தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு.
அரச நிர்வாக சேவையிலும், இலங்கை மத்திய வங்கியிலும் இந்த பதவிக்கு தேர்ச்சிப்பெற்ற அரச உத்தியோகத்தர்கள் எவரும் இல்லையா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன பதவி வகிக்கிறார். மஹிந்த மற்றும் கோட்டாவை போன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியல் நியமனங்களை வழங்கியுள்ளார் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர்நிலை பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். இவ்விரு செயற்பாடுகளும் மிக மோசமான எடுத்துக் காட்டாகும்.
நாட்டின் நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், உள்ளிட்ட பிரபல்யமான நாட்டுக்கு நேரடியாக செலுத்தும் பதவிகளை வகித்தவர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர் அவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படுமாயின் சேவைக் காலத்தின் போது அவர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு பாதிப்பு ஏற்படும்.
பிரதான அமைச்சுக்களான நிதி, வலுசக்தி, மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், உள்ளிட்ட பதவிகளை வகித்தோருக்கு கவர்ச்சிகரமான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் உயர் சலுகைகளை வழங்கி, அவர்கள் வெளிநாடுகளிலோ அல்லது தேசிய மட்டத்திலோ உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கான சட்டத்தை உருவாக்க வேண்டும்.
நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட பரிந்துரைத்துள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு.
அதேபோன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை பிறிதொரு தவறான எடுத்துக்காட்டு.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி தொடர்பில் பாரதூரமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
பொருளாதார நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் இலங்கை வங்குரோத்து நிலையடைய போகிறது என்பதை முன் கூட்டியதாக அறிவிக்கவில்லை.
ஜனாதிபதியின் வசம் தான் நிதியமைச்சு உள்ளது. தனக்கு இணக்கமாகவரையே ஜனாதிபதி நிதியமைச்சின் செயலாளராக நியமிப்பார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வசம், பாதுகாப்பு மற்றும் நிதி பொருளாதார அமைச்சுக்கள் உள்ளன. இந்த அமைச்சில் 94 நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் உள்ளன.
இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை ஜனாதிபதியால் அமைச்சர் என்ற அடிப்படையில் கண்காணிக்கவோ அல்லது ஆராயவோ முடியாது. ஆகவே பூரணத்துவமித்த வகையில் நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான கலாநிதி ஹர்ஷ சூரியபெருமவை நிதியமைச்சின் செயலாளராக நியமித்தமை அரசியல் நியமனமாகும்.
நிதியமைச்சின் செயலாளராக நியமிப்பதற்கு அரச நிர்வாக சேவையிலும் , இலங்கை மத்திய வங்கியிலும் தேர்ச்சிப்பெற்ற அரச உத்தியோகத்தர்கள் எவரும் இல்லையா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன பதவி வகிக்கிறார். இவர் தேர்தல் காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார மேடைகளில் இருந்தவர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் போது இவர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டார் என்றும், ஊழல் மோசடியுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியில் நிதியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அரசியல் நியமனங்களே வழங்கப்பட்டன.
இதனை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனால் அவர்கள் இன்று அதனையே செய்கிறார்கள். நாட்டு மக்கள் இவ்வாறான அரசியல் நியமனங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இராஜதுரை ஹஷான் -
0 comments:
Post a Comment