வட மாகாண ஆளுநருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கொண்டுவந்து அவரை வெளியேற்ற வேண்டுமானால் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்
அதிகாரம் வேண்டும். அந்த வகையில் 30 ஆசனங்களை
பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்து வாக்காளர்களும் தவறாது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும் என்று
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்கினேஸ்வரன்
கோரிக்கை விடுத்தார்.
சமஷ்டி என்பது பிரிவினைவாதம் அல்ல. பிரிவினைவாதம் அல்லாத ஒன்றை
அரசாங்கமும் பெரும்பான்மைச் சமூகமும் பெளத்த பிக்குகளும் ஏன்
அவ்வாறு கூறுகின்றனர் என்பது தெரியாதுள்ளது தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பை பொறுத்தவரையில் 1926 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.
பண்டாரநாயக்கவினால் முன்மொழியப்பட்ட அதே சமஷ்டி முறைமையையே
எமது தரப்புத் தீர்வாக முன்வைத்திருக்கின்றோம் என்றும் அவர்
கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று பருத்தித்துறை கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது. பருத்தித்துறை நகரசபைத் தலைவர் சபா. ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல்
விஞ்ஞாபனம் தொடர்பில் தற்போது பலவாறு பேசப்படுகின்றது.
நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த
வழக்கு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விஞ்ஞாபனமானது பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதாகவும்
கூறப்படுகின்றது. எப்படியிருப்பினும் நடைபெறவிருக்கின்ற
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் பின்னர் இது குறித்து நடவடிக்கை
எடுக்கவிருக்கின்றனரோ என்பது குறித்து நானறியேன்.
நான் பிரிவினைக்கு வழிவகுப்பதாக பெரும்பான்மையினர்
கூறுகின்றனர். சமஷ்டி என்பது பிரிவினை என்றே கூறுகின்றனர். ஆனால்
1926 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க
பல்கலையிலிருந்து வெளியாகி இலங்கை வந்ததும் இங்கு சமஷ்டி முறை
ஒன்றே தேவையானது என்று வலியுறுத்தியிருந்தார்.
எனினும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் இந்த சமஷ்டி முறைமைக்கு
எதிர்ப்பினை வெளியிட்டனர். ஏனெனில் நாடு முழுவதும் பரந்து வாழ்ந்த
தமிழ் மக்கள் சமஷ்டி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டால் சகலரும்
வடக்குக்கு சென்றுவிடவேண்டும் என்ற அச்சத்தினாலேயே அதற்கு
எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதன் பின்னர் 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவினால்
கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தின்போது அவர் சமஷ்டி
குறித்து எதுவும் பேசவில்லை. இதன் பின்னர் தந்தை– செல்வா ஒப்பந்தம்
மற்றும் டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியவை கிழித்தெறியப்பட்டன. அதன்
பின்னர் ஆயுதப் போராட்டம் உருவானது. தற்போது ஆயுதப் போராட்டம்
மெளனிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே முன்னர்
முன்வைக்கப்பட்டிருந்த சமஷ்டி முறையை கோரியுள்ளோம்.
அரசாங்கமும் பெரும்பான்மை சமூகத்தினரும் பெளத்த பிக்குமாரும்
கூறுவதைப்போன்று சமஷ்டி என்பது பிரிவினை அல்ல. இவர்கள் ஏன் இவ்வாறு
கூறுகின்றனர் என்று எமக்குப் புரியவில்லை. எம்மைப் பொறுத்தவரை நாம்
சமஷ்டி என்றதொரு தீர்வினை முன்வைத்துள்ளோம். இது தவறு என்றால்
அரசாங்கத்திடம் இருக்கின்ற தீர்வினை முன்வைக்கவேண்டும். ஆனால்
அவ்வாறு எதுவும் கூறப்படுவதாக இல்லை.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினரை
சுற்றிச் சுற்றியே இருக்கவேண்டும் என நினைக்கின்றது. முன்னாள்
ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சரத்
பொன்சேகா ஆகியோரும் இத்தகைய கருத்தினையே முன் வைத்துள்ளனர்.
தமிழ் மக்கள் தமக்கான ஆட்சியினை அமைத்துக்கொள்ள எந்த உரித்தும்
இல்லை என்பதும் சமஷ்டி என்று கூறுவதால் அவர்கள் பிரிந்து போக
நினைக்கின்றார்கள் என்று கூறுவதுமே அரசாங்கத்தின் கருத்தாக
இருக்கின்றது. வடக்கு கிழக்கில் தாம் சொல்வதை ப்போன்று தமிழர்கள்
நடக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கினறது.
இவ்வாறான நிலையில்தான் நாம் எமது தரப்பு தீர்வினை
முன்வைக்கும்போது அதனை பயங்கரவாதம் என்று கூறுகின்றனர். எமக்கு
என்ன தேவை என்பதனை நாம்தான் தீர்மானிக்கவேண்டும். தமிழ்
மக்களின் ஆசைகள் அபிலாஷைகள் என்ன என்பதனை நாம் சகலருக்கும்
எடுத்துக்கூறவேண்டுமானால் வட மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து
வாக்காளர்களும் வரும் 21 ஆம் திகதி இடம்பெறவிருக்கின்ற
வாக்களிப்பில் பங்கேற்கவேண்டும்.
வயது முதிர்ந்தவர்கள் பெண்கள் இளைஞர்கள் என வாக்குரிமை உள்ள சகலரும் வாக்களிப்பது அவசியமாகும் என்றார்.
0 comments:
Post a Comment