• Latest News

    July 27, 2019

    விக்னேஸ்வரனின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்

    அஹமட்டீன் -
    இனவாதம், மதவாதம் பேசி அப்பாவி மக்களை அதற்குள் விழச் செய்து அரசியல் செய்யும் நடவடிக்கை அண்மைக் காலமாக  இலங்கையில் அரசியல்வாதிகளினால் பின்பற்றப்பட்டு வருகின்றது. சிறுபான்மையினருக்கு எதிராக  பௌத்த இனவாதத் தேரர்களினால் முன்னெடுக்கப்பட்ட இனவாதம், மதவாத நடவடிக்கைகளை தற்போது தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலரும் மேற்கொண்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

    வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் நீதியரசரும், அரசியல்வாதியுமாகிய சி.வி.விக்னேஸ்வரன் முஸ்லிம்கள் தொடர்பில் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.  அதாவது, கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ் கிராமங்களை முஸ்லிம் கிராமங்களாக முஸ்லிம்கள் மாற்றியுள்ளார்கள் என்று மட்டக்களப்பில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.  அது மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் உறவு என்பது பிட்டும், தேங்காய்ப் பூவைப் போல என்பது ஒரு புனைவுக் கதை என்றும் தமிழ்ப் பெண்களை முஸ்லிம்களாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அத்துரலிய ரத்ன தேரர் தம்மோடு தொடர்பு கொண்டு 09 ஆயிரம் தமிழ்ப் பெண்களை முஸ்லிம்களாக மாற்றியுள்ளதாக தெரிவித்தாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.  

    வடமாகாண முதலமைச்சரின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு அவரும் பௌத்த இனவாதிகள் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கக்குவதற்கு தொடங்கியுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ளலாமென்று அவர் கணித்துள்ளார் என்பதாகவே அவரது கருத்துக்கள் அமைந்துள்ளது. 

    விக்னேஸ்வரன் அடிப்படையில் ஒரு அரசியல்வாதியல்ல. அது மட்டுமன்றி அவர் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர்தான் பிரபல்யம் அடைந்தவருமல்ல. அவர் ஒரு சட்டத்தரணியாக, நீதியரசராக பணியாற்றி அதில் சாதித்துக் காட்டியதனால் புகழ் பெற்ற ஒருவர். இவரிடம் காணப்பட்ட இந்தப் புகழ்தான் அவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியலுக்கு அறிமுகம் செய்யவும், வடமாகாணத்தின் முதலமைச்சருக்கு பொருத்தமானவர் என்றும் அடையாளப்படுத்தவும் வழிகோலியது.  ஆதலால், அவர் அரசியல்வாதியாக வருவதற்கு முன்னர் அவர் ஒரு நீதியானவர், வடமாகாணத்தில் காணப்படும் தமிழ், முஸ்லிம் உறவுகளில் உள்ள விரிசல்களை இல்லாமல் செய்து, 1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கும் உதவுவார் என்று முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டார்கள். ஆனால், அவர் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. இதனால், விக்னேஸ்வரன் குறித்து முஸ்லிம்களிடையே காணப்பட்ட நம்பிக்கை காற்றுப் போன பலூனாக மாறியது. 
    தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முரண்பட்டு தமக்கு என தனியான ஒரு அரசியல் பாதையை வகுத்துக் கொண்ட விக்னேஸ்வரன் தாம் அரசியலில் வெற்றி பெற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு சவலாக விளங்க வேண்டுமென்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முஸ்லிம்களின் மீது சுமத்தியுள்ளார். 

    கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ் கிராமங்களை முஸ்லிம் கிராமங்களாக மாற்றியுள்ளார்கள் என்றால் இதனை விட இட்டுக்கட்டும், இனவாதமும் இருக்க முடியாது. முதலில் கிழக்கு மகாணத்தில் 300 முஸ்லிம் கிராமங்கள் இருக்குமா என்று ஆராய வேண்டும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற அம்பாரை மாவட்டத்தில் கூட 100 முஸ்லிம் கிராமங்கள் கிடையாது. இம்மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 15இற்கும் குறைவான கிராமங்களே உள்ளன. மேலும், கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ் கிராமங்களை முஸ்லிம்களின் கிராமமாக மாற்றி இருந்தால் தமிழர்களுக்கு ஒரு கிராமமும் இருக்க வாய்ப்பில்லை. கிழக்கு மாகாணத்தில் செனரத் மன்னன் முஸ்லிம்களை குடியேற்றுவதற்கு முன்னரே முஸ்லிம் கிராமங்கள் இருந்துள்ளன என்று வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. 

    விக்னேஸ்வரனின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில் மக்கள் கூறியதையே நானும் கூறினேன் என்று தெரிவித்துள்ளார். இதனை ஒரு பொறுப்பு வாய்ந்த பதிலாக ஏற்றுக் கொள்ள முடியும். அதுவும் முன்னாள் நீதியரசர், வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் என்ற பதவிகளைப் பெற்ற ஒருவரினால் பொறுப்பற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துவிட்டு, பொறுப்பற்ற வகையில் பதில் சொல்ல முடியாது. மேலும், பேசுகின்ற எல்லாவற்றிக்கும் ஆதாரத்தை தேட முடியாது. ஆதாரங்களை விசாரணை நடத்தியே கண்டறிய வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். சில குற்றச்சாட்டுக்களை சொல்லுகின்ற போது அது சமூகத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்காது. ஆனால், சில குற்றச்சாட்டுக்கள் பிரச்சினைகளையும், இன மோதல்களையும் ஏற்படுத்திவிடும். அத்தகைய குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களின்றி முன் வைக்க முடியாது. டாக்டர் சாபி சிஹாப்தீன்; சிங்கள பெண்களுக்கு சட்டவிரோமாக கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டார் என்று முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமுமில்லை என்று குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் மிகப் பெரிய அளவில் விசாரணைகளை மேற்கொண்டே இதனைத் தெரிவித்துள்ளார்கள். ஆனால், டாக்டர் சாபி சிஹாப்தீன் மீது சுமத்திய குற்றச்சாட்டு நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் மிகவும் மோசமானவர்கள் என்று பெரும்பான்மையினர் கருதும் நிலையை ஏற்படுத்தியது. முஸ்லிம் டாக்டர்களின் மீது பெரும்பான்மை இனத்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான டாக்டர் சாபி சிஹாப்தீன் இரண்டு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய துர்ப்பாக்கியத்தை ஏற்படுத்தியது. 

    இது போன்றதொரு குற்றச்சாட்டையே வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் முஸ்லிம்கள் தொடர்பில் முன் வைத்துள்ளார். ஆதலால், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை முன் வைக்க வேண்டும். மேலும், கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ் கிராமங்களின் பெயர்கள் முஸ்லிம்களின் பெயர் கொண்டதாக மாற்றப்பட்டதென்றால் அந்தப் பெயர் பட்டியலை அவரினால் முன் வைக்க முடியுமா என்று கேட்கின்றோம். முஸ்லிம்கள் 300 கிராமங்களின் பெயர்களை மாற்றினார்கள் என்று சொல்லுவது தமிழ், முஸ்லிம் உறவில் பகையை தோற்றுவிக்கும் ஒன்றாகும். 

    மேலும், 09 ஆயிரம் தமிழ்ப் பெண்களை முஸ்லிம்களாக மாற்றியுள்ளார்கள் என்று தெரிவிப்பது கூட மிகையான குற்றச்சாட்டாகும். மேலும், இந்தப் புள்ளி விபரத்தை வழங்கியவரைப் பற்றி விக்னேஸ்வரன் சிந்திருக்க வேண்டும். அத்துரலிய ரத்ன தேரர் இத்தகவலை வழங்கிய கூறுகின்ற போதே தெரிகின்றது இதிலுள்ள இனவாதம். அத்துரலிய ரத்ன தேரர் தொடர்ச்சியாக முஸ்லிம்களின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்துக் கொண்டு வருகின்றார். முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் பலவற்றை பறிப்பதற்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். அவர் தெரிவித்த கருத்தை ஆராய்ந்து பாராது கருத்துக்களை வெளியிட்டதன் மூலமாக பௌத்த இனவாத தேரர்களுடன் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், அத்துரலிய ரத்ன தேரருக்கும் இடையே உள்ள தொடர்புகளையும் ஆராய வேண்டியுள்ளது. 

    ஆகவே, வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனவாதத்தின் ஊடாக தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றன. பௌத்த பேரினவாதிகளும், பௌத்த இனவாத தேரர்களும் பலவிதமான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களின்றி முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். கன்னியா நீரூற்றில் உள்ள பிள்ளையார் கோயில் சிலையை அகற்றி அங்கு பௌத்த விகாரை அமைக்க முயற்சிக்கின்றார்கள். கல்முனையில் தமிழர்களுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிரான கோசத்தை எழுப்பி தமிழ், முஸ்லிம் உறவை சீர்குழைக்க முற்படுகின்றார்கள். வடமாகாணத்தில் தமிழர்களின் பூர்வீகக் காணிகளை அபரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும் பௌத்த இனவாத தேரர்களில் ஒருவராக இருக்கின்ற அத்துரலிய ரத்ன தேரரின் கருத்துக்களில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். அதனைவிடுத்து மக்கள் சொன்னார்கள் நானும் சொல்லுகின்றேன் என்று ஒரு படித்த அரசியல் தலைவன் சொல்லுவதன் மூலமாக அவரது நோக்கத்தை புரிந்துவிட முடிகின்றது. 
    ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்து விட்டு, அக்குற்றச்சாட்டுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படும் போது ஆதாரமற்றவை என்றால் ஆதாரமற்றது என்று நிரூபியுங்கள் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நடந்த ஒரு விடயத்திற்குத்தான் ஆதாரம் இருக்கும். அதனால், நடந்தாகத் தெரிவிக்கின்ற வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்தான் ஆதாரங்களை முன் வைக்க வேண்டும். 

    இன்று நாட்டில் பௌத்த இனவாதம் தேசிய கட்சிகளின் அரசியல் தலைவர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு வலிமை அடைந்து கொண்டு வருகின்றது. பௌத்த இனவாதம் ஒரே நேரத்தில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. பௌத்த இனவாதத்தை தூண்டுவதன் மூலமாக தனியே சிங்களவர்களைக் கொண்டு ஆட்சி அமைக்க முடியுமென்று இனவாத பௌத்த தேரர்கள் சிங்கள பௌத்த மக்களிடையே பிரச்சாரம் செய்கின்றார்கள். ஆகவே, தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற பௌத்த இனவாதத்தை முறியடிக்க வேண்டியதொரு காலகட்டத்தில் இருக்கின்றனர். இதனை மறந்து ஆதாரமற்ற வகையில் முஸ்லிம்களின் மீது வடமாகாண முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருப்பதன் மூலம் அரசியல் தேவைக்காகவே பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்று புரிகின்றது. 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விக்னேஸ்வரனின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top