சஹாப்தீன் -
நிந்தவூர் பொதுச் சந்தை மூடப்படும் அபாய நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. நிந்தவூர் பொதுச் சந்தையில் வியாபாரத்தை மேற்கொள்வதற்குரிய சகல வசதிகளும் உள்ளன. ஆயினும், பொது மக்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
பொதுச் சந்தைக்கு புறம்பாக மாந்தோட்டச் சந்தி, அலியான் சந்தி ஆகிய இடங்களில் மீன், மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதனால் பொதுச் சந்தைக்கு வருகின்ற மக்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வர்த்தகர்கள் தொழில் பாதிப்பை எதிர் கொண்டுள்ளார்கள்.பொதுச் சந்தையில் மாட்டிறைச்சி கடை, ஆட்டிறைச்சி கடை, கோழிக் கடை ஆகிய உள்ளன. ஆயினும், இக்கடைகளும் திறக்கப்படுவதில்லை.
பொதுச் சந்தையின் இந்த அவல நிலை பற்றி நிந்தவூர் பிரதேச சபை நடவடிக்கைகளை எடுக்காதிருப்பதாக பொதுச் சந்தையில் வியாபாரத்தை மேற்கொள்கின்ற வர்த்தகர்கள் குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள். இது பற்றி நாமும் சுட்டிக் காட்டியிருந்த போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதே வேளை, பொதுச் சந்தையில் மீன் மற்றும் மரக்கறி வகைககளின் விலை சற்று அதிகமென்று பொது மக்கள் தெரிவிக்கின்றமையை வியாபாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
இதே வேளை, மீன் மற்றும் மரக்கறி வகைகளை பொதுச் சந்தைக்கு பறம்பான இடங்களில் விற்பனை செய்வதனால் பொதுச் சுகாதாரத்திற்கு கேடு ஏற்படுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.
ஆதலால், சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மீண்டுமொரு தடவை கோரிக்கையை முன் வைக்கின்றோம். தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் பொதுச் சந்தை விவகாரத்தை மக்கள் மயப்படுத்தியதொரு பிரச்சினையாக சம்பந்தப்பட்டவர்கள் எதிர் கொள்ள வேண்டி ஏற்படும் என்பதனையும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வியாபார நடவடிக்கைகள் ஒரு இடத்தில் (பொதுச் சந்தையில்) மேற்கொள்ளப்படும் போது பொது மக்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்பதனையும் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

0 comments:
Post a Comment