• Latest News

    July 07, 2021

    ஆர்ப்பாட்டம் செய்வோரை துரத்தும் பொலிஸார் - 3 ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் 13 பேர் கைது!

    ( எம்.எப்.எம்.பஸீர்)

    நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். 

    பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள்  மறு அறிவித்தல்வரை தடை செய்யப்படுவதாக பொலிஸ் தலைமையகம் நேற்று  (6) அறிவித்த நிலையில், இன்று (7) முதல்  கோரிக்கைகள், உரிமைகளுக்காக போராடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிசார் தீவிரபப்டுத்தியுள்ளனர்.

    அதன்படி இன்று மாத்திரம் மூன்று ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் 13 பேர் பொலிஸாரால் கைது செய்யப்ப்ட்டனர். எவ்வாறாயினும் அவர்கள் அனைவரும் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்ட்ட போது பிணையில் செல்ல அந்தந்த பகுதி நீதிமன்றங்களால் அனுமதிக்கப்பட்டனர்.

    பொரலந்த விவசாயிகளின் ஆர்ப்பாட்டம்:

    மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன மற்றும் அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன  உள்ளிட்ட ஐந்து பேர் போகஹகும்புற பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

    கடந்த முதலாம் திகதி  மரக்கரி விவசாயிகளுக்கு உற்பத்திக்கான உரத்தைப் பெற்றுத் தருமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பிலேயே இவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

    மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன மற்றும் அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்னவுக்கு மேலதிகமாக  அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பதுளை பிராந்திய தலைவர் நந்தன ஹபுகொட, கலேதெண்ட பிரதேச குடிமகன் ஞாணபால சேனாதீர, தேசிய பிக்கு முன்னணியின்  பதுளை அமைப்பாளர் வீரகெட்டிய அனுராத தேரர் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

    கைது செய்யப்ப்ட்ட 5 பேரும் இன்று வெலிமடை நீதிவான்  பசந்த ஜயசேகர முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது அனைவரையும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில்  விடுதலை செய்ய நீதிவான் உத்தர்விட்டார்.

    ஜா எல ஆர்ப்பாட்டம்:

     முத்துராஜவல சதுப்பு நிலப் பகுதியை நிரப்பி முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்து ஜா எல - போபிட்டிய சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலருமான மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட இருவர் பமுனுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இன்று நண்பகல் 12.00 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    நீதிமன்ற உத்தரவை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

    ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதை தடுக்க  வெலிசர நீதிமன்றத்தால் நேற்று (06) தடையுத்தரவு பெறப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன  கூறினார்.

    இந் நிலையிலேயே  தடையுத்தரவை மீறி சந்தேகநபர்கள் செயற்பட்டுள்ளமை  தெரியவந்த நிலையில் குறித்த இருவரையும் கைது செய்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

    கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வெலிசறை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இதேவேளை, இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மேலும் சிலரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

    கொம்பனித் தெரு ஆர்ப்பாட்டம்:

    இதனிடையே இன்று முற்பகல் வேளையில், கொழும்பு 2, கொம்பனித் தெரு பொறியியல் கூட்டுத்தாபனம் முன்பாக  ஆர்ப்பாட்டம் நடாத்திக்கொண்டிருந்த போது  முன்னிலை சோசலிஷக் கட்சியின் பொதுச் செயலர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரை கொம்பனித் தெரு பொலிஸார் கைது செய்தனர்.

     அரச பொறியியல் கூட்டுத் தாபனத்தின் 9 ஊழியர்கள் பனியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தொடர்பில் அதற்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த 6 பேரும் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.

     கைது செய்யப்பட்ட 6 பேரும் இன்று மாலை கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களை  தலா 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார்.

     எவ்வாறாயினும் பிணையில் விடுவிக்கப்பட்ட 6 பேரும், கொம்பனித் தெரு பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தலின் பிரகாரம், பல்லேகலையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு அனுப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தை தடை செய்ய மறுத்த  கல்கிசை நீதிமன்றம்:

    அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட தரப்பினரால் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தடுக்க, தெஹிவளை பொலிஸாரால் கோரப்பட்ட தடை உத்தரவை கல்கிசை மேலதிக நீதவான் சஞ்ஜய விஜேசிங்க  இன்று நிராகரித்தார்.

    ஆர்ப்பாட்டத்தினூடாக தனிமைப்படுத்தல் விதிமுறை மீறப்பட்டால் அல்லது பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுமாயின், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய செயற்பட முடியும் என்பதை சுட்டிக்காட்டியே அவர் தடை விதிக்க மறுத்தார்.

    தெஹிவளை அநாகரிக தர்மபால வீதியிலுள்ள பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில்  இந்த ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    எனினும், இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான தடை உத்தரவை பிறப்பிக்குமாறு தெஹிவளை பொலிஸாரால் நீதிமன்றத்தில்  கோரப்பட்டது. அதனையே நீதிமன்றம் மறுத்தது.

    பொலிஸாரின் எச்சரிக்கை:

    பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் காரணமாக  கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள்  பனிப்பாளர்கள் நாயகம் அரிவித்துள்ளதால், மறு அறிவித்தல்வரை அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

    சுகாதார ரீதியிலான ஆபத்தை தோற்றுவிக்கும் ஆர்ப்பாட்டங்கள் எனும் தலைப்பில்  விஷேட  அறிக்கை வெளியிட்டு   பொலிஸ் தலைமையகம் இதனை அறிவித்துள்ளது.

    பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் காரணமாக  கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இதனால் மறு அறிவித்தல் வரை ஆர்ப்பாட்டங்களோ பொதுக்கூட்டங்களோ நடத்தப்படக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள  DDG (PAS)1/DO2/7/13/2017/20 கடிதத்திற்கு அமைவாக பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த அறிக்கையை விடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்ப்ட்டுள்ளது.
    Virakesari - 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆர்ப்பாட்டம் செய்வோரை துரத்தும் பொலிஸார் - 3 ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் 13 பேர் கைது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top