• Latest News

    July 03, 2021

    ஊரார் கோழியில் வாப்பாவுக்கு கத்தம் (ஊடுறுவல் - வெளிவராத சங்கதிகள்)

     
    ஊரார் கோழியில் வாப்பாவுக்கு கத்தம்
    ஊரார் கோழியில் வாப்பாவுக்கு கத்தம் என்று முஸ்லிம் பிரதேசங்களில் சொல்லுவார்கள். கையாளாகாத அரசியல்வாதிகள் இதனை அதிகம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதிகாரிகளின் முயற்சியினால் கொண்டு வரப்படும் அபிவிருத்திகளை தங்களின் முயற்சியால் வந்ததென்று சொல்லுவதற்கு தமது சகாக்களுடன் சென்று போட்டோ பிடித்து, அறிக்கையும் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதிகாரிகளும் ஆளுந் தரப்பு சப்போர்ட் உள்ள அரசியல்வாதி என்பதால் மௌனமாக இருக்கின்றார்கள். 

    இத்தகையதொரு சம்பவம் நிந்தவூரில் நடைபெற்றுள்ளது. நிந்தவூர் தேசிய பாடசாலையின் மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கு மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மேற்கொண்டிருந்தார். இதனை அறிந்து கொண்ட நிந்தவூரின் அரசியல்வாதி ஒருவர் மைதானத்தை பார்வையிட்டு தானே காரணமென்று பெயர் வைத்துக் கொண்டார்.

    ஆனால், மறுநாள் பாடசாலையின் அதிபர் தமது முகநூல் பக்கத்தில் மைதானத்தின் நிதி ஒதுக்கீட்டிற்கு மாகாண கல்விப் பணிப்பாளரே காரணமென்று உண்மையை தைரியமாக வெளிப்படுத்தினார்.

    ரணில் பிரதமர்                                                                                                                இன்றைய அரசாங்கம் சீனா சார்புடையதாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் அமெரிக்கா, இந்தியா நாடுகளினதும், ஐரோப்பிய நாடுகளினதும் செல்வாக்கை இழந்து கொண்டிருக்கின்றது. அரசாங்கம் நிதி நெருக்கடியில் உள்ளது. அரசாங்கத்தின் வருமானங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு பெரும்தொகை பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது. இலங்கையின் கடற்பரப்பில் அடிக்கடி கப்பல்கள் தீப்பற்றிக் கொள்ளுவது பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

    இதனிடையே ஆளுங் கட்சியின் கூட்டணியில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளது. அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு பாடுபட்;ட பௌத்த மதகுருக்கள் பலரும் அரசாங்கத்தை விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

    உள்நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை சமாளிக்க வேறு வழிகளை காண முடியுமாக இருந்தாலும், வெளிநாடுகளினால் ஏற்படும் அழுத்தங்களை சமாளிப்பதற்கு தகுதியான ஒருவரை இனங்காண வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

    ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இலங்கை ஜி.எஸ்.பி plus வரிச் சலுகையை பெற்றுக் கொள்ள முடியாத இருள்சூழத் தொங்கியுள்ளது.

    இத்தகைய பல பிரச்சினைகளை கருத்திற் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும், வெளிநாட்டு அமைச்சராகவும் நியமனம் செய்வதற்கு ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

    இதற்காக மஹிந்தராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தராஜபக்ஷ அரசியலில் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா, இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மதிப்புக்குரிய அரசியல் தலைவர். 

    இத்தகைய மாற்றம் ஏற்படுமாயின் அரசாங்கம் ரணிலின் பிடியில் சிக்கிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
    நூமலை பிரதமராக்குவதற்கும் ஏலவே சிந்திக்கப்பட்டது. ஆனால், இன்றைய நிலையில் ரணிலே பொருத்தமாகும் என்று பேசிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    பசிலின் வருகையும் அதிரடி மாற்றங்களும்
    பசில்ராஜாபக்ச யாரிடமும் முன்னறிப்பு செய்யாது அமெரிக்கா சென்றார். அவர் எதற்காக சென்றார் என்பது குறித்த ரகசியம் இன்னும் வெளியாகவில்லை. அவர் மீண்டும் இலங்கை வந்துள்ளார். தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்லவுள்ளதாகவும், அவருக்கு நிதி அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
    பசில்ராஜாபக்ச பாராளுமன்றத்திற்கு சென்று அமைச்சராகும் பட்சத்தில் ஆளுங் கூட்டணிக்குள் பிளவுகள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே பசிலுடன் விமல், உதயன் கம்மவில போன்றவர்கள் முரண்பட்டுள்ளார்கள். பசில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதனை அவர்கள் விரும்பவில்லை. 

    ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கும் அதன் பங்காளிக் கட்சிகள் சிலவற்றுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடுகள் நீண்டுகொண்டே செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பங்காளிகள் சில தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் உடும்புப்பிடியாக இருப்பதால் மாற்று வழியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஆலோசித்துள்ளனர் என அறியமுடிகின்றது.

    அதன் முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்குள் கொண்டுவந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    சிறிய விடுமுறையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் (24) நாடு திரும்பினார். அவர் ஜூலை 6ஆம் திகதியன்று தேசியப் பட்டியல் எம்.பியாக பதவியேற்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பசிலை எம்.பியாக்குவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது.

    அதன்பின்னர் ஜூலை மாதத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாகவும் அதில் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார் என்றும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

    உத்தியோகபூர்வமற்ற இந்த அறிவிப்புகள் வெளியானமையால் கொழும்பு அரசியலில் ஓர் அதிர்வு தென்படுகின்றது. அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களான விமல் வீரவன்ச உதய கம்மன்பில ஆகிய இருவரும் பசில் ராஜபக்ஷ பங்கேற்றிருந்த முக்கிய சந்திப்புகளை கடந்த காலங்களில் புறக்கணித்திருந்தனர்.

    கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு தலைவர் அல்லாத ஒருவர் அழைக்கப்பட்டுள்ளமையை அடுத்தே அவ்வாறான கூட்டங்களை புறக்கணித்ததாக பகிரங்கமாகவே அவ்விருவரும் தெரிவித்திருந்தனர்.

    அவ்விருவரும் பகிஷ்கரித்த கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்த அவ்வாறான கூட்டங்களில் தலைமைதாங்கும் குழுவுடன் பசில் ராஜபக்ஷவும் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழிருந்த பொஸ்பரேட் நிறுவனம் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கீழுள்ள கமத்தொழில் அமைச்சின் கீழ் எவ்விதமான முன்னறிவித்தலும் இன்றி கொண்டு செல்லப்பட்டது. அதுதொடர்பிலும் ஏனைய பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

    இது இவ்வாறிருக்க ஜூலை மாதம் நடுப்பகுதியில் இடம்பெறும் அமைச்சரவை மாற்றத்தின் போது முழுமையான அமைச்சரவை மாற்றமொன்றும் இடம்பெறலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இடம்பெறுமாயின் முக்கிய அமைச்சுகளின் பொறுப்புகள் அபகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுவதாகவும் அறியமுடிகின்றது.

    அதில் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் கீழிருக்கும் அமைச்சுக்கள் அல்லது நிறுவனங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இவ்வாறான மாற்றங்கள் எல்லாமே அடுத்தடுத்து முகங்கொடுக்கவேண்டிய தேர்தலைகளை அடிப்படையாக வைத்து காய்களை நகர்த்துவதற்கான ஆரம்பகட்டமென அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அவற்றுடன் கொழும்பு அரசியலை அதிரச் செய்வதற்கான இன்னும் சில அதிரடியான செயற்பாடுகள் அடுத்த வாரத்துக்குள் இடம்பெறலாமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மக்களை ஏமாற்றும் அரசியல்
    தேர்தல் காலங்களில் ஆளுக்கொடு அரசியல் கட்சியில் போட்டியிட்ட அம்பாரை மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஒரு திசையில் நின்று கொண்டிருக்கின்றார்கள். கொழும்பில் அடிக்கடி கூடி பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

    ஹரீஸ் பொத்துவிலுக்கு வரக் கூடாதென்று ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தவரும், பைசால் பொத்துவில் மக்களை மடையர்கள் என்று சொன்னவர் அவருக்கு வாக்கு போடக் கூடாதென்று அறைகூவல் விடுத்த அந்த எம்.பி இந்த இரண்டு எம்.பிக்களின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றார். இவர்கள் கீறும் கோட்டை தாண்ட மாட்டாராம். ஆனாலும், ஒன்றாக கதைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று எழுந்து ஒதுக்குப் புறத்தில் நின்று கொண்டு நீண்ட நேரமாக தொலைபேசியல் பேசுவாராம்.

    இந்த எம்.பியினால் கொண்டு வரம்படும் கொந்தராத்துக்களை செய்வதற்குரிய ஆளைக் கூட நிந்தவூர் அரசியல்வாதிதான் பிடித்துக் கொடுத்துள்ளாராம்.

    வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக அடித்து மோதிக் கொள்ளுவார்கள். அதற்காக ஆதரவாளர்களையும் மோதவிடுவார்கள். தேர்தல் முடிந்ததும் அவர்கள் பாராளுமன்றத்தில் கெண்டினில் ஒன்றாக உட்கார்ந்து உணவு உண்பார்கள். ஆனால், மோதிக் கொண்ட ஆதரவாளர்களை சமாதானப்படுத்தமாட்டார்கள். அவர்களை விரோதிகளாகவே வைத்துக் கொள்வார்கள். 

    தடுத்தார் வென்றார் பின்னர் தோற்றார்
    நிந்தவூர் – காரைதீவு கடற்கரை வீதி காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றது. இதற்கான ஆரம்ப நிகழ்வு 23ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாக இருந்தது. என்னை மீறி எதுவம் செய்ய முடியாதென்று கொழும்பில் தொடர்புகளை ஏற்படுத்தி அதனை தடுத்தார் நிந்தவூர் மண்ணின் மைந்தன். நானும் ஆளுங் கட்சிக்காரன்தான் எனது போட்டோவும் பெயர் பலகையில் இருக்க வேண்டுமென்று கொழும்புக்கு போன் செய்து குறித்த வேலையை நிறுத்த வேண்டுமென்று நிந்தவூரின் அரசியல்வாதி மானை தனது பெயரில் கொண்டவரும் அந்த ஆரம்ப வேலையை தடுத்தார்.

    இந்த அபிவிருத்தியை கொண்டு வந்த றிஸ்லி முஸ்தபாவும், குழுவினர் வியர்த்துக் கொண்டனர். பின்னர் அவர் கொழும்புடன் பேசி மீண்டும் இந்த அபிவிருத்தி வேலை மாலை 3.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊரார் கோழியில் வாப்பாவுக்கு கத்தம் (ஊடுறுவல் - வெளிவராத சங்கதிகள்) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top