ஐக்கிய தேசிய முன்னணி இந்த வாரத்தில் பொதுத்தேர்தல் சின்னம் தொடர்பான
பிரச்சினைக்கு தீர்வைக்கண்டு விடும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின்
செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று -24- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்
யானை அல்லது அன்னம் அல்லது மற்றும் ஒரு சின்னம் என்ற அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று அவர் தெரிவித்தார்.
எனவே சின்னம் என்ற பிரச்சினை தற்போது கட்சியை பொறுத்தவரை சிறிய பிரச்சினை என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜேவிபி மற்றும் தமிழ் தேசியக்
கூட்டமைப்பு என்பன இணைந்து முன்னணியாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியான
தகவல் குறித்து தாம் இன்னும் அறியவில்லை என்று காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரின் தலைமையில் புதிய முன்னணி
அரசாங்கத்துக்கு எதிராக போட்டியிட்டு இறுதியில் ஐக்கிய தேசியக்கட்சியுடன்
இணைந்துக்கொள்ளும் என்று காரியவசம் தெரிவித்தார்.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சி 90 ஆசனங்களை பெற்றால் கூட புதிய அரசாங்கத்தை அமைக்கமுடியும் என்று அவர் கூறினார்.
ஏனைய கட்சிகள் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டு அரசாங்கத்தை அமைக்க விருப்பம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை அரசாங்கம் கொண்டு வந்த குறைநிரப்பு யோசனையின்போது
செலவுக்கான நிதியை ஒதுக்க ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவு வழங்க தயாராக
இருந்தது.
எனினும் கடன்களை அடைப்பதற்கான திட்டத்துக்காக இது முன்வைக்கப்பட்டபோதே
ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டது என்று காரியவசம் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment