"முஹம்மது நபி" எனும் நிகரற்ற ஆளுமை!
முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறித்து சுஜித்லால் என்ற உயிரியல் ஆசிரியர் எழுதிய அழகிய, ஆய்வுப் பூர்வமான வார்த்தைகள் இவை.
முஹம்மது நபி ஒரு இஸ்லாமிய பிரச்சாரகர் மட்டும் என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு பின்வரும் ஆளுமையைக் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்!
முஹம்மது நபி யார்? ஏன் உலகில் மிக அதிகம் அவர் பேசப்படுகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!
முஹம்மது எனும் அனாதை சிறுவன்.
முஹம்மது எனும் ஆடு மேய்ப்பாளர்.
முஹம்மது எனும் இளைஞர்.
முஹம்மது எனும் வியாபாரி.
முஹம்மது எனும் கணவன்.
முஹம்மது எனும் தீர்க்கதரிசி.
முஹம்மது எனும் தந்தை.
முஹம்மது எனும் சீர்திருத்தவாதி.
முஹம்மது எனும் பெண் பாதுகாவலர்.
முஹம்மது எனும் அனாதைப் பாதுகாப்பாளர்.
முஹம்மது எனும் ஏழைகளின் பாதுகாவலர்.
முஹம்மது எனும் மனித உரிமைப் பாதுகாவலர்.
முஹம்மது எனும் அடிமை விடுதலையாளர்.
முஹம்மது எனும் அகதி.
முஹம்மது எனும் குடும்பத் தலைவர்.
முஹம்மது எனும் நீதிபதி.
முஹம்மது எனும் போதை மீட்பாளர்.
முஹம்மது எனும் ஆட்சியாளர்.
முஹம்மது எனும் படைத்தலைவர்.
முஹம்மது எனும் ரானுவ தளபதி.
முஹம்மது எனும் ஆசிரியர்.
எல்லாவற்றிற்கும் மேலாக முஹம்மது எனும் நற்குணங்கள் நிறைந்த மனிதர்..!
கிரேக்க மற்றும் ரோமன் புராணங்களில் பேசப்படும் வாழ்க்கை அல்ல முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை.
பல நூற்றாண்டுகளாக செய்ய வேண்டிய காரியங்களை தன் வாழ்வில் செய்து முடித்த மகா தீர்க்கதரிசி!
அதாவது மேற்கத்தியர்களின் வார்த்தையால் சொல்வதாக இருந்தால்..
நிலையான இராணுவம் இல்லாமல், தனது சொந்த பாதுகாப்புக்கு ஆட்களில்லாமல், அரச மாளிகை இல்லாமல், நிரந்தர வருமானம் ஏதுமின்றி ஒரு முன்மாதிரி ஆட்சியை நிறுவினார் என்று அதிகாரப்பூர்வமாக யாருக்காவது உரிமைக் கொண்டாட முடியுமெனில் அதற்கு தகுதியானவர்களாக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மட்டுமே இப்பூலகில் இருப்பார்கள்!
அந்த மாமனிதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அறிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
அநாதை பாலகன் முதல் அரேபிய ஆட்சியாளர் வரை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கடந்துவந்த பாதையைப் பரிசோதித்து பார்த்தால் முஹம்மது நபி யார்? அவர்களின் உண்மை சுயரூபம் என்ன என்பது உங்களுக்கு புரிந்து வியப்பின் எல்லைக்கே செல்வீர்கள்!
பெற்றோரை எப்படி பேண வேண்டும், பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுத்த இறைத்தூதர்!
பக்கத்து வீட்டுக்காரர் பட்டினியால் வாடும்போது தான் மட்டும் வயிறு நிரப்பக்கூடாது என கட்டளைப் பிறப்பித்து, அதில் சாதி மதம் பார்க்கக் கூடாது என்று கற்றுக் கொடுத்த தீர்க்கதரிசி!
தன் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று கூறிய நீதியாளர்!
வெள்ளை நிற சல்மானையும் கறுப்பு நிற பிலாலையும் ஒரே அணியில் நிறுத்தி நிற, இன பாகுபாடு கூடாது என உலகுக்கு சொல்லிக் கொடுத்த உத்தமத் தூதர்!
இறந்தது நம் மார்க்கத்தைச் சேர்ந்த குழந்தை இல்லையே என சொன்னபோது குழந்தைக்கு ஏது மதம் என தனது தொண்டனை கண்டித்த கருணை நபி!
மரணத்தை நேரில் கண்டபோதும் தனது சமுதாயத்தை நினைத்து விம்மியழுத நிகரில்லா இறைத்தூதர்!
கணவனை சபிக்காதே, மனைவியைக் காயப்படுத்தாதே என கற்றுக் கொடுத்த குடும்பத் தலைவர்!
மாற்றுமத மனிதரின் சடலத்தை மக்கள் சுமந்துச் சென்றதைப் பார்த்து எழுந்து நின்று மரியாதை செலுத்தியபோது 'இது இவர் நம் மார்க்கத்தை சேர்ந்தவரல்ல' என நபித்தோழர்கள் கூறிய வேளையில், 'இது மனிதனின் சடலமல்லவா' என்று கூறி மனிதத்தை கண்ணியப்படுத்திய மாநபி!
கணவன் தலாக் சொல்வதுபோல அவனிலிருந்து உனக்கு திருப்திகரமான வாழ்வு கிடைக்கவில்லை எனில், திருப்பி உனக்கும் கணவனிலிருந்து விடைபெறலாம் எனக் கூறி ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவ நீதியை வழங்கிய நீதி நபி!
நீ ஒருவரைப் பார்த்து புன்னகைத்தால் கூட அது உனக்கு தர்மம் என நற்பண்பின் அடையாளத்தை சொல்லித் தந்த நற்குண சீலர்!
உங்களுக்கு உங்கள் மார்க்கம், அவர்களுக்கு அவர்கள் மார்க்கம், மற்ற மதங்களை கேலி செய்யவோ, அவமதிக்கவோ கூடாது என்று கற்பித்த கண்ணிய நபி!
பெண் என்பவள் பெரிதும் மதிக்கப்பட வேண்டியவள் என்று ஆரம்பக் காலத்திலேயே சமூகத்திற்கு உணர்த்திய இறைத் தூதர்!
வழியில் பிறருக்கு தீங்கிழைக்கும் சிறிய முள்ளைக் கண்டாலும் அதை அகற்றாமல் முன்னோக்கி செல்லக் கூடாது என்று சமூகத்திற்கு கற்றுத் தந்த தீர்க்கதரிசி..!
அறிவு என்பது விசுவாசிகளின் தொலைந்துப் போன சொத்து, அதை எங்கு கண்டாலும் பொறுக்கி எடுத்துக் கொள் என நினைவூட்டிய நபி!
இன்னும் அவர்களைக் குறித்து நிறைய பேசலாம்..!
எவ்வளவு எழுதியும், சொல்லியும் என் வரிகள் முழுமையடைய போவதில்லை.
முஹம்மது எனும் ஆளுமையை அறிய என்னை ஊக்கப்படுத்தியதற்கு என் நண்பருக்கு ஆயிரம் நன்றிகள்.
பாசிசத்தைப் பிரச்சாரம் செய்து நபி நிந்தனைகளைப் பரப்பும் மனித தோழமைகளுக்கு..
நீங்களும் இந்த மா மனிதரைக் குறித்து இனியாவது கற்றுக் கொள்ளுங்கள்.
முஸ்லிம் மார்க்கத்தின் கண்ணியம், உண்மைகளை விளங்கிக் கொள்ளாத சில முஸ்லிம் பெயர் தாங்கிகளை, மனிதாபிமான மிக்க முஹம்மது நபியோடு ஒப்பீடு செய்யாதீர்கள்!
நமது பாரத வேதங்களிலும் கூட முஹம்மது நபியைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதாம்!
அதைப்பற்றி நான் படிக்கவில்லை..
சமஸ்கிருதம் கற்றுத் தெரிந்துக் கொண்ட அறிஞர்கள் உண்மையை மறைக்காமல் மக்களிடம் வெளிப்படுத்துவார்களா?

0 comments:
Post a Comment