• Latest News

    April 24, 2020

    அவசரத்தில் அரசாங்கம்

    எஸ்.றிபான் -  
    நாட்டில் கொவிட் 19 (கொரோனா) வைரஸின் தாக்கத்தின் வீரியம் அதிகரித்துக் கொண்டு செல்லுகின்றது. அரசாங்கம் இவ்வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியுள்ளது. ஆயினும், இதற்கு மருத்துவர்கள், பௌத்த பிக்குகள், பொது அமைப்புக்கள், எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. கொவிட் 19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தாத நிலையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியமை மக்களின் உயிரோடு விளையாடும் ஒன்றாகும் என்று பலரும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். என்ற போதிலும், அரசாங்கம் இந்த எதிர்ப்புக்களை கருத்திற் கொள்ளாது ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியுள்ளது. அரசாங்கத்தை பொறுத்தை வரை பாராளுமன்றத் தேர்தலை விரைவாக நடத்தியாக வேண்டும். தேர்தலை நடத்தாது பிற்போட்டுக் கொண்டு செல்லுவது அரசாங்கத்தின் செல்வாக்கில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசாங்கத் தரப்பினர் கருதுகின்றார்கள். இதனால், பாராளுமன்றத் தேர்தலை விரைவாக நடத்திவிட்டு, அதன் பின்னர் பிரச்சினைகளை கையாளலாமென்ற நோக்கத்தில் அரசாங்கம் அவசரப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. இவற்றினிடையே தேர்தலை பிற்போட்டுவிட்டு, பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சியினரும், புத்திஜீவிகளில் பலரும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    பாராளுமன்றத் தேர்தல்

    2015ஆம் ஆண்டு கூட்டப்பட்ட பாராளுமன்றத்திற்குரிய ஆயுட்காலம் 2020 ஓகஸ்ட் மாதத்தில்தான் முடிவடைகின்றது. கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கவில்லை. அதுமட்டுமன்றி ஜனாதிபதிக்கு இருந்த நிறைவேற்று அதிகாரத்தின் கொம்பு 19வது திருத்தச் சட்;டத்தின் மூலம் உடைக்கப்பட்டிருந்தது. இதனால், பாராளுமன்றத் தேர்தலில் நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதோடு, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் எனும் கொம்பை சீவி கூர்மைப்படுத்திக் கொள்வதற்கு 19வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கங்கனம் கட்டிக் கொண்டார். அதனால்தான் பாராளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைதற்கு முன்னதாகவே 19வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மார்ச் மாதம் பாராளுமன்றத்தை கலைத்தார்.

    இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. வேட்புமனுக்கள் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் 19 திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்தது. வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தற்போது மீண்டும் பாராளுமன்றத் தேர்தல் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜுன் 20 இல் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திகதியிலும் தேர்தல் நடைபெறும் என்பது சந்தேகம் என்றே தெரிகிறது.

    ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி கொள்ள வேண்டுமென்பதற்குரிய அனைத்து காரியங்களையும் ஆளுந் தரப்பினரும், எதிர்க்கட்சியினரும் முடுக்கிவிட்டார்கள். வழக்கம் போன்று பாராளுமன்றத் தேர்தலிலும் முஸ்லிம்களின் மீது சேறு பூசும் நடவடிக்கைளும் ஆரம்பித்து விட்டன.

    இந்தப் பின்னணியில்தான் கொவிட் 19 வைரஸின் தாக்குதல் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐயும் தாண்டிவிட்டது.

    அரசாங்கம் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டத்தை 18 மாவட்டங்களில் தளர்த்துவதற்கு முடிவு செய்தது. ஆயினும் அரசாங்கத்தின் இந்த முடிவினை இலங்கை மருத்துவர் சங்கம், தொற்று நோய்பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்தியதுறையினரும், துறைசார் நிபுணர்களும்  ஊரடங்கு சட்டத்தை அவசரப்பட்டு நீக்க வேண்டாம். கோவிட் 19 வைரஸ் தாக்குதல் குறித்து மாவட்ட அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பொது மக்களை பாதுகாப்பதற்குரிய விசேட வேலைத் திட்டங்களை கண்டறிந்ததன் பின்னர் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு முடிவுகளை எடுப்பது சிறந்ததென்று அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன் வைத்தார்கள். ஆனால், அரசாங்கம் மருத்துவர்களின் ஆலோசனையை கவனத்திற் கொள்ளவில்லை. ஊரடங்கு சட்டத்தை அவசரப்பட்டு நீக்கினால் பாரிய ஆபத்தை நாடு எதிர்கொள்ள நேரிடும். இன்னும் இரண்டு வாரங்களுக்கு பொது மக்கள் மிகவும் எச்சரிக்காக இருக்க வேண்டுமென்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தார்கள்.

    அரசாங்கம் 20ஆம் திகதி ஊரடங்கு சட்டத்தை தளர்த்திய போது கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு 271பேர் உள்ளாகி இருந்தார்கள். 21ஆம் திகதி காலை 7.00 மணிவரை இந்த வைரஸ் தொற்றுக்கு 304 பேர் ஆளாகியுள்ளார்கள். இதன்படி மருத்துவர்களின் கணிப்பு சரியாகவே இருக்கின்றது. சுமார் 30 மணித்தியாலங்களுக்குள் 30 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது மிகப் பெரிய ஆபத்தான அறிவிப்பாகும்.

    அவசரப்படும் அரசாங்கம்

    கொவிட் 19 வைரஸ் தொற்றால் மரணித்த முஸ்லிம்களை தகனம் செய்வதற்கு மருத்துவர்களின் ஆலோசனைகளே பிரதான காரணம் என்று அரசாங்கம் தெரிவித்தது. ஆனால், ஊரடங்கு சட்டத்தை இப்போதைக்கு நீக்க வேண்டாமென்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்த போது, அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசாங்கத்தின் இந்த முரண்பட்ட இரு முடிவுகளுக்கும் அரசியல் நோக்கமே பிரதான காரணமாகும்.

    வைத்தியர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு ஊரடங்கு சட்டத்தை இன்னும் நீடித்தால் பாராளுமன்றத் தேர்தலில் பின்னடைவுகளை சந்திக்க ஏற்படும் என்ற அச்சம் அரசாங்கத் தரப்பினருக்கு இருக்கின்றது. அதனால், ஊடரங்கு சட்டத்தை நீக்கி நாட்டில் கொவிட் 19 தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டோம் என்று அதனையும் ஒரு யுத்த வெற்றியாக காட்டுவதற்கு அரசாங்கம் நினைத்துக் கொண்டது. அதுமட்டுமல்லாது மக்கள் மத்தியில் இந்த வெற்றிப் பிரமிப்பை ஏற்படுத்திய சூட்டோடு பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு ஏற்றவகையில் அரசாங்கம் கொவிட் 19 வைரஸினால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ரூபா 5000 அரசாங்கம் வழங்கியுள்ளது.

    இந்த நிவாரணக் கொடுப்பனவை மக்கள் மறப்பதற்கு முன்னதாக பாராளுமன்றத் தேர்தலை நடத்தவும் வேண்டும். இதற்கு மாற்றமாக பாராளுமன்றத் தேர்தல் இன்னும் பிற்போடப்படுமாயின், ஊரடங்கு சட்டமும் நீடிக்குமாயின் பொது மக்கள் மற்றுமொரு நிவாரணக் கொடுப்பனவை எதிர்பார்ப்பார்கள். அதனை அரசாங்கத்தினால் ஈடுசெய்ய முடியாது. தற்போது அரசாங்கத்தின் அனைத்து வருமானங்களும் முடங்கியுள்ளன. இதனால், பாரிய பொருளாதார பின்னடைவை இலங்கை சந்தித்துள்ளது. இந்நிலையில் இன்னுமொரு கொடுப்பனவை மக்கள் எதிர்பார்த்து நிற்கும் போது அதனை நிறைவேற்ற முடியாததொரு நிலை உருவாகினால், அந்நிலை அரசாங்கத்தின் செல்வாக்கில் மிகப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்.  அது மட்டுமன்றி, பொது மக்களுக்கு ஏற்படும் வருமான ரீதியான பாதிப்பை எதிர்க்கட்சியினர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

    இவற்றிலிருந்து விடுபட்டு தமது இலக்கை அடைந்து கொள்வதற்கு இருக்கின்ற ஒரே வழி பாராளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதாகும். இதற்கு ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டும். அதனால்தான் அரசாங்கம் தமது தேவைக்காக ஆபத்தானதொரு முடிவினை எடுத்துள்ளது என்று குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

    ஆயினும் அரசாங்கம் தமது இத்திட்டத்தை வெளிக்காட்டாது, பொருளாதார பிரச்சினையை முன்னிலைப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. தற்போது கொவிட் - 19 தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை சீரழிக்க முடியாதென்று அரசாங்கத்தினர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    ஆகவே, அரசாங்கத்தின் அவசரத் தேவையாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற வேண்டும். இதற்காகவே அவசரப்பட்டு ஊரடங்கு சட்டத்தை நீக்கியுள்ளது. அதே வேளை, சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

    என்ற போதிலும், பொது மக்கள் கட்டுப்பாடுகளை பேணி சமூக விலகலை கடைப் பிடிப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியதும், அதனை பாதுகாப்பு தரப்பினர் இறுக்கமாக கையாண்டதுதான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு காரணமாகும்.

    கிளம்பும் எதிர்ப்புக்கள்

    இதே வேளை, தேர்தல் திணைக்களம் பாராளுமன்றத் தேர்தவை எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதிக்கு தள்ளிப்போட்டுள்ளது. ஆயினும், இத்திகதியில் கூட பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியுமா என்பது சந்தேகமாகும். தற்போது கொரோனா தொற்றின் வேகம் கொழும்பில் மிகவும் அதிகமாக இருக்கின்றது. இலங்கையை பொறுத்த வரை கொழும்பு முடக்கப்பட்டால் நாட்டின் முழு இயகத்திலும் பின்னடைவை ஏற்படுத்தும். அனைத்து தலைமைக் காரியாலங்களும் கொழும்பிலேயே அமைந்துள்ளது. 
     
    ஆதலால், நாட்டில் ஏனைய பிரதேசங்களிலும், கொழும்பிலும் கொரோனா தொற்று முழுமையாக இல்லாமல் போனால் மட்டுமே பாராளுமன்றத் தேர்தலை நடத்தக் கூடியதொரு சூழல் ஏற்படும். பொது மக்களிடம் கொரோனா பற்றிய அச்சம் இல்லாது போனால்தான் வாக்களிப்பதற்கும் செல்வார்கள். இந்த சூழலை ஏற்படுத்தாது பாராளுமன்றத் தேர்தலை நடத்தினால் ஜனநாயக வழிமுறை கேள்விக்கு உட்படுத்தப்படும்.

    அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை நீக்கியிருப்பது பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காகத்தான் என்று பரவலாக பேசப்படும் இன்றைய நிலையில் பௌத்த அமைப்புக்களும், பிக்குகளும் தமது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தலை இப்போதைக்கு நடத்த வேண்டாமென்று அரசாங்கத்தை கடுமையான தொனியில் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

    தற்போதைய நெருக்கடி நிலையில் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானமெடுக்கும் பட்சத்தில், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தயாராக இருப்பதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளது.

    தேர்தல் நடாத்துவதற்கு உசிதமான தருணம் இதுவல்ல. குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கு தேர்தல் நடாத்தப்படக் கூடாது. நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தலை நடாத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய அபாயம் அதிகளவில் காணப்படுகின்றன. ஜனாதிபதியின் தலைமையில் தேசிய பேரவை ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு பௌத்த அமைப்புக்களும், பிக்குகளும் தேர்தலை நடத்துவது குறித்தும், நாட்டின் தற்போதைய நிலை பற்றியும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆயினும், பௌத்த உயர்பீடத்தில் உள்ள அஸ்கரிய மாநாயக்கர்கள் இன்னும் கருத்துக்களை வெளியிடவில்லை. கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களை வைத்தியர்களின் ஆலோசனைப்படி தகனம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறிய இவர்கள். இந்த விவகாரத்தில் மௌமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

    இதே வேளை, தேர்தலை நடத்துவற்கு முன்னதாக மக்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டுமாறும் அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இதே வேளை, கொரோனா தொற்றிலும் முஸ்லிம்களை பணயம் வைத்து ஒரு சில ஊடகங்கள் இனவாதம் பேசிக் கொண்டிருக்கின்றன. கொரோனா தொற்றை முஸ்லிம்களின் மேல் சுமத்தி தாங்கள் நினைக்கும் அரசியல் சூழல் ஒன்றை உருவாக்க முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இது குறித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து கொரோனா காரணத்தை காட்டி அங்கு கடமையாற்றும் முஸ்லிம்களை தொழிலுக்கு வரவேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றி ஊடக அமைச்சர் தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். ஆயினும், இத்தகைய இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. வேண்டுமென்று ஒரு சமூகத்தை குறி வைத்து செயற்பட்டுக் கொண்டிருப்பதனையும், அவர்களை குற்றவாளிகயாகக் காட்டுவதற்கு இனவாதத்தை தூண்டுவதும் தடுக்கப்பட வேண்டும். சமூகங்களுக்கு இடையே முரண்பாடுகளையும், இனவாத குரோதத்தையும் ஏற்படுத்தி, அதன் மூலமாக கட்டியெழுப்படும் எதுவும் நாட்டின் எதிர்காலத்திற்கு ஆபத்தாகவே அமையும். 
    Vidivelli 24.04.2020
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அவசரத்தில் அரசாங்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top