• Latest News

    February 12, 2021

    பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக றஹீம் தெரிவு. அ.இ.ம.கா உறுப்பினர்களிடையே மனக்கசப்பு

    சிராஜ் -

    பொத்துவில் பிரதேச சபையின் அதிகாரம் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸின் வசமானது. பொத்துவில் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது. இதனால், தவிசாளர் பதவியை வகித்த முஹமட் வாசித் தவிசாளர் பதவியை இழந்தார்.

    இதனால், பொத்துவில் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்காக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் பொத்துவில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதன் போது முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த அப்தல் றஹீம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இத்தெரிவின் மூலம் பொத்துவில் பிரதேச சபையின் அதிகாரம் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸின் வசமாகியது.

    கடந்த பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக முஹமட் பாசித் தெரிவு செய்யப்பட்டார்.

    தவிசாளர் முஹமட் பாசித் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராக போட்டியிட்டார். இவரை தேர்தலை வெற்றி பெறச் செய்வதற்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்ட முஸரப்பை தோற்கடிப்பதற்காகவும் அப்துல் றஹீம் (உதவித் தவிசாளர்)  முஹம்மது பாசித்தின் தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார். மேலும், பொதுத் தேர்தலின் பின்னர் முஹம்மது பாசித் தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.
    ஆயினும் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த முஹம்மது பாசித் தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்யவில்லை. இதனால், பொத்துவில் பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.

    இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களில் சிலர் அப்துல் றஹீமின் தலைமையில் எதிர்க்கட்சியிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தோற்கடித்தனர்.

    இந்நிலையில் தவிசாளர் பதவியை அடைந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தையுடைய அப்துல் றஹீமும், தவிசாளர் பதவியிலிருந்து முஹம்மது பாசித்தை படி இறக்க வேண்டுமென்ற நோக்கத்தையுடைய பாராளுமன்ற உறுப்பினர் முஸரப்பும் ஒரு நேர்கோட்டில் சந்தித்தனர். அதன்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களின் உதவியுடன்  அப்துல் றஹீம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

    தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட அப்துல் றஹீம் தாம் இன்று முதல் (12.02.2021) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து செயற்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து பொத்துவில் பிரதேச சபையின் அதிகாரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    இதே வேளை, தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள அப்துல் றஹீம் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமுடன் நெருக்கமான உறவைக் கொண்டவராவார். அப்துல் றஹீம் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் ஆலோசனையின் பேரிலேயே செயற்பட்டதாகவும், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக அப்துல் றஹீம் தெரிவு செய்யப்பட வேண்டுமென்றும் அதற்குரிய உபாயங்களை கையாளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

    அதன்படி அப்துல் றஹீம் பாராளுமன்ற உறுப்பினர் முஸரப்போடு செய்து கொண்ட உடன்படிக்கையின் படி பிரகாரம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆதரவை முஸரப்பின் உதவியுடன் பெற்றுக் கொண்டார்.

    இதே வேளை,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களும் தங்களை தவிசாளர் பதவியில் கண் வைத்திருந்தார்கள். அவர்கள் முஸரப்பின் வெற்றிக்கு உழைத்தவர்கள். அவர்களில் ஒருவருக்கு தவிசாளர் பதவியை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காது, தம்மை தோற்கடிப்பதற்கு முயற்சி செய்த  அப்துல் றஹீமை தவிசாளராக தெரிவு செய்யப்படுவதற்குரிய நகர்வுகளை பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டமையால் பொத்துவில் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

    எவ்வாறாயினும், தவிசாளர் தெரிவு விடயத்தில் அப்துல் றஹீம் மிகவும் சாதுரியமாக காய்களை நகர்த்தி வெற்றி பெற்றுள்ளார்கள்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக றஹீம் தெரிவு. அ.இ.ம.கா உறுப்பினர்களிடையே மனக்கசப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top