சஹாப்தீன் -
அரசியல் கட்சிகள் தேர்தல் கால கொள்கைப் பிரகடனங்களை பிரச்சாரத்திற்கான
ஆயுதங்களாகப் பயன்படுத்துவதற்கு தயாரான நிலையில் உள்ளன. அரசியல் கட்சிகள்
வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு பல யுக்திகளைக் கையாளும், அதில் தேர்தல்
கால விஞ்ஞாபனமும் ஒன்றாகும். இதில் அரசியல்
கட்சிகள் தமது கொள்கை மற்றும் திட்டங்களை முன்மொழிவு செய்திருக்கும்.
பொதுவாக அரசியல் கட்சிகள் தேர்தல் கால விஞ்ஞாபனத்தை வாக்குகளைப் பெற்றுக்
கொள்வதற்குரியதொரு ஆயுதமாகவே வழக்கமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தல், மாகாண சபைத் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என ஒன்றன்
பின் ஒன்றாக தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும்
என்று உறுதியாக கூற முடியாது. எதிர்வரும் தேர்தல்களில் எந்தக் கட்சியை
எத்தகைய தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடும் என்று
சொல்ல முடியாது போனாலும், கடந்த கால தேர்தல்களின் அடிப்படையில் அரசியல்
கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இவ்வாறுதான் அமையுமென்று ஓரளவுக்கு சொல்ல
முடியும். பொதுவாக தேர்தல் விஞ்ஞாபனம் என்பது வாக்காளர்களை கவர்வதற்காக
முன் வைக்கப்படும் ஒரு போலி ஆவணமேயன்றி வேறு எதுவுமில்லை.
தேர்தல் முடிந்ததும் அரசியல் கட்சிகள் தங்களின் இலக்குகளை அடைந்து
கொண்டதும் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மாற்றமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும்.
வாக்காளர்களும் அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தையிட்டு கவலை
கொள்வதுமில்லை, கேள்வி கேட்பதுமில்லை.
இதே வேளை, தேர்தல் வந்ததும் பல தரப்பினரை அரசியல் கட்சிகள் தமது
இலக்கை அடைந்து கொள்வதற்கு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அதில் வாக்காளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புக்கள், சிறுபான்மையினக்
கட்சிகள், பிரதேச ரீதியாக உள்ள அரசியல்வாதிகள் எனப் பலர்
ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றார்கள். இதே வேளை, சில அமைப்புக்களும்,
கட்சிகளும், வாக்காளர்களும், ஊடகவியலாளர்களும் தேர்தல் காலத்தில் அரசியல்
கட்சிகளை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையும் இருக்கின்றது.
தேசிய கட்சிகளை எடுத்துக் கொண்டால் இரு வகையான அணுகு முறையை கையாண்டு
வந்துள்ளன. குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் இந்த அணுகு முறையை தெளிவாக
உணர்ந்து கொள்ளலாம். சிறுபானமையினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றியும், இது
மூவினங்களும் வாழும் நாடு என்றும் ஒரு கட்சி சொல்லும். அடுத்த கட்சி
சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக இது
பௌத்த நாடு. இதில் வேறு எந்த இனமும் உரிமை கொண்டாட முடியாதென்று சொல்லும்.
கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களை
எடுத்துக் கொண்டால் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியும் இந்த நடைமுறையைப் மாறிமாறிப் பின்பற்றி வந்துள்ளன.
ஆயினும், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட கட்சியின்
வேட்பாளரே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள். இன்றைய அரசியல்
சூழலில் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை இலக்கு வைத்து
ஐக்கிய தேசிய கட்சியும், பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளை
இலக்கு வைத்து பொது ஜன ஐக்கிய முன்னணியும் கருத்துக்களை வெளியிட்டுக்
கொண்டிருக்கின்றன. ஆனால், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக்
கொள்வதற்காக முன் வைக்கப்பட்ட அரசியல் தீர்வு, சிறுபான்மையினருக்கும்
அரசியல் அதிகாரம் என்பது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசியல்
தீர்வு குறித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்கள். ஆனால்,
எல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருந்து கொண்டிருக்கின்றன.
2015ஆம் ஆண்டு சிறுபான்மையினரின் தனிப்பெரும் வாக்குகளினால் வெற்றி
பெற்ற மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ், முஸ்லிம்
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழர்களின் ஒரு தொகை
காணி மீள கையளிக்கப்பட்ட போதிலும், முஸ்லிம்களின்
காணிகள் மீளக் கையளிக்கப்படவில்லை. அதற்குரிய முயற்சிகளை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கவில்லை. அதே வேளை,
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெற்றுக்
கொள்வதற்குரிய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆகவே, தமிழ்,
முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே தேசிய கட்சிகள் அரசியல்
தீர்வுகள் குறித்து பேசுகின்றன. ஆனால், அதில் உண்மையில்லை. அதனால், தேசிய
கட்சிகள் சிறுபான்மையினரின் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக
அரசியல் தீர்வு, சிறுபான்மையினருக்கு அதிகாரம்
என்று சொல்லிக் கொண்டும், சிங்கள மக்களின் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுக்
கொள்வதற்காக இது பௌத்த நாடு என்ற அடிப்படையிலான இனவாதக் கருத்துக்களையும்
முன் வைத்துக் கொண்டிருக்கின்றன. இவை தேர்தல் கால ஆயுதமாகவே இருந்து
கொண்டிருக்கின்றன.
இதே வேளை, பிரதான தேசிய கட்சிகள் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி
உடன்படிக்கைகளைச் செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும். இதற்கு
அத்தேசிய கட்சிகளுடன் இணைந்துள்ள சிறுபான்மையினக் கட்சிகள் தலையசைத்துக்
கொண்டிருக்கும். ஆனால், எந்தவொரு உடன்படிக்கையும் செய்து
கொள்ளப்பட்டிருக்காது. சில வேளைகளில் உடன்படிக்கை செய்திருந்தாலும், அதனை
மக்களுக்கு காட்சிப்படுத்தினாலும் அது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு ஆவணமாகவே
பயன்படுத்தப்பட்டுள்ளன.
சிறுபான்மைக் கட்சிகள் தேர்தல்களின் போது தேசிய கட்சிகளுடன் இணைந்து
கொண்டு செயற்படுகின்றன. இதன் போது தமது கட்சி சார்ந்த சமூகத்தை
திருப்திப்படுத்துவதற்கு அந்த சமூகத்தினர் வேண்டி நிற்கும் கோரிக்கைகளை
முன் வைத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன், தாம் ஆதரிக்கும்
ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டன என்பதுதான்
கடந்த கால அனுபவம். தாம் ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளரை இன ஒற்றுமையின்
அடையாளச் சின்னமாகவே வர்ணித்து கூறிய கதைகளை சிறுபான்மையினர்
மறந்திருக்கமாட்டார்கள். அந்த வகையில் சிறுபான்மைக் கட்சிகள் தமது
வழக்கமான பிரச்சாரத்தை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் மேற்கொள்வார்கள்
என்பதில் ஐயமில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றியே
பேசுவார்கள். இதனை தவிர வேறு எதனையும் ஏற்றுக் கொள்ளமாட்N;டாம் என்றும்
கூறுவார்கள். சர்வதேசத்திடம் முறையிடுவோம் என்றும் சொல்வார்கள். புதிய
அரசியல் யாப்புப் பற்றியும் அதிகம் பேசிக் கொள்வார்கள்.
மேலும், இறுதி கட்ட யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்,
காணாமால் போனவர்கள் பற்றியும் பேசுவார்கள். இவைகளில் அதிகமானவையாவது
நடைபெறும் என்ற நப்பாசையில் தமிழர்களில் பெரும்பான்மையினர் தமிழ்த் தேசிய
கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள். அக்கட்சி அடையாளப்படுத்தும்
ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு அளித்தும் உள்ளார்கள். ஆனால், ஒரு தொகை
காணியை மீட்டெடுத்ததைத் தவிர வேறு எதனையும் தமிழர்கள் அடைந்து கொள்ளவில்லை.
இன்றைய ஆட்சியை பாதுகாத்துக் கொண்டிருக்கும் பாரிய வேலைத் திட்டத்தையும்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்து கொண்டிருக்கின்றது.
ஆனால், இன்னும் மேற்படி கோசங்கiளேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆயுதமாக பயன்படுத்த உள்ளது.
இதே வேளை, முஸ்லிம் கட்சியினரை எடுத்துக் கொண்டால் தேர்தல் காலங்களில்
மாத்திரமே சமூகம் பற்றி பேசிக் கொள்வார்கள். எனைய காலங்களில் சமூகத்தை
மறந்து விடுவார்கள். முஸ்லிம் சமூகத்தின் உரிமை மீட்புக்களைப் பற்றி பேசிக்
கொண்டாலும், எந்த உரிமையையும் மீட்கவில்லை. இன்னும்
சமூகம் சார்ந்த உரிமைகளை இழந்து கொண்டிருக்கும் சமூகமாகவே முஸ்லிம்கள்
உள்ளார்கள். முஸ்லிம்கள் இழந்த ஒரு அங்குல காணியைக் கூட பெற்றுக்
கொடுப்பதற்கு சக்தியற்ற நிலையிலேயே முஸ்லிம் கட்சிகள் உள்ளன.
முஸ்லிம்களின் அதிகபடச் ஆதரவுக் கட்சி என்று மட்டுமுள்ள முஸ்லிம்
காங்கிரஸ் தேர்தல் காலங்களில் வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் சரியான
முடிவினை அறிவிக்காது. ஆனால், தமிழர்களின் கோரிக்கைகளுக்கு எதிராக
செயற்படமாட்டோம் என்று அக்கட்சியின் தலைமை தெரிவித்துக்
கொள்ளும். அதே வேளை, முஸ்லிம்களுக்கும் அரசியல் அதிகாரம் தரப்பட
வேண்டுமென்றும், கிழக்கு மாகாணம் தனியாக இருக்க வேண்டுமென்றும்
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துக் கொள்வார்கள்.
அம்பாரையில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கரையோர மாவட்டம்
பற்றியும்
பேசுவார்கள். முஸ்லிம்கள் இழந்துள்ள காணிகளை பெற்றுக் கொள்ள
வேண்டுமென்றும் தெரிவிப்பார்கள். சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி
சபையை தேர்தல் முடிந்ததும் பெற்றுத் தருவோம் என்றும் முஸ்லிம் காங்கிரஸார்
தெரிவிப்பார்கள். அதுமட்டுமன்றி கல்முனை முஸ்லிம்களின் இதயம்
அதனை இழக்க ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம் என்றும் கூறிக் கொள்வார்கள்.
ஆனால், இக்கோரிக்கைகள் எதனையும் முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றிக்
காட்டவில்லை. எல்லாம் தேர்தல் காலத்தில் மாத்திரம் பிரயோகிகப்படும்
ஆயுதமாகவே இருக்கின்றன. இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்
றிசாட் பதியூதீன் கிழக்கு மாகாணம் தனியாக இருக்க வேண்டுமென்று
தெரிவிப்பார். அத்தோடு வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றியும்
கருத்துக்களை முன் வைப்பார். அதே வேளை, தம்மீது அண்மைக் காலங்களில் முன்
வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் தேர்தலில் ஆயுதமாக பயன்படுத்தி
வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய நகர்வுகளை மேற்கொள்வார்கள்.
தேசிய காங்கிரஸின் தலைவரை எடுத்துக் கொண்டால் கிழக்கு மாகாணத்தின்
பிரிப்புக்கு நானே காரணம் என்று சொல்லுவார். ரணில் விக்கிரமசிங்க சாரதியாக
இருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாதென்று
மர்ஹும் அஸ்ரப் சொன்ன கதையைச் சொல்லுவார்.
இதே கருத்தை தற்போது ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பினரும் தெரிவித்துக்
கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் மற்றும்
தவிசாளர் ஆகியோர்களின் வழி காட்டுதல்களில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு
செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அஸ்ரப்பின் பாதையை
முஸ்லிம் காங்கிரஸ் மறந்து செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அதனால்தான்
தாங்கள் அஸ்ரப்பின் கொள்கையை வாழ வைப்பதற்காகவே ஐக்கிய சமாதானக்
கூட்டமைப்பில் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துக்
கொண்டிருக்கின்றர்hகள். அஸ்ரப்பின் கொள்கை அவரது மரணத்துடன் புதைக்கப்பட்டு
விட்டது. இவர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இருந்த காலத்தில் அஸ்ரப்பின்
கொள்கையை வாழ வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இவர்கள் ஏனைய
கட்சிகளைப் போலவே தமது கட்சியை வளர்ப்பதற்கு அஸ்ரப்பின் கொள்கையை வாழ
வைத்தல் எனும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்கள். மேலும், முஸ்லிம்
காங்கிரஸிற்கு எதிரானதொரு நிலைப்பாட்டையும் கொண்டுள்ளார்கள். அதாவது,
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் ரணில் விக்கிரமசிங்கவுடன்
இருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராகவே செயற்படும். ஜனாதிபதி
தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவையே ஆதரிக்கும் நிலைப்பாட்டை
இப்போது கீறியிட்டுள்ளார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பசீர் சேகுதாவூத் மஹிந்தராஜபக்ஷவையே
ஆதரித்தார். ரவூப் ஹக்கீமும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டிலேயே
இருந்தார். முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதே
நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். ஆனால், கட்சியின் செயலாளராக
இருந்த எம்.ரி.ஹஸன்அலி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் நிலைப்பாட்டைக்
கொண்டிருந்தார். ஏற்கனவே கட்சியின் தலைமையுடன் முரண்பாடு கொண்டிருந்த
ஹஸன்அலிக்கும் தலைமைக்கும் இடையே முரண்பாடுகள் மேலும் வலுத்துக் கொண்டன.
இதன் பின்னர்தான் ஹஸன்அலியின் செயலாளர் பதவியை பறிக்க
வேண்டுமென்ற கடுமையான நிலைப்பாட்டை ரவூப் ஹக்கீம் எடுத்தார். ஆதலால்,
அன்று மஹிந்தவை எதிர்த்தவர் இன்று மஹிந்தவின் தலைமையில் செயற்பட்டுக்
கொண்டிருக்கும் கோத்தபாயராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் வகையிலான
பச்சைக் கொடியை காட்டி இருக்கின்றார். தமது இல்லத்தில்
நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்களிடம் தமது இந்த நிலைப்பாட்டை சூசமாகத்
தெரிவித்துள்ளார்.
இதே வேளை, மலையகக் கட்சிகளை எடுத்துக் கொண்டால் தோட்டத்
தொழிலாளர்களின் சம்பளம் பற்றியும், தனியான வீடமைப்பு பற்றியும்
பிரச்சாரத்தை மேற்கொள்ளும். கூடவே மாற்றுக் கட்சிகளின் ஊழல்கள் பற்றியும்
மலையக கட்சிகள் தெரிவித்துக் கொள்ளும்.
இவ்வாறு தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் தேர்தல் காலங்களில்
மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் தாம்
ஏற்கனவே சொன்னவற்றை சாதித்துக் காட்டாமைதான். அத்தோடு, இலங்கை வாக்காளர்களை
எடுத்துக் கொண்டால் கட்சிகளின் கண் மூடித்தனமான விசுவாசிகள்
போலவே அதிகம் பேர் உள்ளார்கள். கட்சியின் கொள்கை, கொள்கையில் ஏற்பட்டுள்ள
மாற்றங்கள், மக்கள் பிரதிநிதிகளாக செயற்பட்டவர்களின் செயற்பாடுகள்
போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றவர்கள் மிகக் குறைந்த வீதத்தினராகவே
இருக்கின்றார்கள். இதனால், இத்தகைய வாக்காளர்களை அரசியல்
கட்சிகள் தமது இலக்கை அடைந்து கொள்வதற்கு இலகுவாகப் பயன்படுத்திக்
கொள்கின்றன. தலைவர்கள் சமூகத்திற்கும், கட்சியின் கொள்கைக்கும்
விசுவாசத்தைக் காட்டாது போனாலும் அதனையிட்டு கவலை கொள்ளாது, கட்சியின் மீது
தமக்கு இருக்கின்ற விசுவாசத்தைக் வாக்காளர்கள் காட்டிக்
கொண்டிருக்கின்றார்கள்.
இதனால்தான், தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களினதும்,
தலைவர்களினதும் தவறுகள், பிழைகளில் கூட நியாயத்தை கண்டு
கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தாம் கண் மூடித்தனமாக விசுவாசத்தைக்
காட்டிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் தங்களை வைத்து உலக அளவில்
வியாபாரம் செய்து
பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன என்பதனை மற்றவர்களின் மூலமாக
தெரிந்து கொண்டாலும், அவை உண்மையில்லை என்றே விவாதித்துக்
கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக முஸ்லிம் வாக்காளர்கள் ஏனைய வாக்காளர்களை விடவும் ஒரு படி
மேலே சென்று மோசமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் கட்சிகள்
சமூகத்திற்காக எதனையும் சாதித்துக் காட்டவில்லை என்பதனை அறிவார்கள்.
மாயைக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட போது
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இரண்டு வாரங்களில் மலையில்
உள்ள சிலை தரைக்கு இறங்கும். அதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்
பேசியுள்ளேன் என்றார். ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் சட்டத்திற்கு
விரோதமாக புத்தரின் சிலை வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ஆனால் புத்தர் சிலை இன்னும் அகற்றப்படவில்லை. அங்கு தேரர்கள்
தங்குவதற்குரிய நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்டு முடியும் தருவாயில்
இருக்கின்றன. ஆனால், முஸ்லிம் கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளை முஸ்லிம்
வாக்காளர்கள் மறந்து விட்டார்கள். இதனால், மீண்டும் தாம் கட்சிகளின்
கண் மூடித்தனமான விசுவாசிகள் என்று காட்டுவதற்கு கட்சிகளின் தலைவர்களின்
வருகை எதிர்பார்த்து பூமாலையுடன் வீதியில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
இதே வேளை, சுமார் 50 வீதமான முஸ்லிம் வாக்காளர்கள் தேர்தல் காலத்தை ஆயுதமாக
பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தங்களுக்கு
பொருட்களையும், அன்பளிப்புக்களையும் தர வேண்டும். அப்போதுதான்
வாக்களிப்போம் என்று தெரிவித்துக் கொண்டு, எல்லா அரசியல் கட்சிகளிடம்
வாங்குவதனை வாங்கிக் கொள்வார்கள். இறுதியில் தாம் எக்கட்சியின் கண்
மூடித்தனமான விசுவாசியோ அக்கட்சிக்கே வாக்களிப்பார்கள். இதனை ஒரு வகையான
அடிமைத்தனம் என்றும் கூறலாம்.
இதே வேளை, கல்முனை உபபிரதேச செயலகத்தை வைத்து அரசியல் செய்த முஸ்லிம்
காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் தலைவர் ரவூப் ஹக்கீம்
அமைச்சர் பதவியை ஏற்ற போது, பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், அலி சாஹிர்
மௌலானா ஆகியோர்கள் அமைச்சர் பதவிகளை பெறவில்லை.
கல்முனை பிரதேச செயலகப் பிரச்சினையை முஸ்லிம்களுக்கு பாதகமில்லாது
தீர்க்கும் வரை அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று
தெரிவித்திருந்தார்கள். ஆனால், பிரச்சினை தீரவில்லை. எத்தனை நாட்களுக்கு
பத்தியம் காப்பதென்று மீண்டும் அதே இராஜாங்க அமைச்சர் பதவிகளை தருமாறு
ஜனாதிபதியையும், பிரதம மந்திரியையும் கேட்டுள்ளார்கள். இந்நிலையில் ஹரிஸ்
அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளாகவும் தகவல்கள்
கூறுகின்றன. ஆகவே, முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமாச் செய்தது.
அதற்கு சமூகம் மை பூசியது. பின்னர் அமைச்சர் பதவியை
ஏற்றுக் கொண்டமை. கல்முனை பிரச்சினை தீரும் வரை அமைச்சர் பதவிகளை
ஏற்கமாட்டோம் என்று சொல்லிக் கொண்டவை யாவும் அரசியலுக்காகவே. இவர்களின்
இந்நடவடிக்கைகள்; சமூகத்திற்காக என்று யாரும புள்ளிகள் போட்டுவிட வேண்டாம்.
இப்போது அமைச்சர் பதவியை மீண்டும் கேட்டுக் கொண்டமையும்
அரசியலாகும். எந்த வேளையில் எந்தக் கோரிக்கையை ஆயுதமாக பயன்படுத்திக்
கொள்ள வேண்டுமென்று இலங்கை அரசியல்வாதிகள் தெளிவாக அடையாளங் கண்டு
வைத்துள்ளார்கள் என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
VIRAKESARI -

0 comments:
Post a Comment