• Latest News

    September 04, 2019

    முஸ்லிம் பொது வேட்பாளர் கனவும் நிதர்சனங்களும்

    ஏ.எல்.நிப்றாஸ் -
     'கனவு காணுங்கள்' என்று டாக்டர் அப்துல் கலாம் சொன்னார். 'ஒரு முறை வந்தால் கனவு, இருமுறை வந்தால் ஆசை, அதுவே பலமுறை வந்தால் இலட்சியம்' என்பதும் அவரது வார்த்தைகளாகும். 

    தற்கால முஸ்லிம் அரசியலின் முன்னோடியான மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரஃப் கனவு பற்றி அடிக்கடி பேசிய வார்த்தைகள் அப்துல் கலாமின் முதுமொழியைக் காட்டிலும் முஸ்லிம் வெகுஜனங்களிடையே வெகுவாக பிரபலமாகியிருந்தது. அவர், 'பெரிதாக கனவு காணுங்கள். அப்படியென்றால்தான் சிறிதாகவேனும் ஏதாவது நமக்குக் கிடைக்கும்' என்று அடிக்கடி பொது வெளியில் உரையாறறும் போது குறிப்பிடுவார். 

    இந்த வழித்தடத்தில்தான், இப்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முஸ்லிம் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றி முஸ்லிம் அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் சிலர் கனவு காணத் தொடங்கியிருக்கின்றார்கள். இதுபற்றி பல கதைகள் உலா வருகின்றன. இந்தப் பின்னணியில் முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு சாதகமாகவும் அதனை விமர்சித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதை காணக் கூடியதாகவுள்ளது. 

    மாற்று யோசனை

    நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. மேல்மட்ட ஆட்சியாளர்கள் தொடக்கம் அடிமட்ட வாக்காளர்கள் வரை எல்லோரிடமும் இன்று தேர்தல் காய்ச்சல் மெல்ல மெல்ல தொற்றத் தொடங்கியிருக்கின்றது. தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அரசியல் களம் பரபரப்பு நிறைந்ததாக மாறியிருக்கின்றது. 

    பொதுஜன பெரமுண, மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் சார்பாக ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது கட்சியின் யாப்புக்கு கட்டுப்பட்டோ என்னவோ ஐ.தே.க.வும், அதேபோன்று சுதந்திரக் கட்சியும் தமது வேட்பாளர்கள் யார் என்பதை இன்னும் பொது மக்களுக்குச் சொல்லவில்லை. 

    இந்த அரசியல் பின்புலத்தில் தேர்தல் ஒன்று நடைபெற்றால் முஸ்லிம் மக்கள் யாருக்கு ஆதரவளிப்பது என்ற கருத்துப் பரிமாற்றங்கள் கடந்த ஒரு மாதமாக இடம்பெற்று வருகின்றன. முஸ்லிம்கள் (இன்னும் வேட்பாளராக அறிவிக்கப்படாத) சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிக்கலாம் என்று ஒரு தரப்பும், கோத்தபாயவை ஆதரிக்க வேண்டும் என்று மறுதரப்பும், முஸ்லிம்களின் மாற்றுத் தெரிவாக அனுரகுமாரவுக்கு வாக்களிப்பது சிறந்தது என்று இன்னுமொரு கூட்டத்தாரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். 

    இந்நிலையில்;, இன்னுமொரு குழுவினர் மாற்றி யோசிக்கத் தொடங்கியுள்ளனர். அதாவது, பெருந்தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதைக் காட்டிலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்கி அவருக்கு முஸ்லிம்கள் எல்லோரும் தங்களது வாக்குகளை அளித்தால் என்ன? என்பதுதான் அந்த யோசனை. 

    முஸ்லிம்கள் தனித்து போட்டியிடுவது பற்றிய கருத்துக்கள் முன்னைய காலங்களில் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வந்தாலும், அம்முயற்சி வெற்றிபெறுவதற்கான நிகழ்தகவுகள் குறைவாக இருந்தமையால் அதுவெறும் கனவாகவே இருந்து விட்டுப் போனதேயொழிய அதற்கான வியூகங்கள் வகுக்கப்படவில்லை. ஒரு எல்லைக்கு அப்பால் சென்று முஸ்லிம் சமூகம் சிந்திக்கவும் இல்லை. 

    ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் தனித்து போட்டியிடுவது தொடர்பாகவும், முஸ்லிம் பொது வேட்பாளர் குறித்தும் பலரும் தமது அபிப்பிராயங்களை இப்போது முன்வைத்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. நாமறிய இந்த முன்மொழிவை இந்த தேர்தல் பருவகாலத்தில் பொதுவெளியில் முதன்முதலாக சொன்னவர் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஸீர் அகமட் என்றே குறிப்பிடலாம். 

    அதன்பிறகு முன்னாள் கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா இகு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். 'முஸ்லிம் சமூகத்தின் பேரம்பேசும் சக்தியை பயன்படுத்துவதற்காக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தன்னார்வத்தை' அவர் வெளிப்படுத்தியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் போன்ற வேறு சிலரும் இது பற்றிய தமது நிலைப்பாடுகளை பிடிகொடுக்காமல் தெரிவித்துள்ளனர். ஹிஸ்புல்லா, ஹக்கீம் போன்ற சிலரது பெயர்கள் முன்மொழியப்படுகின்ற சமகாலத்தில், பொது முஸ்லிம் வேட்பாளர் குறித்த கலந்துரையாடல்களும் மந்திராலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகின்றது. 

    பகுத்தறிவுடன் சிந்திக்க

    இலங்கையில் முஸ்லிம் ஒருவர் தனித்துப் போட்டியிட்டு தனியே ஜனாதிபதியாக முடியாது என்பது சிறுபிள்ளைக்கும் தெரிந்த பொது அறிவாகும். இந்தச் சூழலில் முஸ்லிம்; சமூகத்தின் ஒன்றுதிரண்ட பலத்தை காட்டி, பேரம் பேசுவதே இவ்வாறு போட்டியிடுவதற்கான உந்துதல் என்றால், அது குறித்து புத்திசாலித்தனமாக ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், நியூட்டனின் இரண்டாம் விதியைப் போல இடம்பெறக் கூடிய எதிர்விளைவுகள்,  நாணயத்தின் இரு பக்கங்கள் போல காணப்படுகின்ற சாதகபாதகங்கள் தொடர்பில் முஸ்லிம்கள் தமது ஆறாம் அறிவை உச்சமாகப் பயன்படுத்த வேண்டிய காலமிது. 

    இலங்கையில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட முடியர்து என்பதே நிதர்சனமாகும். இலங்கை வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவரை தவிர உயர் அதிகாரமிக்க பதவி ஒன்றுக்கு சிறுபான்மையினரால் வர முடியவில்லை. இப்போதும் இந்த நிகழ்தகவுகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆனால் இங்கு இன்னுமொரு விடயம் இருக்கின்றது.

    அதாவது, கடந்த பல வருடங்களுக்;குள் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் ஜனாதிபதியையும் ஆளும் கட்சியையும் தீர்மானிப்பதில் முஸ்லிம்களின் வாக்குகள் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்தன. பெருந்தேசியக் கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசமும் சில இலட்சங்களாகவே இருந்தமையால், அக் கட்சிகளுக்கு தமிழர்களின் வாக்குகளைப் போலவே முஸ்லிம்களின் வாக்குகளும் அவசியமாக இருந்தன. 

    ஆனால் முஸ்லிம் வாக்குகள் பெருமளவுக்கு சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என பல கூடைகளுக்குள் பிரிந்திருந்தமையால், முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த  வாக்குகளையும் காட்டி பேரம்பேசுவதற்கான வாய்ப்பிருக்கவில்லை. தனியான ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவர்களுக்கு முஸ்லிம்கள் ஒருமித்து வாக்களிப்பார்கள் என்றால் அந்தப் பலத்தை காண்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
    கிடைக்கும் சாதகங்கள்

    இலங்கையில் முஸ்லிம்களின் சனத்தொகை 20 இலட்சத்திற்கும் அதிகமாகும். இலங்கையில் கிட்டத்தட்ட 15 இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களுள் சுமார் 12 இலட்சம் முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்தனர்.  

    இதேவேளை, இலங்கையில் இம்முறை ஜனாதிபதியாக ஒருவர் தெரிவு செய்யப்படுவதற்கு தேர்தலில் அளிக்கப்படுகின்ற மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். எல்லாத் தரப்பிலும் பலமான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு சரிநிகர் போட்டி காணப்படுமாக இருந்தால் யாராலும் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற முடியாது போக வாய்ப்புள்ளது. 

    இந்தச் சூழலில் முஸ்லிம் வேட்பாளரால் ஜனாதிபதியாக வர முடியாது என்றாலும் அவருக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளின் பலத்தால் குறிப்பாக, இரண்டாவது விருப்பு வாக்குகளின் மூலம் ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மை வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியும் என்று கருதப்படுகின்றது. அப்படிப் பார்த்தால் இலங்கை முஸ்லிம்களின் வாக்குகள் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் கடைசித் துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்பட வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.  

    அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின், தென்னிலங்கையிலும், மலையகத்திலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இருக்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நீண்டகால அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக பேரம்பேசுகின்ற ஆற்றலை இதன்மூலம் முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொள்ளலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

    தொடர்ச்சியாக பிரதான கட்சிகளின் துணைக் கட்சிகள் போல முஸ்லிம் கட்சிகளும், அக்கட்சியின் முகவர்கள் போல முஸ்லிம் அரசியல்வாதிகளும் வாக்குச் சேகரித்துக் கொடுக்கின்ற வேலையை கைவிட்டு, பல்வேறு சவால்கள் நிறைந்த இவ்வாறான முயற்சி ஒன்றை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியுமாயின், இலங்கை முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை தனியாக ஒரு கூடையில் வைத்து பெருந்தேசியத்திற்கு காட்ட முடியும் என்பதென்னவோ உண்மைதான். ஆனால் இதற்கு ஒரு மறுபக்கச் சிக்கல் இருக்கின்றது. 

    மறைந்துள்ள சவால்கள்

    முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது இது முதற்தடவையல்ல. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக இதற்கு முன்னர் ஏழு தேர்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுள் 1999, 2010, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில்  முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறங்கி போட்டியிட்டனர்.
    இதன்படி இதுவரை ஐந்து முஸ்லிம்கள் (ஏ.ரசூல், ஐ.எம்.இல்யாஸ், எம்.எம்.எம்.முஸ்தபா, எம்.சி.எம்.இஸ்மாயில், ஐ.எம்.மிப்லார் ஆகியோர்) போட்டியிட்டுள்ளனர். இவர்களுள் முன்னாள் எம்.பி. இல்யாஸ் மாத்திரம் இரு தடவைகள் ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் இறங்கியிருந்தார். 

    இந்த தேர்தல்களை நோக்கினால் ஆகக் கூடுதலாக முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 39,226 ஆகும். 2010 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட எம்.சி.எம்.முஸ்தபா இந்த வாக்குகளைப் பெற்றிருந்தார். 40ஆயிரம் வாக்குகளைக் கூட இலங்கை முஸ்லிம்களிடமிருந்து அவரால் பெற முடியவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் முஸ்தபா இருந்தார் எனினும் அவரால் எந்தப் பேரம் பேசலையும் மேற்கொள்ள முடியவில்லை.
    இதற்கு அடிப்படைக் காரணம், அவர் ஒரு முஸ்லிம் வேட்பாளரே தவிர முஸ்லிம்; சமூகத்தின் சார்பில் நிறுத்தப்பட்ட 'பொது வேட்பாளர்' அல்ல. இவ்வாறு போட்டியிட்டவர்களின்  உள்நோக்கங்களும் சமூகம் சார்பானதுதானா என்பது இன்னுமொரு சந்தேகம். ஆனால் இவ் வேட்பாளர்களுக்கு இலங்கையில் இருந்த இலட்சக்கணக்கான முஸ்லிம் வாக்குகளில் அரைவாசிப் பேர் கூட வாக்களிக்கவில்லை என்பதும் இதற்கு இன்னுமொரு காரணமாகும்.  

    செய்ய வேண்டியது

    எனவேதான், இப்போது முஸ்லிம் பொது வேட்பாளர் பற்றிப் பேசப்படுகின்றது. ஏனெனில் முஸ்லிம் தனிநபர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் ஆகக் கூடியது ஒரு இலட்சம் வாக்குகளைக் கூட பெறுவது சிரமம். எனவேதான் எல்லோருக்கும் பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கான களநிலைமைகள் ஆராயப்படுகின்றன. 

    ஆனால், இங்கு பிரச்சினை பொது வேட்பாளர் நிறுத்துவது மட்டுமல்ல. மாறாக, அவருக்கு இலங்கை முஸ்லிம்கள் வாக்களிக்கவும் வேண்டும். அப்பேர்ப்பட்ட ஒருவரே வேட்பாளராக நிறுத்தப்படவும் வேண்டும். பொது வேட்பாளரை நிறுத்தி விட்டு, பெருந்தேசியத்தை எதிர்த்து நின்று தேர்தல் கேட்டுவிட்டு, கடைசியில் ஒன்றரை இலட்சம் வாக்குகள்தான் அவர் பெறுவாராயின் அதில் பெரிதாக எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. அவருக்கு தனிப்பட்ட 'அனுகூலங்கள்' ஏதாவது கிடைக்கலாம் என்றாலும், முஸ்லிம் சமூகம் அதைவைத்து பேரம் பேச முடியாது. 

    இன்று நாட்டில் இனவாதமும் மதவாதமும் தழைத்தோங்கியிருக்கின்றது. இரு முனைகளில் இனத்துவ நெருக்குவாரங்கள் நடக்கின்றன. சஹ்ரான் குழுவினரின் முட்டாள்தனமான செயற்பாடுகள் முஸ்லிம்களை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றன. மறுபுறத்தில், முஸ்லிம்களின் வாக்குகளை பெருந்தேசியக் கட்சிகளின் எல்லா வேட்பாளர்களும் முஸ்லிம்களிடம்; வாக்குக் கேட்க வரவுள்ளனர். 

    இப்படியான ஒரு சூழலில், முஸ்லிம்கள் சார்பில் பொது வேட்பாளர்  ஒருவரை களமிறக்குவதை எந்த பெரும்பான்மைக் கட்சியும் விரும்பப் போவதில்லை. அதற்கெதிராக நிறைய சதிகளும் நெருக்குவாரங்களும் பிரயோகிக்கப்படும். எனவே பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் ஆபத்துக்களையும் கடந்தே இந்த கனவை நனவாக்கும் முயற்சியில் முஸ்லிம் சமூகம் ஈடுபட வேண்டியுள்ளது.    

    அப்படியென்றால், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு 10 இலட்சம் அல்லது குறைந்தது நான்கைந்து இலட்சம் வாக்குகளையாவது அந்த வேட்பாளருக்கு அளிக்க வேண்டும். இதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லாம் ஒன்றுபடவும் வேண்டும். அதைவிடுத்து, வழக்கம்போல பெருந்தேசியக் கட்சிகளுக்கு ஒரு கூட்டமும், பொது வேட்பாளருக்கு சிறிதளவான முஸ்லிம்களும் வாக்களித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. 

    மிக முக்கியமாக, இவ்வளவு சவால்களையும் கடந்து ஒரு சமூகம் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டுமென்றால், பொது வேட்பாளர் சிறந்த தெரிவாக, உருப்படியான அரசியல் ஆளுமையாக இருக்க வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தின் பெயரைச் சொல்லியும், வாக்குகளை வைத்து பேரம்பேசலை மேற்கொள்ளலாம் என்று சொல்லியும் மக்களிடம் வாக்குக் கேட்டால், பின்னர் அந்த வேட்பாளர் தனது வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். 

    அதைவிடுத்து, வழக்கமாக முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகள் செய்வதைப் போல முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு ஆட்சியாளர்களிடம் போய் தமது வாக்குகளைக் காட்டி, பேரம்பேசுதல் என்ற பெயரில் அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகளுக்காகவும் இன்னபிற வரப்பிரசாதங்களுக்காகவும் சோரம்போதல் கூடாது. அதற்காக சமூகத்தின் பெயரால் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டிய எந்த அவசியமும் முஸ்லிம்களுக்கு கிடையவே கிடையாது. 

    அதேபோல், ஏதாவது ஒரு பெருந்தேசியக் கட்சியின் கயிற்றை விழுங்கிக் கொண்டு, ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலுக்காக, ஏதேனும் ஒரு கட்சிக்கு மறைமுகமாக முஸ்லிம் வாக்குகளைச் சேகரிக்கின்ற ஆயுதமாக முஸ்லிம் வேட்பாளர் கோஷத்தை யாராவது தூக்கிப் பிடித்துக் கொண்டு வருவார்கள் என்றால், அதையும் முஸ்லிம்கள் நிராகரிப்பதே சிறந்த தெரிவாகும். 

    வரலாற்று தருணம்

    முஸ்லிம்கள் தனியான பொது வேட்பாளரை நிறுத்துவது, சிங்கள கடுந்தேசியத்துடன் இன்னும் முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்;க்கலாம். அதற்காக சிங்கள தேசியத்துடன் மல்லுக்கு நிற்கத் தேவையுமில்லை, பயந்து ஓடத் தேவையுமில்லை. எங்கள் வாக்குகளின் பலத்தை காட்டுவதற்காக தனித்து போட்டியிடுகின்றோம். எமது சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடன்படும் சிங்கள வேட்பாளர் ஒருவரையே நாம் ஆதரிப்போமே தவிர முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதியாக வரமாட்டார் என்ற விளக்கத்தை தெளிவாக அவர்களுக்குச் சொல்ல வேண்டும். 

    ஆக மொத்தத்தில் கனவு காண்பது என்பது, கனவு மட்டும் காண்பதல்ல. அதற்காக அரசியல்வாதிகள் மட்டுமன்றி, முழுச் சமூகமும் பாடுபட வேண்டும். இத்தனை சிக்கல்கள், சவால்களை எதிர்நோக்கி ஒரு சமூகம் பொது வேட்பாளரை இறக்குகின்றதென்றால் அதில் ஓரளவுக்கேனும் வெற்றி கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால், கோத்தபாய, அனுரகுமார மற்றும் சஜித் என இருக்கின்றவர்களுள் ஓரளவுக்கு நமது கோரிக்கையை நிறைவேற்றுபவர்களை ஆதரிக்கலாம். வீண் முரண்பாடுகளையும் நேர, பண விரயத்தையும் தவிர்த்துக் கொள்ளலாம். 

    நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் சார்பில் ஒருவர் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அது ஒரு வரலாற்று நிகழ்வாக அமைவது மட்டுமன்றி இலங்கை அரசியலில் அது பெரும் அதிர்வலையை அதற்கு சமாந்தரமான எதிர்ப்பலையையும் ஏற்படுத்தும். பெருந்தேசியக் கட்சிகள் முதலாவதாக முஸ்லிம்களின் நேரடி ஆதரவை கோரும். அது கிடைக்காது, என்று தெரிந்ததும் பொது வேட்பாளரை பலகோணங்களிலும் தாக்குவதற்கு பின்னிற்க மாட்டாது. 

    எனவே, முதலாவதாக முஸ்லிம் பொது வேட்பாளர் நிறுத்துவது பற்றிய முன்மொழிவுகள் பரிசீலிக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் இருக்கின்ற பெரும்பான்மைக் கட்சி வேட்பாளரில் ஒருவரை ஆதரிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்க வேண்டும். 

    பொது வேட்பாளரை நியமிப்பது என்றால் குறைந்தது 75 சதவீதமான முஸ்லிம்கள் பிராந்திய பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டும். முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிள் தண்ணீருக்கு ஒன்று தவிட்டுக்கு ஒன்று இழுக்காமல் ஒருவழியில் செயற்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தப்படும் பொது வேட்பாளர் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பவராகவும் பேரம் பேசலை சரியாக பயன்படுத்தும் இதயசுத்தி கொண்டவராகவும் இருப்பது இன்றியமையாதது. 

    ஏனெனில், முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தப்பட்டில் இது ஒரு துணிகர முயற்சிபோல இருக்கும். கனவு காண்பதை விட அதை செயலுருப்படுத்துவது சிரமங்கள் நிறைந்ததாகும். அந்த முயற்சியில், சமூகத்தின் தலைவிதியை திருத்தப் போய், தலையிடியை இருக்கின்ற தலையிடியை இன்னும் அதிகரித்துக் கொண்ட கதையாக அமைந்து விடக் கூடாது.
    (வீரகேசரி – 01.09.2019) 


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் பொது வேட்பாளர் கனவும் நிதர்சனங்களும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top