ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இன்று
திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார். மனித உரிமை ஆர்வலர்கள், கிழக்கு
மாகாண ஆளுநர், அரச அதிபர், அகதி முகாம்களைச் சேர்ந்த பொது மக்கள் ஆகியோரை
அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதேவேளை, இன்று காலை, 8.00 மணிக்கு
கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவுடன் கலந்துரையாட
லொன்று நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, திருகோணமலை மாவட்ட செயலகத்தில்
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில்
திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்ட அரசாங்க அதிபர்கள்
கலந்துகொள்ளவுள்ளனர்.
காலை 11 மணிக்கு திருகோணமலை 'ரி ரி' நிலையத்தில் மனித உரிமை அமைப்பு
ஆர்வலர்களைச் சந்திப்பார். இதனைத்தொடர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு நாவலடி
கிராமத்துக்குச் சென்று மீள்குடியேற்றம் சம்பந்தமாகப் பார்வையிடவுள்ளதுடன்
சந்தோசபுரம் மற்றும் கிளிவெட்டி ஆகிய பகுதிகளிலுள்ள அகதிகளையும்
சந்திக்கவுள்ளார். இதேவேளை, திருகோணமலையிலுள்ள மனித உரிமை அமைப்புக்களின்
ஆர்வலர்கள் திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக் காலமாக ஏற்படுத்தப்பட்டு வரும்
குடியேற்றங்கள், காணி அபகரிப்புக்கள், விகாரை அமைப்புக்கள் சம்பந்தமான
விளக்கம் அடங்கிய அறிக்கையொன்றையும் ஆணையாளரிடம் ஒப்படைக்கவுள்ளதுடன்
மீள்குடியேற்றப்படாத கிராமங்கள், இந்துக் கோயில்கள், பள்ளி வாசல்கள்
ஆகியவற்றின் அழிப்புக்கள் சம்பந்தமாகவும் ஆணையாளருக்கு
எடுத்துரைக்கப்படவுள்ளது.

0 comments:
Post a Comment