(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியில் நாளையும் நாளை மறுதினமும் ஊரடங்குச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவுள்ளது. கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இடர்வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வரையறைகளுடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

குறித்த பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு இன்று இரவு 8 மணிக்கு  மீண்டும் அமுல்படுத்தப்படும். இவ்வாறு இன்று இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு தொடர்ந்து திங்கட்கிழமை காலை 5 மணிவரை அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பின்னர் திங்கட்கிழமையிலிருந்து இடர்வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தினமும் காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்தோடு இடர்வலயங்களில் இனங்காணப்பட்டுள்ள சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படும் என்று கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்திருந்தது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை தெளிவுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.