• Latest News

    July 08, 2016

    கிழக்கு எழுச்சியும், மு.காவும்

    எஸ்.றிபான் -
    மு.கா பலத்த உள்ளக முரண்பாடுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அக்கட்சி வெளிவாரி ரீதியாக பாரியதொரு சவாலுக்கு முகங் கொடுக்க வேண்டியதொரு இக்கட்டில் மாட்டியுள்ளது. வெளிவாரியாக தோன்றியுள்ள சவாலுக்கு கட்சியின் ஒரு சில உயர்பீட உறுப்பினர்களினதும், கட்சியின் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினரும் ஆதரவாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் கட்சியின் உள்ளக முரண்பாடுகளில் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் நெருக்கமாக உள்ள உயர்பீட உறுப்பினர்களில் சிலரும் வெளிவாரியாக தோன்றியுள்ள சவாலுக்கு ஆதரவாகவுள்ளார்கள் என்பதுதான். இதனால், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டாலும், வெளிவாரியாக தோன்றியுள்ள சவாலை தொடர்ச்சியாக எதிர்கொள்ள வேண்டியவராக ரவூப் ஹக்கீம் உள்ளார். இந்த வெளிவாரி சவாலை வெற்றி கொள்வது என்பது ரவூப் ஹக்கீமின் சாணக்கியத்தினால் (தந்திரத்தினால்) வெல்ல முடியாது. கட்சிக்கு எதிராக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் கலையப்படும் போது அதனை வெற்றி கொள்ள முடியும்.

    இன்று மு.காவிற்கு வெளிவாரியாக தோன்றியுள்ள சவால் கட்சியின் தலைமைத்துவத்தை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டு வர வேண்டுமென்பதாகும். இந்த சவாலை மு.காவில் ரவூப் ஹக்கீமின் தலைமையை ஆதரிக்கின்றவர்களில் ஒரு குழுவினர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாது அலட்சியமாகவே பேசிக் கொள்கின்றார்கள். கிழக்கு மாகாணத்திற்கு மு.காவினை தலைமை வேண்டுமென்பதனை இவர்கள் இன்றைய கள நிலையை வைத்து அலட்சியப்படுத்தினாலும், அதற்கு தலைமை தாங்குபவரை வைத்து குறைத்து மதிப்பீடு செய்து கொண்டாலும் இவர்கள் மு.காவின் அரசியல் வரலாற்றில் பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஏனெனில், மு.காவின் தலைமையோடு முரண்பட்டு பிரிந்து சென்ற ஏ.எல்.எம்.அதாவுல்லா, றிசாட் பதியுதீன் ஆகியோர்கள் கட்சியை விட்டு பிரிந்து சென்ற போது மர்ஹும் அஸ்ரப்பின் காலத்தில் சேகு இஸ்ஸதீன், மையோன் முஸ்தபா போன்றவர்கள் பிரிந்து சென்று கட்சி அமைத்து தோல்வி கண்டார்கள். அது போலவே இவர்களின் நிலையும் அமையும் என்று கணித்துக் கொண்டார்கள். ஆனால், மர்ஹும் அஸ்ரப்பின் ஆளுமையையும், ரவூப் ஹக்கீமின் ஆளுமையையும் கணித்துக் கொள்ளவில்லை. இரண்டு தலைவர்களினதும் ஆளுமையையும் ஒரே மாதிரியாக எண்ணிக் கொண்டார்கள். அதாவுல்லா, றிசாட் ஆகியோர்கள் பிரிந்து சென்ற போது கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்கள் ரவூப் ஹக்கீமின் பக்கத்திலிருந்து நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார்கள்.

    ஆயினும், அதாவுல்லா தேசிய காங்கிரஸையும், றிசாட் பதியுதீன் மக்கள் காங்கிரஸையும் அமைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாது, மு.காவின் ஆதரவாளர்களில் ஒரு தொகையினரையும் பிரித்தெடுத்துக் கொண்டார்கள். இவர்களின் பின்னால் உள்ளவர்களில் பெரும் பகுதியினர் மு.காவின் முன்னாள் ஆதரவாளர்கள் என்பதனை மு.காவினரால் மறுக்க முடியாது. இவர்கள் இருவரும் மு.காவிற்கு பெரும் சவாலாகவே இருந்தார்கள். இவர்களில் றிசாட் தமது மக்கள் காங்கிரஸ் கட்சியை மு.காவினை விடவும் உயர்ந்ததாக, மக்கள் செல்வாக்கு மிக்கதாக மாற்றிக் கொள்வதற்கு அதிகம் ஈடுபாடுகளை காட்டிக் கொண்டிருக்கின்றார். மட்டுமல்லாது ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டுதான் வந்துள்ளது. தற்போது மக்கள் காங்கிரஸ் மு.காவின் இதயம், கோட்டை என்று வர்ணிக்கப்படும் அம்பாரை மாவட்டத்தில் தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கும், அதனை தமது கோட்டையாக மாற்றிக் கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆதலால், கிழக்கு மாகாணத்திற்கு மு.காவின் தலைமை வேண்டுமென்பதனை மு.காவினர் இலகுவாக தட்டிக் கழித்து முன்னேற முடியாது.

    கிழக்கு எழுச்சி
    கிழக்கு மாகாணத்திற்கு மு.காவின் தலைமைப் பதவி தரப்பட வேண்டுமென்று சொல்லுகின்றவர்கள் தம்முடைய இந்நகர்வுக்கு கிழக்கு எழுச்சி என்று பெயர் சூட்டியுள்ளார்கள். கிழக்கு எழுச்சியின் பின்னால் பிரதேசவாதக் கோசம் காணப்படுகின்றது. இதற்கு முன்னர் மு.காவிற்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தலைவரின் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டன. ஆனால், அப்போது கிழக்கிற்கு தலைமைப் பதவி தரப்பட வேண்டுமென்ற வாதம் முன் வைக்கப்படவில்லை. தலைவருக்கு எதிராக முரண்பாடுகளைக் கொண்டவர்கள் தங்களுக்கும்; அமைச்சர் பதவி தரப்பட வேண்டுமென்ற பின்னணியைக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் மு.காவினை விட்டு பிரிந்து சென்றவுடன் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டமை அத்தகைய கருத்துக்களை உண்மைப்படுத்தின.

    ஆனால், தற்போது கிழக்கிற்கு தலைமை வேண்டுமென்று கேட்பவர்கள் கட்சியின் ஆரம்ப காலப் போராளிகள். பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இல்லாதவர்கள். ஆயினும், இவர்களின் பின்னணியில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் உள்ளார்கள். இவர்கள் தங்களுக்கு பதவி கிடைக்கவில்லையே என்ற வேக்காட்டில் உள்ளவர்கள். மேலும், கிழக்;கு மாகாணத்தில் உள்ள ஒரு சில அமைப்புக்களும் கிழக்கு எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இன்னும் சில அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    இதே வேளை, கடந்த காலங்களில் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்ட போது முஸ்லிம்களின் அரசியல் பலம் பலவீனமடைந்து கொண்டமையைப் போன்று கிழக்கு மாகாணத்திற்கு தலைமைப் பதவி தரப்பட வேண்டுமென்ற கோசமும் முஸ்லிம்களின் அரசியலை பலவீனப்படுத்துவதாகவே இருக்கும். இவர்கள் மு.காவினை கைப்பற்றும் நோக்கத்தைக் கொண்டவர்களாக தம்மை காட்டிக் கொண்டாலும் அதற்கான வாய்ப்பும் பலமும் அவர்களிடம் இப்போதைக்கு இல்லை. இதனால், இவர்களின் நடவடிக்கையால் மு.காவின் ஆதரவுத் தளம் ஆட்டங்காணும். இந்த ஆட்டத்தில் கட்சியின் ஆரவாளர்களில் ஒரு குழுவினர் மாற்றுக் கட்சிகளில் இணைந்து கொள்வார்கள். இந்நிலை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கை கிழக்கு மாகாணத்தில் மேலும் வலுப்படுத்துவதற்கு உதவும். ஆயினும், கிழக்கு எழுச்சிக் கோசம் மக்கள் காங்கிரஸின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்;க்கப்பட்டாலும் மறு புறத்தில் ஐ.தே.க மற்றும் சு.கா ஆகிய இரு கட்சிகளையும் கிழக்கு மாகாணத்தில் பலப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தவொரு ஆபத்தையும் தாண்ட வேண்டியுள்ளது. 

    இன்று முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் சமூகம் பற்றிய சிந்தனை குறைவடைந்து பதவிக்கான சிந்தனை அதிகரித்துக் காணப்படுவதனைப் போன்று சமூக உறுப்பினர்களில் பலரிடம் சமூகப் பொறுப்பை காண முடியாதுள்ளது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் வெறும் அபிவிருத்தி, தொழில் ஆகியவற்றை மையப்படுத்தி அரசியலை செய்தமையே இதற்கான காரணமாகும். உரிமை அரசியலை முன்னிலைப்படுத்தி அதனோடு இணைந்தவாறு அபிவிருத்தி, தொழில் என்றவாறு அரசியலைச் செய்திருந்தால் மக்களிடமும் அந்த பற்றுதல் ஏற்பட்டிருக்;கும். தமிழர் தரப்பினர் இதனைச் சரியாக செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆதலால், முஸ்லிம்களின் அரசியல் நோக்கம் திசை மாறிப் போய்க் கொண்டிருக்கின்றது. 

    ஆதலால், இதனை மாற்றியமைப்பதற்கு ஒரு எழுச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், அந்த எழுச்சி கிழக்கு மாகாணத்திலிருந்துதான் தோற்றம் பெற வேண்டும். இன்றைய நவீனத்துவ அரசியலில் ஒரு எழுச்சி தோற்றுவிக்கப்பட வேண்டுமொயின் அதற்கான மக்கள் கூட்டமொன்று வேண்டும். அந்த மக்கள் கூட்டம் செறிவாக வாழும் பிரதேசமாக இருக்குமாயின் எழுச்சியை இலகுவாக ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆதலால், கிழக்கு எழுச்சி என்பது கிழக்கிற்கு மு.காவின் தலைமைப் பதவி தரப்பட வேண்டுமென்பதனை விடவும் முஸ்லிம்களின் இன்றைய பிரச்சினைகள், தொல்லைகள் போன்றவற்றில் முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கறையற்றுள்ளதால் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு எழுச்சி அவசியமாகும்.

    கிழக்கிற்கு தலைமை வேண்டுமென்ற கோரிக்கையின் பின்னணி என்ன?
    கிழக்கு மாகாணத்திற்கு தலைமைப் பதவி தரப்பட வேண்டுமென்பது மர்ஹும் அஸ்ரப் ஆலமரம் போன்றவர், இல்லை அவரை ஆலமரத்திற்கு ஒப்பிட முடியாது என்ற சொற்பத அர்த்தங்களின் விவாத மேடையல்ல. முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கையறு நிலையில் இத்தகைய விவாதங்கள் தேவையற்றது.
    கிழக்கு மாகாணத்திற்கு தலைமைப் பதவி தரப்பட வேண்டுமென்ற கோசம் முஸ்லிம் சமூகத்தில் பெரியதொரு சூட்டை ஏற்படுத்திக் கொள்ளாத போதிலும், ஆங்காங்கே அது பற்றி பேசப்படுகின்றன. கிழக்கு மாகாணத்திற்கு மு.காவின் தலைமை தரப்பட வேண்டுமென்று பற்ற வைக்கப்பட்டு வருகின்றன. சமூக இணையத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன. இந்தப் பின்னணியில் மு.காவின் தலைமையினதும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நடவடிக்கைகள் இன்று போல்தான் நாளையும் இருக்குமாயின் கிழக்கிற்கு தலைமை தரப்பட வேண்டுமென்ற கோசம் சூடுபிடித்தேயாகும்.

    கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் பொறுத்த வரை அதிகபட்சமான மக்கள் மு.காவினை ஆதரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இக்கட்சியில் உள்ளவர்கள் தங்களின் காணி, ஏனைய கட்டமைப்பு வசதிகள் போன்றவைகளிலும், முஸ்லிம்கள் தேசிய மட்டத்தில் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்காது பதவிப் போட்டியிலும், பதவியைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சூழ்ச்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு அச்சுறுத்தல்கள் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நபி(ஸல்) அவர்களை கேவலப்படுத்தும் வகையில் பொது பலசேனவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் கருத்துக்களை முன் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ள போதிலும் மு.கா அது பற்றி கவலை கொள்ளவுமில்லை. அதற்கு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை. முஸ்லிம்களின் உயிர்களை விடவும் மேலாக மதிக்கக் கூடிய நபிகள் நாயகத்தினை மரியாதைக் குறைச்சலாக பேசியதற்கே ரோசம் வரராதவர்கள் முஸ்லிம்களின் உரிமைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை காண்பார்கள் என்று சொல்லுவதற்கில்லை. மு.காவின் கடந்த 15 வருட கால வரலாற்றில் இத்தகைய நிலையே அதிகம் காணப்படுகின்றன.

    கட்சியின் கொள்கையில் பற்றுக் கொண்டவர்கள், சமூக நன்நோக்கம் கொண்டவர்கள் கட்சியை விட்டும் தூரமாக்கப்பட்டுள்ளார்கள். கட்சியை அழிக்க தடி எடுத்தவர்கள், தேர்தலுக்காக கட்சிக்கு வந்தவர்கள், கட்சியை விட்டு விலகி மீண்டும் இணைந்து கொண்டவர்கள், கட்சியின் சின்னத்திற்கு வேட்டு வைத்தவர்கள், பண வசதி படைத்தவர்கள் என்போரினால்தான் கட்சியின் உயர்பீடம் பெரும்பாலும் நிறைக்கப்பட்டுள்ளன. இதனால்தான் முஸ்லிம்களின் குரலாக தோற்றம் பெற்ற மு.கா பதவிகளுக்காக சண்டை போடும் கட்சியாக உள்ளது. கட்சியின் உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கை மர்ஹும் அஸ்ரப்பின் காலத்தை விடவும் சுமார் 03 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. தலைவரின் தலையை பாதுகாத்துக் கொள்வதற்காக ஹஸன்அலி, பசீர் சேகுதாவூத் போன்றவர்களினதும், இன்னும் சில சட்டத்தரணிகளினதும் ஆலோசனைக்கு ஏற்ப உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்தோடு மு.கா கட்சியை நிர்வகிக்கும் முக்கியஸ்ர்களின் குடும்பத்தை வாழ வைப்பதற்குரிய சத்திரமாக மாற்றப்பட்டுள்ளது. கட்சியின் உண்மைப் போராளிகள் புறக்கணிக்கபட்டுள்ளார்கள். கட்சிக்காக சிறை சென்றவர்கள் வீதிகளில் நிற்கின்றார்கள். கட்சியை  அழிக்க புறப்பட்டவர்கள் கட்சியில் முக்கிய பதவிகளில் உள்ளார்கள். இவை போன்ற காரணங்களினால்தான் கிழக்கு மாகாணத்திற்கு தலைமைப் பதவி தரப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்து கொண்டிருக்கின்றன. இக்கோரிக்கைகள் பட்டிதொட்டி எல்லாம் பேசப்படுவதற்கு முன்னதாக முஸ்லிம்களின் உணர்வுகளுடனும், தனித்துவத்துடனும் செல்லக் கூடியதொரு கட்சியாக மு.கா மாற்றம் பெற வேண்டும். பட்டிதொட்டி எல்லாம் பேசப்படும் நிலை உருவானால் பலரின் பட்டிகள் கழட்டப்படும் நிலை ஏற்படலாம்.

    இதே வேளை, கிழக்கு மாகாணத்திற்கு தலைமை வேண்டுமென்ற கோரிக்கை கட்சியை அழிப்பதற்கு மாற்றுக் கட்சியினர் மேற்கொண்டுள்ள சூழ்ச்சி என்று மு.காவில் ஒரு சாரார் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய கருத்துக்கள் காலத்திற்கு காலம் முன் வைக்கப்படுபவையாகும். மு.காவின் இயலாமையை மறைப்பதற்கு மற்றவர்களின் மீது பலியை போடும் அரசியல் தந்திரமாகும். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகளுக்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காது மௌனம் சாதித்துக் கொண்டிருப்பதும் மாற்றுக் கட்சிகளின் திட்டமிட்ட சதியா என்பதாலா? கடந்த மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தின் போதும் மௌனம் காக்கப்பட்டது. ஆனால், இன்று வரைக்கும் முஸ்லிம்களின் மீதான பௌத்த இனவாதிகளின் நடவடிக்கைகள் ஓயவில்லை. கடந்த காலத்திங்களில் முஸ்லிம்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, முஸ்லிம் சட்டத்தரணிகள் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போது முஸ்லிம்களின் அதிக பட்ச ஆதரவைப் பெற்றுள்ள மு.கா அவை பற்றி பேசாதிருப்பதனை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை என்று மு.காவினரால் சொல்ல முடியுமா? இவ்வாறு கட்சியின் நடவடிக்கைகள் இருக்கும் நிலையில் மாற்றுக் கட்சிகளின் சூழ்ச்சி என்று சொல்லுவது மக்களின் அபிப்ராயத்தை திசை திருப்புவதற்கான கருத்துக்களாகும்.

    கிழக்கு எழுச்சியாளர்கள் கோருவது போன்;று கிழக்கு மாகாணத்திற்கு மு.காவின் தலைமைத்துவம் தரப்பட்டால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமென்று சொல்;லுவதற்கில்லை. ஏனெனில், மு.காவின் உயர்பீடத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பலர் உயர்பீட உறுப்பினர்களாக உள்ளார்கள். இவர்கள் கட்சியின் உயர்பீடத்தில் சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதில்லை. அவர்கள் கட்சிக்கு வெளியே வந்து பிரச்சினைகளை பேசிக் கொள்வதாக தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்த உண்மை இருக்கும் போது மு.காவின் தலைமை மாத்திரம் மாறினால் கட்சியை கைப்பற்றிக் கொண்டால் மாத்திரம் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்குமென்று சொல்ல முடியாது. மேலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் உள்ளார்கள். கடந்த பாராளுமன்றத்தில் அதாவுல்லாவும் இருந்தார். இவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி பாராளுமன்றத்தில் எத்தனை தடவைகள் பேசியுள்ளார்கள் என்று சிந்திக்க வேண்டும். மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களைச் செய்தவர்கள் முஸ்லிம்களின் பிரச்சிகைளுக்கு தீர்வு வேண்டி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த வரலாறுகள் எதுவுமில்லை. தற்போது ஜெனிவாவில் ஐ.நாவின் மனித உரிமைப் பேரவை கூடிய இலங்கை விவகாரத்தையும் பேசிக் கொண்டிருக்கின்றது. தமிழர்களின் பிரதிநிதிகள் தமது சமூகத்தின் தேவைகள் பற்றி அங்கு சென்று பேசிக் கொண்டிருக்கின்றார்கள். சர்வதேச தலைவர்களை சந்தித்து ஆதரவு தேடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்களா என்;று கேட்கின்றேன்.

    இப்படியாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மு.காவின் உயர்பீட உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ள நிலையில் ஏதோ ரவூப் ஹக்கீம் மாத்திரம் குற்றம் இழைத்துள்ளார் என்பது போல் மு.காவின் தலைமையை கிழக்கு மாகாணத்திற்கு தர வேண்டுமென்று கோருவதனை நிறுத்த வேண்டும். மு.காவின் அனைத்து கட்டமைப்பிலுள்ளவர்களும் மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். இதனைச் செய்யும் போது கிழக்கு மாகாணத்தில் தலைவர்கள் உள்ளார்களா என்று கேட்க கூடாது. முஸ்லிம்களை வழி நடத்தக் கூடிய பலர் கிழக்கு மாகாணத்தில் உள்ளார்கள். ஆனால், ரவூப் ஹக்கீம் ஏன் குறி வைக்கப்படுகின்றார் என்றால் தலைமை சரியாக இருந்தால் மற்றவைகள் எல்லாம் தானாகவே முறைப்படுத்தப்பட்டு விடுமென்ற தத்துவத்தின் படியாகும்.
    நன்றி : விடிவெள்ளி
    08.07.2016


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு எழுச்சியும், மு.காவும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top