• Latest News

    September 01, 2020

    திகாமடுல்லா தேர்தல் மாவட்டம்: வெற்றியும், தோல்வியும்... யார் காரணம்?

    எஸ்.றிபான் -

    இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், தேசிய காங்கிரஸிற்கு ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

    இக்கட்சிகளில் தலா 10 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், விகிதாசாரத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றியாளர் என்ற அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

    விகிதாசாரத் தேர்தலை பொறுத்த வரையில் வேறுபட்ட கட்சிகளின் வேட்பாளர்களை விடவும், ஒரு கட்சியின் வேட்பாளர்களிடையேதான் அதிக போட்டிகள் காணப்படும். இதில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தால் மட்டும் போதாது தந்திரமும், சூழ்ச்சியும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். அந்த வகையில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்கும், தோல்விக்கும் யார் காரணம் என்றுதான் இக்கட்டுரையில் பார்க்க இருக்கின்றோம்.

    மக்கள் காங்கிரஸ்

    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. அதாவது அக்கட்சி தமது முதலாவது பாராளுமன்ற உறுப்பினரை மயில் சின்னத்தில் பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சுமார் 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. ஆயினும், ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

    இம்முறை தேர்தலில் சுமார் 43 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இதன் மூலமாக ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது. அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர் என்ற அடிப்படையில் சட்டத்தரணி முஸரப் வெற்றி பெற்றுள்ளார். 

    மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்களிடையே ஒற்றுமை இருக்கவில்லை. ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களிடம் இந்நிலை காணப்பட்ட போதிலும் மக்கள் காங்கிரஸில்தான் மிகவும் மோசமாக இருந்தது. கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கும். அது நானாக இருக்க வேண்டுமென்பதில் வேட்பாளர்கள் அதிக கவனம் கொண்டார்கள். வேட்பாளர்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையை கட்சியின் தலைவர் றிசாட் பதியூதீன் கண்டு கொள்ளவில்லை. இது பற்றி பலரும் அவரிடம் எடுத்துக் கூறியிருந்த போதிலும், அக்கட்சியின் மாவட்டச் செயற்குழுவில் இது ஆராயப்பட்ட போதிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    இதனால் பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் மோசமான வகையில் பிரதேசவாதம் தலைவிரித்தாடியது. மக்கள் காங்கிரஸின் வெற்றி வேட்பாளர்கள் எனக் கருதப்பட்டவர்களான (முஸரப்புடன் சேர்த்து) ஜவாத், மாஹீர், தாஹீர் ஆகியோர்கள் தங்களுக்குரிய ஆதரவைத் தேடிக் கொள்வதற்கு கூட தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக அவர்கள் கட்சியின் தலைவரிடம் தெரிவித்துள்ளார்கள். மாற்றுக் கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு கூட சுதந்திரம் காணப்படவில்லை. இத்தகைய வேலைகளை செய்வதற்காக 'பன்றிக் காவல் படை' ஏனும் பேரில் ஒரு குழுவினர் இயங்கினர். மொத்தத்தில் பொத்துவில் பிரதேசத்தில் பல வேட்பாளர்களின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு தடைகள் காணப்பட்டன. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட இத்தகையதொரு ஜனநாயக விரோத செயல்கள் சாய்ந்தமருதிலும் நடைபெற்றன. 
     
    மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கே பொத்துவில் பிரதேசத்தில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ளமை பற்றி கட்சியின் தலைவர் றிசாட் பதியூதீனிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனால், அதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆராயப்பட வேண்டியதாகும்.

    2000ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் முகையதீன் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக மர்ஹும் அஸ்ரப் தேர்தல் வியூகம் ஒன்றை அமைத்தார். அதாவது ஓட்டமாவடி, வாழைச்சேனை மக்களின் வாக்குகளை மர்ஹும் முகைதீனுக்கு ஒற்றுமைப்பட்டு அளித்தால் வெற்றி பெற முடியுமென்று திட்டமிடப்பட்டது. அத்தேர்தலில் முகையதீன் (NUA - 22,975 preference votes) வெற்றி பெற்றார்.
     
    பொத்துவிலில் 30.8.2020ஆம் திகதி நடைபெற்ற வெற்றி விழாக் கூட்டத்தில் பொத்துவில் மண்ணுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்குரிய வழிகளையும், ஆலோசனைகளையும் தலைவர் றிசாட் பதியூதீன்தான் வகுத்துத் தந்தார் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் தெரிவித்தார். இதன் போது றிசாட் பதியூதீனும் மேடையில் இருந்தார்.
     
    முஸாரப்பின் இக்கருத்தினை வைத்துப் பார்க்கும் போது கட்சியின் தலைவர் பொத்துவில் விடயத்தில் கண்டும் காணாது போன்று ஏன் நடந்து கொண்டார் என்பது குறித்து சந்தேகிக்க வேண்டியுள்ளது. அல்லது தமது வெற்றியை  தலைவரின் மீது போட்டுத் தலைவரை மகிழச்சிப்படுத்த அவர் முயன்றுள்ளாரா என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

    அதே வேளை, பொத்துவிலுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொடுப்பதற்கு பிரதேசவாதமே பெரும்பங்காற்றியுள்ளது. பொத்துவிலில் சுமார் 70 வீதமானவர்கள் ஒற்றுமைப்பட்டதனால்தான் மக்கள் காங்கிரஸிற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கிடைத்தது. இந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக முஸரப் பல முயற்சிகளை எடுத்துக் கொண்டமையை குறைத்து மதிப்பிட முடியாது. 

    மக்கள் காங்கிரஸின் வெற்றிக்கு வேட்பாளர்கள் மட்டுமன்றி செயற்பாட்டாளர்களும் பங்காற்றியுள்ளார்கள். இதில் யார் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் மக்கள் காங்கிரஸின் தலைவர் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். ஆனால், அவர் நீதமாக நடந்து கொண்டாரா என்பதில் சந்தேகங்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. 

    மாவட்ட செயற்குழு
    மக்கள் காங்கிரஸின் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் மாவட்டச் செயற்குழு ஒன்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சிலின் தலைமையில் உருவாக்கப்பட்டது. இதன் நடவடிக்கைகள் கூட குறைகளைக் கொண்டிருந்தன. திட்டமிடல் இருக்கவில்லை. வேட்பாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

    இது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம் .... தொடரும்


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: திகாமடுல்லா தேர்தல் மாவட்டம்: வெற்றியும், தோல்வியும்... யார் காரணம்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top