• Latest News

    December 25, 2017

    சாய்ந்தமருதில் மு.காவின் வேட்பாளர்கள் வீடுகளுக்கு கல் வீச்சு தாக்குதல்

    அக்தர் -
    கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் சாய்ந்தமருது வேட்பாளர்கள் இருவரின் வீடுகளுக்கு இன்று நண்பகல் கல் வீச்சுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    சாய்ந்தமருது பிரதேசத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வருகை தர இருப்பதாக கிடைக்கப்பட்ட தகவல்களின் பின்னர் ஆத்திரம் கொண்ட பொது மக்கள்  இரு வேட்பாளர்களின் வீடுகளுக்கு கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். 

    கல் வீச்சுத் தாக்குதலுக்குள்ளான இவர்களின் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

    இதே வேளை, இவர்களின் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, சாய்ந்தமருதின் முக்கிய சந்திகளிலும் வீதிகளிலும் பொலிஸார் விசேட கடமைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

    இன்று அம்பாரை மாவட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விஜயம் செய்திருந்தார். இன்றைய தினம் அவர் சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சென்று அங்கு உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். இன்றைய தினம் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகை தந்து அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிட இருப்பதாகவும் தகல்வகள் வெளியானது.

    சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை பெற்றுத் தருவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால்தான் சாய்ந்தமருது பிரதேசத்தில் எந்தவொரு கட்சியும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்று சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அத்தோடு கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கு சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் சம்மேளனம் சுயேட்சைக் குழுவில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த வேட்பாளர்கள் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தப் பின்னணியில்தான் மேற்படி தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
    தற்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதோடு, வீதிகள் தோறும் இளைஞர்கள் கருப்புக் கொடியுடன் மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருப்பதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.







    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருதில் மு.காவின் வேட்பாளர்கள் வீடுகளுக்கு கல் வீச்சு தாக்குதல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top