| சம்பவம் நடைபெற்ற ஆலை |
இந்தியாவின் மும்பை நகரில் 22 வயது பெண் ஊடகவியலாளர்
பலரால் ஒரேநேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்
தொடர்பில் இரண்டாவது சந்தேகநபரைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை இரண்டாவது சந்தேகநபர் பிடிபட்டுள்ளார்.
வியாழனன்று நடந்த இந்த பாலியல் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளியன்றே முதல் சந்தேகநபரைப் பொலிசார் கைதுசெய்திருந்தனர்.
19 வயதுடைய ஒரு வேலையற்ற இளைஞர் இவர்.
மற்ற மூன்று சந்தேகநபர்களும் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இவர்களைத் தேடிப் பிடிப்பதற்கென விசேட அணிகளை பொலிசார் அமைத்துள்ளனர்.
சம்பவம்
ஆங்கில சஞ்சிகை ஒன்றில் வேலை பயிற்சிக்காக
சேர்ந்திருந்த இந்த இளம்பெண்ன் பாழடைந்து கிடக்கும் சக்தி மில்ஸ் என்ற
ஆடைத் தொழிற்சாலையை புகைப்படமெடுக்க உடன் வேலைபார்க்கும் ஆண் ஒருவருடன்
சென்றிருந்தபோது அவருக்கு எதிராக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இருவரும் சக்தி மில்ஸில் படமெடுத்துக்கொண்டிருக்க,
ஒருவர் பின் தொடர்ந்து வந்து விசாரித்ததாகவும். பின்னர் அவர் தொலைபேசியில்
அழைக்க மேலும் நான்கு பேர் அங்கு வந்து சேர்ந்ததாகவும் மும்பை பொலிஸ்துறை
ஆணையர் சத்யபால் சிங் தெரிவித்திருந்தார்.
உடன் வந்தவரைக் கட்டிப்போட்டுவிட்டு இந்தப் பெண்ணை ஐந்து பேருமாக பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளதாக ஆணையர் தெரிவித்தார்.
சம்பவத்துக்குப் பின் இந்தப் பெண் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நலம் தேறி வருகிறது.
மக்கள் ஆத்திரம்
குற்றவாளிகளுக்கு எதிராக தாமதமின்றி நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டுமெனக் கோரி மும்பையில் நிறைய பேர் கலந்துகொண்ட அமைதி
ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.
இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் இவ்விவகாரம் தொடர்பில் வியாழனன்று கண்டனங்கள் எழுந்திருந்தன.
தில்லியோடு ஒப்பிடுகையில் மும்பை பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு உள்ள ஒரு இடமாக கருதப்பட்டுவந்தது.
ஆனால் மும்பையின் மையமான இடமொன்றில் மாலை 6
மணியளவில் இப்படி ஒரு மோசமான தாக்குதல் நடந்திருப்பது அவ்வூர் வாசிகள் பலரை
அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்திய மக்கள் சமூக வலைத்தளங்களிலும் இச்சம்பவம் தொடர்பில் ஆத்திரம் வெளியிட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment