், இனவாதக் கருத்துக்களையும் சிங்கள மக்களிடையே பரப்புரை செய்துதான் தேர்தல் வெற்றியை ருசித்துக் கொண்டார்கள். அதே வேளை, முஸ்லிம் கட்சிகள் பௌத்த இனவாதத்திற்கு எதிராக இனவாதக் கருத்துக்களையும், பிரதேசவாதக் கருத்துக்களையும் முன் வைத்தே தேர்தல் வெற்றிகளை பெற்றுள்ளன.

    கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் முஸ்லிம்கள் தமது பூர்வீகக் காணிகளை தொல்பொருள் பிரதேசம் எனும் பேரில் இழந்துள்ளார்கள். பௌத்த இனவாத தேரர்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள இன்றைய ஆட்சியில் முஸ்லிம்கள் தாம் இழந்த காணிகளை மீளவும் பெற முடியுமா என்பது சந்தேகமாகும். பௌத்த இனவாதிகளின் கழுகுப் பார்வைக்குள்ளாகியுள்ள காணிகளை சட்டரீதியாக மீட்டு எடுப்பது கடினமாகவே அமையும். இதே வேளை, முஸ்லிம் அரசியல்வாதிகள் இத்தகைய பிரச்சினைகளை முதனிலைப்படுத்தியே தேர்தல் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். பிச்சைக்காரனின் காலிலுள்ள புண்ணைப் போன்று முஸ்லிம்களின் பிரச்சினைகளும் இருந்து கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில் பௌத்த இனவாதிகள் தமது முஸ்லிம் விரோத செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களை மீறிச் செயற்படுவதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் துணிவார்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் எப்போதும் மக்கள் செல்வாக்கை பாதுகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளையே மேற்கொள்வார்கள். அந்த வகையில் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலில் பௌத்த இனவாதிகளை பகைத்துக் கொள்வதற்கு பேரினவாத அரசியல் கட்சிகள் ஒரு போதும் விரும்பாது.

    இதே வேளை, முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் அரசியல் நகர்வுகளைப் பார்த்தால் ஆட்சியாளர்களுடன் இணங்கிச் செல்லும் கொள்கையையே பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் உரிமை, எதிர்காலம், இருப்பு, அபிவிருத்தி, பொருளாதாரம், அரசியல் பற்றி பேசிக் கொண்டாலும், அத்தகைய சொற்றொடர்கள் முஸ்லிம்களின் மனங்களை கவர்ந்து கொள்வதற்காகவேயாகும். தேர்தல் முடிந்ததும் முஸ்லிம் சமூகத்தை முற்றாக மறந்து பேரினவாத அரசாங்கத்துடனும், தேவைப்பட்டால் பௌத்த இனவாதிகளுடனும் இரண்டரக் கலந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

    கடந்த அரசாங்கங்களில் முஸ்லிம்கள்; மிகப் பெரிய அமைச்சர் பதவிகளில் இருந்துள்ளார்கள். அந்த அமைச்சர் பதவிகளின் மூலமாக முஸ்லிம் சமூகத்திற்கு ஆற்றிய பணிகளைப் பார்த்தால் அரிதாகவே இருக்கின்றது. பள்ளிவாசல்களை இனவாதிகள் தாக்கிய போது, அதனை ஒரு சிறு சம்பவமாகவும், அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளின் சதி என்றும் முஸ்லிம் அமைச்சர்களே சொன்னார்கள். மாறாக அந்த தாக்குதல்தாரிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் மறுதலித்துக் கொண்டமையை கண்டிக்கவில்லை. 

    அரசியல் யாப்பின் 18வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதனை இல்லாமல் செய்வதற்காக 19வது திருத்தச் சட்டத்திற்கும் ஆதரவாக வாக்களித்தார்கள். தற்போது அரசாங்கம் 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வரவுள்ளது. இதற்கும் ஆதரவு வழங்கும் நிலையிலேயே முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். தாம் எந்த சட்ட மூலத்திற்கு கையுயர்த்துகின்றோம். அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் என்னவென்று ஆராயும் நீதியான தன்மையை முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் காண முடியாதுள்ளது. கையுயர்த்துவதன் மூலமாக தமக்கு எத்தனை ரூபா கிடைக்குமென்ற கணக்கிலேயே கவனமாக இருக்கின்றார்கள். 

    முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக கரையோர மாவட்டம், கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம், முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப உயர் பதவிகளில் தகுதியுடையவர்களை நியமனம் செய்ய வேண்டுமென்று முஸ்லிம் கட்சிகள் கடந்த 30 வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கின்றன. 1994ஆம் ஆண்டு முதல் அக்கட்சிகளின் தலைவர்கள் அமைச்சர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். தற்போதும் அமைச்சர் பதவிகளுக்காக நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். அமைச்சர்களாக இருந்த காலங்களில் 30 வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கும் எதனையாவது பெற்றுக் கொடுத்திருக்கின்றார்களா என்று முஸ்லிம்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். வெறும் கதைகளை சொல்லியே பாராளுமன்றம் செல்லுகின்றார்கள். அங்கு கதிரைகளை சூடாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் பாராளுமன்றம் செல்லாமலேயே இருந்திருக்கலாம். அதே வேளை, இத்தகைய வெறுமைகளை கட்சிவாதம், ஊர்வாதம் மற்றும் கொடுப்பனவுகளுக்காகவும், வேறு தேவைகளுக்காகவும் முஸ்லிம்கள் வாக்களித்தமை மிகப் பெரிய தவறாகும். ஒரு சமூகத்தின் தலைவர்களிடம் சமூகம் பற்றிய சிந்தனையில்லாத போது, அச்சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளிடமும்;, சமூகப் பொறுப்புடையவர்களிடமும், சாதாரண மக்களிடமும் சமூகம் பற்றிய சிந்தனை இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தின் மீது பற்றுள்ளவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய முடியும். ஆனால், முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை தலைவர்களும், ஏனையவர்களும் சமூகப் பொறுப்பற்றவர்களாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள். சமூகத்தின் பெயரில் எதையாவது சுறுட்டிக் கொள்வதற்கே எண்ணுகின்றார்கள். 

    புதிய அரசாங்கம் அரசியல் யாப்பு, சிறுபான்மையிருக்கு அதிகாரம், இனப் பிரச்சினை, தேர்தல் தொகுதி நிர்ணயம், தேர்தல் முறை ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்களை செய்ய இருக்கி;ன்றது. இந்த மாற்றங்களின் போது முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வாறு தீர்வுகள் அமைய வேண்டுமென்ற திட்டங்களை எந்தவொரு முஸ்லிம் கட்சியும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் கொண்டிருக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தின் காணி மற்றும் ஏனைய இழப்புக்கள் குறித்த புள்ளி விபரங்களைக் கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை. இவ்வாறான நிலையில் இருந்து கொண்டு, நாங்கள் முஸ்லிம்களின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களும் அவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். வாழ்த்துக்கள் முஸ்லிம்களை வாழ வைக்காது. நல்ல திட்டங்களும், அவற்றை நடைமுறைப்படுத்தும் ஆற்றலும்தான் முஸ்லிம்களை வாழ வைக்கும். முஸ்லிம்களின் உரிமைகளையும், இருப்பையும் அமைச்சர் பதவிகளுக்காக அடமானம் வைக்க முடியாது. முஸ்லிம்களை பற்றி பௌத்த இனவாதிகள் பெரும்பான்மை சிங்கள மக்களிடம் விதைத்துள்ள தவறான கருத்துக்களை இல்லாமல் செய்வதற்குரிய திட்டங்களை வகுப்பதே இன்றைய அவசியத் தேவையாகும். அமைச்சர் பதவிகளும், ஆட்சியில் பங்காளி என்பதும் சிங்கள மக்களிடம் காணப்படும் தப்பான எண்ணங்களை இல்லாமல் செய்யாது. மாறாக அத்தகைய எண்ணங்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதனை முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களின் எதிர்பார்ப்பும் பிரதிநிதிகளின் நகர்வும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top