
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை
அரசாங்கத்திற்கு வற்புறுத்தலோ அழுத்தங்களோ கொடுக்கவில்லை.
இலங்கை அரசாங்கம் அடிப்படை மனித உரிமைகளையும் சட்டத்தையும்
நீதியையும் ஒழுங்காக பின்பற்றுவதால் தான் இத்தகைய அழுத்தங்கள்
ஏற்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மூதூர் மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்ற
கட்டிடத்தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று பங்கேற்று
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்
என்னுடன் பேசுகின்றபோதெல்லாம் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் நீதி
ஒழுக்கம் உள்ளிட்ட விடயங்களை சிறந்த முறையில் பின்பற்றும் நாடாக இலங்கை
இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுவார்.
இலங்கையை பொறுத்தமட்டில் என்னுடைய ஆட்சிக்காலத்தில்
அடிப்படை மனித உரிமை ,நீதி ஒழுங்கு ,இன மத வேறுபாடு அற்ற முறையில்
பின்பற்றப்பட வேண்டும் என நான் உறுதி கொண்டுள்ளேன். அதேநேரம்
தற்போது புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் சாசனத்திலும் மனித
உரிமைகள் மற்றும் நீதி ஒழுக்கம் உள்ளிட்ட விடயங்களை
உறுதிப்படுத்தினோம். இலங்கைவாழ் மக்கள் நல்லதொரு சமுதாயமாக மாற
நீதிக்கட்டமைப்பே அடிப்படையாக அமையும்.
அதற்கு நீதிச் சேவைகளும் உயர்ந்த மட்டத்தில் இருக்க
வேண்டும். அதேநேரம் நல்ல மனிதர்கள் உருவாக வேண்டும் என்றால் கல்விச்
சேவையும் சிறந்த முறையிலிருக்க வேண்டும். அப்போது தான் சிறந்த
குணமுடையவர்களையும் புத்திஜீவிகளையும் நாம் உருவாக்க முடியும்.
சட்டம் மக்களுக்கு நல்லுதவிகளை வழங்கி
உறுதுணையாகவும் இருக்கும். உலகின் பல நாடுகளிலும் மக்களின்
வாழ்க்கைத் தரங்கள் பல்வேறு விதமாக இருந்த போதும் அரச மற்றும்
அரசார்பற்ற நிறுவனங்கள் அவர்களை நெறிப்படுத்துமாயின் நல்லாட்சி
மலரும். அதனை உருவாக்கவே நாமும் பாடுபடுகின்றோம்.
நியாயமான சட்டங்கள் பாரபட்சம் இன்றியும்
நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் அரசாங்கத்தின் மீதும்
சட்டத்தின் மீதும் நம்பிக்கை கொள்வர். இலங்கையின் நீதித்துறையில்
காலதாமதம் உள்ளமையை ஏற்றுக்கொள்கின்றேன். அண்மை யில் கொழும்பு
கோட்டை நீதிமன்றில் 50 ரூபாய் திருடியமைக்கான வழக்கு 10 வருடங்களாக
நடந்துள்ளது என அறிந்தேன். இதனால் அரசாங்கத்தின் செலவீனங்கள்
அதிகரிக்கின்றமையை அறிய முடிகின்றது.
எமது நீதித்துறையில் உள்ள குறைபாடுகளை கண்டறித்து
அது தொடர்பில் எனக்கு அறிக்கை ஒன்றை தாருங்கள் என்று பிரதம
நீதியரசரிடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அதேபோல் கடந்த காலங்கள் போல் அல்லாது இம்முறை மாகாண
சபைகளுக்கு கல்விக்கான அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது முன்னேற்றகரமான செயல். எனினும் அண்மையில் நான் மாகாண
முதலமைச்சர்களை சந்தித்திருந்த போது மாகாண சபைகளில் கல்விக்காக
ஒதுக்கப்படும் நிதி வேறு துறைகளுக்கு பகிரப்படுவதாக
சுட்டிக்காட்டியிருந்தனர். அதனால் வரும் நாட்களில் அவ்வாறான
செயற்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை.
அத்துடன் கடந்த தேர்தலில் மூதூர் மக்கள் எனக்கு
வாக்களித்திருந்தனர் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. அதனால் அவர்களுக்கு
நன்றி கூற வேண்டிய கடமை உள்ளது என்றார்.
இந் நிகழ்வில் பிரதம நீதியரசர் ஸ்ரீ பவன்,அமைச்சர் ரவூப் ஹக்கீம், நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
Virakesari-
0 comments:
Post a Comment