• Latest News

    March 27, 2016

    தீர்மானங்களில்லாத மு.காவின் தேசிய மாநாடு!

    சஹாப்தீன் -
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாடு கடந்த 19ஆம் திகதி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சனவெள்ளத்தினால் நிறைந்திருந்த இம்மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவருடன் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்களும், வெளிநாட்டுப் தூதுவர்களும் கலந்து கொண்டார்கள். இத்தேசிய மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் ரவூப் ஹக்கீம் பலத்த சவால்களையும், விமர்சனங்களையும் சந்தித்தார். கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர் பல சவால்களை வெற்றி கொண்ட ரவூப் ஹக்கீமுக்கு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகளை சமாளிப்பது பெரியதொரு கடின பணியாக இருக்கவில்லை. அவர் மாநாட்டை நடாத்தி முடித்துள்ளார்.

    ஆயினும், மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா என்றும் ஆராய வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் கட்சிக்கும், தமது தலைமைப் பதவிக்கும் சவால்கள் ஏற்பட்ட போது அதனை முறியடிப்பதில் பெரும் பங்காற்றிய தவிசாளர் பசீர் சேகுதாவூத், செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி ஆகியோர்களுடன்தான் ரவூப் ஹக்கீமுக்கு தற்போது பலத்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. சனவெள்ளம் கூடிய போதிலும் தேசிய மாநாட்டில் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமையால் 19வது தேசிய மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கம் என்னவென்று கட்சியின் ஆதரவாளர்கள் கேட்கின்றார்களும், எதிர்க் கட்சிக்காரர்களும் கேட்கின்றார்கள்.

    முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களாக உள்ளார்கள். கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் காணப்பட்டாலும் கட்சியின் ஆதரவாளர்கள் கட்சியோடுதான் உள்ளார்கள் என்று பெருமை கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு இடமுண்டு. ஆனால், தேசிய மாநாட்டில் முடிவுகள் எடுக்கப்படாமையால் இந்த பெருமையை இரட்டிப்பாக்க முடியவில்லை. 

    ஒரு கட்சியின் தேசியமாநாடு பல நோக்கங்களின் அடிப்படையில் நடைபெறும். அதில் கட்சியின் செல்வாக்கை காட்டுவதும், கட்சியின் கொள்கைப் பிரகடனத்தை செய்வதும், தாம் சார்ந்த சமூகத்தினதும், நாட்டினதும் நன்மை கருதி தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொள்வதும் முக்கியமாகும். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டில் கட்சியின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், கொள்கைப் பிரகடனமும், தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், தேசிய மாநாடு குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆதலால், ரவூப் ஹக்கீம் தேசிய மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் இருந்த விமர்சனங்களை விடவும் வேறுபட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

    மேலும், மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி, பிரதம மந்திரி, எதிர்கட்சித் தலைவர் ஆகியோர்களிடத்திலும், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடத்திலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் முஸ்லிம்கள் குறித்து எந்ததொரு தீர்மானமுமில்லை என்று அவர்களின் உரைகள் எடுத்துக் காட்டியுள்ளன. அவ்வாறாயின் இவர்கள் தேசிய மாநாட்டிற்கு அழைத்து வரப்பட்டது எதற்காக என்று மற்றுமொரு கேள்வி முன் வைக்கப்படுகின்றது. தலைவர்கள் தேசிய மாநாட்டிற்கு அழைத்து வரப்படுவது கட்சிக்கு பெருமை மாத்திரமல்ல. அவர்கள் அங்கு கூடியிருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைச் சொல்வதும் கட்சியின் செல்வாக்கை பல மடங்கு அதிகரிக்கச் செய்ய உதவும் ஒன்றாகவும் இருக்கும். ஆயினும், ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோர்கள் மேடையை தமது கொள்கையையும், அரசியல் எதிரியையும் தாக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது உண்மையாகும்.

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவை தாக்கிப் பேசினார். அவரினால் அரசாங்கத்தை அசைக்க முடியாதென்ற தொனியில் கருத்துக்களை இடித்துரைத்தார். ஆனால், இனப் பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைக்கவுள்ளோம் என்று அவர் தொட்டுக் காட்டவுமில்லை. மட்டுமன்றி, முஸ்லிம்களின் காணிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரின் கட்டுப்பாடடில் உள்ளன. அவற்றை விடுவிப்பதற்கான சமிக்கையும் கூட காட்டப்படவில்லை. பொத்துவில் முதல் புல்மோட்டை வரை முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் கபளிகரம் செய்யப்பட்டுள்ளன. வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என முஸ்லிம்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் உள்ளன. அவை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏதாவது சொல்லுவார் என்று முஸ்லிம்கள் எதிர் பார்த்தார்கள். ஆனால், அவர் எதனையும் விசேடமாக முஸ்லிம்களுக்குச் சொல்லவில்லை.

    பிரதமர் ரணில்விக்கிரம சிங்கவும் நமது உரையில் முஸ்லிம்களுக்குரிய அரசியல் தீர்வு பற்றியோ, முஸ்லிம்களின் ஏனைய பிரச்சினைகளைப் பற்றியோ அவர் எடுத்துச் சொல்லவில்லை.

    தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தமது உரையில் அவர் பண்டா – செல்வா, டட்லி  - செல்வா, இலங்கை - இந்திய ஒப்பந்தங்களில் தமிழ் பேசும் மக்களையே குறிப்பிட்டுள்ளதாகச் சொன்னார். தமிழர்கள்தான் அதிகார பங்கீட்டை கேட்டுக் கொண்டதாகவும், ஏனையவர்கள் கேட்வில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
    இலங்கை - இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களைப் பற்றி எதனையும் குறிப்பிடவில்லை. இந்த ஒப்பந்தத்தின் படியே வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் இலங்கை முஸ்லிம்களின் முதுகில் எழுதிய அடிமைச்சாசனம் என்று மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் குறிப்பிட்டுள்ளார்.

    இதே வேளை, நாட்டில் ஏற்பட்ட இனப் பிரச்சினைகள், யுத்தம், கெடுபிடிகள், அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகள் போன்றவைகளினால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள். இதனால், தங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வேண்டுமென்று கேட்டார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற போது அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் வடக்கும், கிழக்கும் நிரந்தரமாக இணைய வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களுக்கு தனியான அதிகார அலகு தர வேண்டுமென்று நிபந்தனை போட்டார். அவர் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் அதிகார அலகை கேட்டார். ஆகவே, முஸ்லிம்களுக்கும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் சுயநிர்ணயத்துடன் அதிகாரங்களைக் கொண்டவர்களாக அரசியல் யாப்பில் குறிப்பிடப்படும் போது முஸ்லிம்கள் மாத்திரம் ஆளப்படும் சமூகமாக இருக்க முடியாது. முஸ்லிம்களும் ஒரு பிரதேசத்தை ஆளுகின்றவர்களாக இருப்பது அவசியமாகும். ஆதலால், இவைகள் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதென்று தெளிவுபடுத்திருக்க வேண்டும்.

    முஸ்லிம்களுக்கு அதிகார அலகு என்பதில் முஸ்லிம்களிடமும், கட்சிகளிடமும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இணைந்த வட-கிழக்கை வட-கிழக்கு தமிழர்கள் கோரிக் கொண்டிருப்பதனால் தங்களுக்கு தீங்குகள் ஏற்படுமென்று வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. ஆனால், வட- கிழக்கு முஸ்லிம்கள் தங்களுக்கு சுயநிர்ணயத்துடன் கூடிய அதிகார அலகு வேண்டுமென்று கேட்டால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் அதனை ஆபத்தான கோரிக்கையாக கதைக்கின்றார்கள். அரசாங்கம் தமிழர்களை மாத்திரமே திருப்திப்படுத்த எண்ணுகின்றது. தமிழர்களை அமைச்சர் பதவிகளைக் கொடுத்து திருப்தி கொள்ளச் செய்ய முடியாது. முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவிகளைக் கொடுத்தால் திருப்தியடைந்து கொள்வார்கள் என்பதே அரசாங்கத்தின் கணிப்பாகும். 

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டில் தமது கட்சிக்குள் தம்மோடு முரண்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தராஜபக்ஷவிற்கு காட்டமாக பதில் அளிப்பதற்கு மேடையைப் பயன்படுத்திக் கொண்டார். இது போலவே, ரவூப் ஹக்கீம் தம்மோடு முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத், செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி ஆகியோர்களுக்கு காட்டமாக பதிலளிப்பதற்கு மேடையை பயன்படுத்திக் கொண்டார். ரவூப் ஹக்கீம் கட்சிக்குள் தோன்றியுள்ள உள்ளக முரண்பாடுகளின் அழுத்தங்களின் காரணமாகவும், தமது ஏற்பட்ட ஆத்தரங்களின் காரணமாகவுமே தேசிய மாநாட்டில் தீர்மானங்களை எடுப்பதற்கு தவறினாரா என்றும் எண்ணத் தோன்றுகின்றது. தேசிய மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதும், தலைமையுரையும் போதும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமென்று தெரிவித்தார்.

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் முரண்பாடுகளும், பிளவுகள் ஏற்பட்டுள்ளமை புதிய விடயமல்ல. மர்ஹும் எம்.எச்எம்.அஸ்ரப்பின் காலத்திலும் அன்றைய தவிசாளர் சேகு இஸ்ஸதீன், தேசிய அமைப்பாளர் மையோன் எம்.எம்.முஸ்தபா போன்றவர்கள் தலைமையுடன் முரண்பட்டு பிரிந்து சென்றார்கள். சேகு இஸ்ஸதீன் மிகப் பெரிய அழுத்தங்களைக் கொடுத்தார். அவரின் சொந்த ஊரில் அஸ்ரப் கூட்டங்களை நடத்தினால் மேடையைச் சுற்றி கல்வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும். ஆயினும், அவரின் காலத்தில் நடைபெற்ற தேசிய மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற தேசிய மாநாடுகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
    ஆயினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடுகளில் 19வது தேசிய மாநாட்டின் மீது அரசியல் கட்சிகளினதும், அரசாங்கத்தினதும், உலக நாடுகளினதும் அவதானங்களும், முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்களும் அதிகமாகவே இருந்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இலங்கையை புதியதோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு அடித்தளமிடப் போகின்றது. இதற்காக உலக நாடுகளும், இலங்கை அரசாங்கமும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

    இந்தப் பின்னணியில் இலங்கையின் இனப் பிரச்சினையோடு தொடர்புடைய முஸ்லிம்கள் எத்தகைய தீர்மானங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டில் எடுக்கவுள்ளார்கள் என்று உலகமே அவதானித்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்களின் அதிக பட்ச ஆதரவைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் தீர்வில் தனி அதிகார அலகு கேட்கப் போகின்றதா அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இணைந்த வட-கிழக்கு கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கப் போகின்றதா அல்லது வடக்கும், கிழக்கும் தனியாக இயங்க வேண்டுமென்று கேட்கப் போகின்றதா என பல கேள்விகளுடன் இலங்கை அரசாங்கமும், சர்வதேச நாடுகளும், முஸ்லிம்களும், ஏனைய இன மக்களும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தீர்மானங்களின்றியே தேசிய மாநாடு நிறைவடைந்தது.

    இதே வேளை, முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வு வேண்டுமென்பதில் ரவூப் ஹக்கீம் உள்ளாரென்றும் தேசிய மாநாட்டில் அவரின் தலைமையுரை கோடிட்டுக் காட்டியது. அவர் தமதுரையில் 'உச்சக் கட்ட விட்டுக் கொடுப்போடு  தமிழர்களும், முஸ்லிம்களும் நாட்டிலே வாழ்கின்ற சிங்கள மக்களின் அபிலாசைகளையும் சரிவரப் புரிந்து கொண்டவர்களாக, தேவையில்லாத வீண் விசமத்தனமான பிரச்சாரங்கள், போராட்டங்கள் இவற்றை தெற்கிலே உருவாக்கின்ற சக்திகளை முறியடிக்கின்ற பாங்கில் மிக லாபமாக பல தசாப்த காலமாக இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களின் போராட்டத்திலே முன்னிலையில் நின்று போராடியதொரு தலைவர் என்ற அடிப்படையில் எல்லா சிறுபான்மைத் தலைமைகளையும் ஒன்றிணைத்து சகலருக்கும் நீதி, நியாயம் கிடைக்கக் கூடிய ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதில் நீங்கள் முன்னிலையில் நின்று பங்களிப்பு செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல் தீர்வுக்கும், முஸ்லிம் மக்கள் எதிர் பார்க்கின்ற அரசியல் தீர்வுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. அவற்றை நிபர்த்தி செய்ய வேண்டும். முஸ்லிம் மக்களிடமும், தமிழ் மக்களிடமும் காணப்படும் சந்தேகங்களை தீர்க்க வேண்டும். 

    கடந்த காலங்களில் தமிழர் தரப்பு ஆட்சி அமைத்த அரசாங்கத்தின் உறுதி மொழிகளை நம்பி ஏமாந்து, நொந்த சம்பவங்கள் உள்ளன. இதனால்தான் தமிழர் தரப்பு விட்டுக் கொடுக்க முடியாத இணைந்த வட-கிழக்கை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. இதே போன்று முஸ்லிம்களும் பேரினவாத சக்திகளினால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். அநியாயத்திற்குள்ளாகி உள்ளார்கள். எனவே, முஸ்லிம்களும் தங்களுக்குரியதை கேட்பதற்கு தயங்கக் கூடாது. அதற்காக மற்றவர்களிடம் தங்களது பொறுப்புக்களை ஒப்படைக்க முடியாது.

    கடந்த வாரம் நடைபெற்ற டெலோவின் தேசிய மாநாட்டில் கூட இணைந்த வட-கிழக்கில் முஸ்லிம்களுக்கும் அதிகார அலகு வழங்கப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இணைந்த வட-கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி அதிகார அலகு என்பது அலகு தென்கிழக்கு அலகாகவே அமைய வாய்ப்புள்ளதென்றும் தெரிய வருகின்றது. தென் கிழக்கு அலகில் உள்வாங்கப்படும் தமிழர்களை விடவும், இந்த அலகிற்கு வெளியே இணைந்த வட-கிழக்கில் உள்வாங்கப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாகும். 

    இவ்வாறு, முஸ்லிம்கள் முன்னால் பல சவால்கள் உள்ளன. இந்த சவால்களை வெற்றி கொள்வது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பணி மாத்திரமல்ல, ஏனைய முஸ்லிம் கட்சிகளினதும் கடமையாகும். இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லாது போனால், கட்சி மற்றுமொரு பிளவை சந்திக்கும். இதனால், முஸ்லிம்களின் அரசியல் பலவீனப்படுத்தப்படும். பிளவுகள் ஏற்படும் போது பல உள்வீட்டு இரகசியங்கள் வெளிவரத் தொடங்கும். அவை தனி நபர்களை மாத்திரம் பாதிக்காது முஸ்லிம்களின் அரசியலையும் பலவீனப்படுத்தும். ஏனெனில், முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ள மூன்று தரப்பினரும் முஸ்லிம்களின் அரசியலில் முக்கிய பங்காற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடையே காணப்படும் முரண்பாடுகள் பற்றி அடுத்த வாரம் ஆராயவுள்ளோம்.
    Virakesari weekly -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தீர்மானங்களில்லாத மு.காவின் தேசிய மாநாடு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top