பர்தா அணிந்து க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதுவதற்குச் செல்லும்
முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்துக்குள்
அனுமதிக்கப்படவில்லை என வெளிவரும் செய்திகள் உண்மைக்குப்
புறம்பானவை என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிக்கை
வெளியிட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் பரீட்சை நிலையங்கள் சிலவற்றில்
பர்தாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவம் நேற்றும், நேற்று முன்தினமும் கொழும்பு–பொரளை
சி.டப்ளியூ..கன்னங்கரா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில்
இடம்பெற்றுள்ளது. இப்பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதுவதற்குச்
சென்ற 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்ப
தினமான கடந்த 2 ஆம் திகதி பர்தாவுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில்
நேற்றும், நேற்று முன்தினமும் அவர்கள் பர்தாவுடன் பரீட்சை
மண்டபத்தினுள் அனுமதிக்கப்படவில்லை.
முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் பர்தாவைக் களைந்து V வடிவில்
முந்தானையிட்டு பரீட்சை மண்டபத்துக்குள் வருமாறு
உத்தரவிடப்பட்டுள்ளார்கள்.
இதனால் நேற்றும், நேற்று முன்தினமும் முஸ்லிம் பரீட்சார்த்திகள்
பர்தாவைக் களைந்த பின்பே பரீட்சை மண்டபத்தினுள்
அனுமதிக்கப்பட்டனர்.
பரீட்சை மண்டப நுழைவாயிலில் இரு பொலிஸ் அதிரடிப்படை வீரர்கள்
கடமையில் இருந்துள்ளனர். அவர்களே இந்த உத்தரவினைப்
பிறப்பித்துள்ளனர். இதற்கான காரணத்தை பரீட்சார்த்திகளின் பெற்றோர்
சம்பந்தப்பட்ட அதிரடிப்படை வீரர்களிடம் வினவியபோது கல்வி
அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமையவே இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பரீட்சார்த்திகள் தங்களது தேசிய அடையாள அட்டையில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ள போட்டோவின் பிரகாரமே
அனுமதிக்கப்படுவர். தேசிய அடையாள அட்டை புகைப்படம் காதுகள்
தெரியும்படியே உள்ளது. எனவே அதன்படியே அனுமதிக்க முடியும் எனவும்,
கல்வி அமைச்சின் சுற்று நிருபம் இவ்வாறே தெரிவிக்கிறதெனவும்
கூறியுள்ளனர்.
இதனால் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் பல்வேறு
அசெளகரியங்களுக்குள்ளாகினர். அவர்கள் பர்தாவைக் களைந்து
முந்தானையை V வடிவில் அணிந்தே பரீட்சை மண்டபத்தினுள் பிரவேசிக்க
வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 2 ஆம் திகதி கெக்கிராவ கல்வி
வலயத்திற்குட்பட்ட மடாடுகமை ஜாயா வித்தியாலயத்தில் பரீட்சை
எழுதுவதற்குச் சென்ற சுமார் 80 பரீட்சார்த்திகள் பர்தாவைக் களைந்த
பின்பே பரீட்சை நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும். இச்சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சங்கம்
வன்மையாகக் கண்டித்திருந்தது.
‘இச்சம்பவம் பிழையான நடைமுறையாகும். அவர்கள் உள ரீதியில்
பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மாகாண
கல்விப் பணிப்பாளரை வேண்டியுள்ளேன்’ என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்
தலைவர் பிரியந்த பர்ணாந்து தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தையே
கல்வி அமைச்சர் மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ‘இது உண்மைக்குப்
புறம்பான தகவல் என்றும் அரசியல் லாபம் கருதி வெளியிடப்பட்டுள்ள
செய்தி எனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
பரீட்சைக்குத் தோற்றும் சிங்கள, தமிழ், முஸ்லிம் பரீட்சார்த்திகள்
எவ்வித இடையூறுமின்றி பரீட்சை எழுதுவதற்கான சூழல் ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
சம்பவங்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர்
என்.எம்.அமீன் புதிய அரசின் முஸ்லிம் விவகாரங்களுக்கு ஆலோசகர் நகீப்
மெளலானாவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
‘விடிவெள்ளி’ நகீப் மெளலானாவைத் தொடர்பு கொண்டு இவ்விவகாரம் தொடர்பில்
வினவியபோது சம்பவங்கள் தொடர்பில் கல்வியமைச்சரைத் தொடர்பு கொண்டு தீர்வு
பெற்றுக் கொள்ளப்படும் என்றார்.
- Vidivelli -

0 comments:
Post a Comment