• Latest News

    September 27, 2019

    மூவரில் வெற்றி வாகை சூடப்போவது யார்? இவர்கள்தான் வெற்றியை தீர்மானிப்பார்கள்!

    தற்போது இலங்கை மக்கள் அரசியல் ரீதியாக பரபரப்பான ஒரு சூழலை சந்தித்திருக்கின்றனர், நாட்டின் அடுத்த தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளப்போகும் தலைவரை தேர்வு செய்யும் மாபெரும் பொறுப்பு ஒன்று மக்கள் மத்தியில் தற்போது இருக்கின்றது.
    நாட்டில், தற்போது ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசியக் கட்சிகள் மூன்று தமது ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்துள்ளது.
    முதலாவதாக கடந்த ஒகஸ்ட் மாதம் 11ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி, முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.
    அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை தானும் களமிறங்குவதாக அறிவித்தார்.
    அதனை அடுத்து, தற்போது ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரை அறிவிப்பதில் தொடர் இழுபறிகளை செய்து வந்தது, வேட்பாளரை தெரிவு செய்வதற்காக பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள், குழப்பங்கள், மாற்றுத் தெரிவுகள் என இழுத்தடிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தெரிவு நேற்றையதினம் ஒருவாறு முடிவுக்கு வந்தது.
    அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்றையதினம் கூடி அமைச்சர் சஜித் பிரேமதாசவை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது.
    இந்நிலையில், மக்கள் மத்தியில் தற்போது மூன்று பிரதான தெரிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் மக்களின் தெரிவு யார்..?
    ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச இதற்கு முன்னர் கடந்த அரசாங்கத்தின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றியிருந்தார். இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் களத்தில் நின்று படையினரை வழிநடத்தி யுத்தத்தை நிறைவு செய்த பெருமை இவரைச் சாரும்.
    இதே காரணங்களை வைத்தே, யுத்த வெற்றியை வைத்தே கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மீண்டும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியானார்.
    ஆனால்... கடந்த 2015ஆம் ஆண்டு அரவது வியூகம் பிழைத்தது! யாரும் எதிர்பாரா வண்ணம் பொது வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்ததுடன் வரலாறு காணாத தோல்வியை மகிந்த தரப்பு பெற்றுக் கொண்டது.
    இந்நிலையில் தற்போதைய சூழலில் மீண்டும் மகிந்த தரப்பு புதிய ஒரு யுக்தியை பயன்படுத்தியிருக்கின்றது. தனது சகோதரரான கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தல் களத்தில் மகிந்த இறக்கியிருக்கின்றார். அரசியலில் கத்துக்குட்டியாக நுழைந்திருக்கும் கோத்தபாய ராஜபக்சவை மக்கள் எந்த அளவில் ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள் என்பதுதான் கேள்விக்குறி..? இரட்டைக் குடியுரிமை விவகாரம், வெள்ளை வான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களுடன் கோத்தபாய ராஜபக்சவின் ஆரம்பமே சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் கோத்தாவின் வெற்றி இங்கு தொக்கி நிற்கின்றது.
    அடுத்ததாக, மக்கள் சக்தியின் வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க களமிறங்கியிருக்கின்றார். மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு புது தெரிவாகவே இவர் இருக்கின்றார். இவரது தேர்தல் வெற்றியை இவரது பிரச்சாரங்களும் முன்வைக்கும் கொள்கை மற்றும் உறுதிமொழிகளுமே தீர்மானிக்கவுள்ளன.
    மேலும், கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்திலும் தற்போதைய ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்திலும் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை, ஏமாற்றம் என்பனவும் மாற்றுத் தெரிவாக அநுரகுமார திஸாநாயக்கவை தேர்ந்தெடுக்க வழிவகுக்கலாம்.
    மாற்றுத் தலைமை ஒன்று தேவை என மக்கள் கருதும் பட்சத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி உறுதியாகலாம்.
    அடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் களமிறங்கியவர் அமைச்சர் சஜித் பிரேமதாச.
    அமைச்சர் சஜித்தைப் பொறுத்த மட்டில் அவர் உத்தியோகபூர்வமாக வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றவராக அவர் காணப்பட்டார்.
    ஒட்டுமொத்தத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களின் அழுத்தத்தினாலும் ஆதரவினாலும் அமைச்சர் சஜித் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
    இந்நிலையில், மலையகத்தைப் பொறுத்த மட்டில் பெரும்பாலும் இதுவரை காலங்களிலும் ஜனாதிபதித் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே பெரும் ஆதரவினை வழங்கியிருந்தனர். மேலும், தற்போது அரசாங்கத்தில் இருக்கக் கூடிய மலையக மக்களின் பிரதிநிதிகளான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
    அதனைத் தவிர்ந்து முஸ்லிம் மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர் ரிசாட் தலைமையிலான குழு, மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவும் அமைச்சர் சஜித்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்து விட்டனர்.
    இந்த சமயத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் தமது முடிவினை அறிவிக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர், நாம் யாருக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்பதை விட யாருக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்பதையே முன்னிறுத்தி செயற்படவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
    இவ்வாறான ஒரு சூழலில் யுத்தத்தை முன்னின்று நடத்தியவர், தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர், பெருமளவான தமிழ் மக்கள் காணாமல் போனமை, வெள்ளை வான் கடத்தல்கள் என பல குற்றச்சாட்டுக்களை கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்சவிற்கு கூட்டமைப்பு தமது ஆதரவினை வழங்க முன்வரமாட்டார்கள் என்பது அனைவரினதும் கணிப்பு.
    எனினும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பல இக்கட்டான சூழல்களில் பெரும் பலமாக இருந்த கூட்டமைப்பு இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அல்லாமல் கோத்தபாய ராஜபக்ச வெற்றிப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக ஆதரவு வழங்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
    இதுபோன்ற பல அரசியல் தலைமைகளின் தனிப்பட்ட அல்லது கட்சி சார்பான முடிவுகள் அமைந்திருக்கும் நிலையில், இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த மூவரில் வாகை சூடப்போகும் அந்த ஒரு நபரை தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் இருக்கின்றனர். தற்போதிலிருந்து எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை இந்த நாட்டின் முடி சூடா ராஜாக்களாக பொதுமக்கள் இருக்கப் போகின்றனர்.
    tamilwin
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மூவரில் வெற்றி வாகை சூடப்போவது யார்? இவர்கள்தான் வெற்றியை தீர்மானிப்பார்கள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top