மாத்தறை பிட்டபத்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
பின்தங்கிய கிராமம் ஒன் றினைச் சேர்ந்த 13 வயதுடைய பாட சாலை சிறுமி
ஒருவரை கூட்டாகவும் தனித்தனியாகவும் பாலியல்
பலாத்காரத்துக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 30 இற்கும் மேற்பட்ட
சந்தேகநபர்களைத் தேடி மாத்தறைப் பிராந்திய சிறுவர் மற்றும் மகளிர்
விவகார விசாரணைப் பிரிவு பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
பிட்டபத்தர பொலிஸாருக்கு கிடைத்த
முறைப்பாடொன்றுக்கு அமைவாக அதன் மேலதிக விசாரணைகளை மாத்தறை
பிராந்திய சிறுவர் மகளிர் விவகார விசாரணைப் பிரிவின் சிறப்புக்
குழுவொன்று ஆரம்பித்துள்ள நிலையிலேயே, இச்சம்பவத்துடன்
தொடர்புடையதாகக் கூறப்படும் அக்குரஸ்ஸ பிராந்தியத்தின் சுற்றுலா
ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர், மூன்று ஹோட்டல் முகாமையாளர்கள், ஒரு பெண்
உட்பட 12 பேரை இதுவரைக் கைது செய்துள்ளதாக தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
இவர்களில் ஐவரை மாத்தறை சிறுவர் மற்றும் மகளிர் விவகார விசாரணைப் பிரிவும் 7 பேரை பிட்டபத்தர பொலிஸாரும் கைது செய்ததாகவும் கைதானோரை விளக்க மறியலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பிட்டபத்தர பகுதியின் பின் தங்கிய கிராமப் புற பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வரும் குறித்த சிறுமியை பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டாகவும் தனித்தனியாகவும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்களில் 20 பேர் இதுவரை விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏனையோரையும் அடையாளம் காணப்பட்டோரையும் கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் சம்பவம் தொடர்பிலான முழுமையான விசாரணைகள் மாத்தறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜி.எச். மாரப்பனவின் மேற்பார்வையில் மாத்தறை சிறுவர், மகளிர் விவகார விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி வருணி போகஹவத்தவின் கீழான சிறப்புக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று வரை 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் குறித்த பெண் அவரது கணவருக்கு இந்த சிறுமியை பலாத்காரம் செய்ய ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று விசாரணைகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் நேற்று முன் தினம் மாத்தறை பிராந்தியத்தின் 6 ஹோட்டல்கள் மீது பொலிஸார் சோதனை நடத்தியதாகவும் இதன் போது சம்பவத்துடன் தொடர்புடைய அக்குரஸ்ஸ பிராந்தியத்தின் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் உட்பட ஹோட்டல் முகாமையாளர்கள் மூவரையும் மேலும் ஒருவரையும் கைது செய்ததாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இந் நிலையிலேயே குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்தோரை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
Thanks: Virakesari
0 comments:
Post a Comment