• Latest News

    August 11, 2013

    கிராண்ட்பாஸ்முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல்: ஊரடங்கு பிறப்பிப்பு


    கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயப்பட்டவர்களில் இரண்டு பொலிஸாரும் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இன்று மஃரிப் தொழுகையின்போது பள்ளிவாசலுக்கு வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவொன்றினாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த குழுவினர் பள்ளிவாசலின் தொழுகையிலீடுபட்டிருந்தவர்கள் மீதும் அருகிலிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பிரதேசத்தில் பாரிய பதற்ற நிலைமை தோன்றியது. 
    தாக்குதலில் பல வீடுகளும் வாகனங்களும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன.
    இன்று மஃரீப் தொழுகையின் பின்னர், பள்ளிவாசல் முன்றலுக்கு ஆயுதங்களுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
    இருதரப்பிலும் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து பிரதேசத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
    சுவர்ண சைத்திய வீதியில் பழைய பள்ளிவாசலுக்கு பதிலாக, மதவிவகார அமைச்சின் அனுமதி பெற்று கட்டப்பட்ட புதிய பள்ளிவாசலொன்றை திறக்கவிடாமல் பெளத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் தொடர்ந்தும் இடையூறுகள் ஏற்படுத்திவருவதாக கடந்த மாதங்களில் முறைப்பாடுகள்  பதிவாகியுள்ளன.
    இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் பௌத்த தேரர்களுக்கும் இடையில் இணக்கப்பாடொன்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரும் கூறினர்.
    பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மீண்டும் திறக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசலுக்கு இன்று நண்பகல் முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் பொலிசாரின் காவலையும் மீறியே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் கூறினர்.
    பள்ளிவாசல் மீதும் அருகிலுள்ள வீடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இருதரப்பிலும் மோதல்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
    பிரதேசத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
    இந்நிலையிலேயே நாளைக் காலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிராண்ட்பாஸ்முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல்: ஊரடங்கு பிறப்பிப்பு Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top