• Latest News

    November 18, 2017

    யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்கள்: உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை

    யாழ். குடாநாட்டை அச்சுறுத்தும் வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வட பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

    வட பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ். நகர பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி பணித்திருந்தார்.

    இதற்கமைய, குறித்த பொலிஸ் அதிகாரிகள் இன்று முற்பகல் 9.30 அளவில் யாழ். மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்தும் இதன்போது மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.

    சட்டம் ஒழுங்கை இறுக்கமாகக் கடைப்பிடித்து அனைத்து சந்தேகநபர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவினருக்கு நீதிபதி இளஞ்செழியன் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

    வாள்வெட்டு வழக்கொன்றில் பிணை மனு கோரப்பட்டபோது அரச சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்த் பிணை வழங்கக்கூடாது என கடுமையாக ஆட்சேபனை தெரிவித்ததுடன், கடந்த ஐந்து நாட்களாக குடாநாட்டில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்களை மன்றில் பிரஸ்தாபித்திருந்தார்.

    மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற இந்த வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக்கூடாது எனவும் நீதிபதியிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வாள்வெட்டு குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மிக விரைவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவினர் நீதிபதியிடம் இன்று தெரிவித்துள்ளனர்.

    வாள்வெட்டுக்கள் யாழ். குடாநாட்டில் பரவலாக இருந்தபோது நீதிமன்றம் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததை நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

    யாழ். குடாநாட்டு மக்களை துன்புறுத்தும் வகையிலான குற்றத்தை இழைத்தவர்களுக்கு யாழ். மேல் நீதிமன்றம் மன்னிப்போ பிணையோ வழங்காது என நீதிபதி அறிவித்துள்ளார்.

    மேலும், உடனடி நடவடிக்கையில் இறங்கி மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்கள்: உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top