• Latest News

    September 19, 2013

    த.தே.கூட்டமைப்பின் குமாரசுவாமி தலைமையிலான குழுவினர் கட்சிதாவல்!

    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்துடன் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில் வவுனியா நகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம். எஸ். குமாரசுவாமி தலைமையிலான குழுவினர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.

    வவுனியாவிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காரியாலயத்தில் வைத்து சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த முன்னிலையில் வவுனியா நகர சபை உறுப்பினர் எம். எஸ். குமாரசுவாமி தலைமையிலான ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை நேற்று முன்தினம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

    புளொட் அமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற குமாரசுவாமி 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை வவுனியா நகர சபை உறுப்பினராக இருந்த அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் போட்டியிட்டு 2009ம் ஆண்டு முதல் வவுனியா நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை உறுப்பினராக இருந்த காலத்தில் வவுனியா பொது நூலகத்தை அபிவிருத்தி செய்து மக்களை பயன்படுத்தும் நிலைமையை உருவாக்கியவராவார்.

    அரசாங்கத்துடன் இணைந்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா நகர சபை உறுப்பினர் எம். எஸ். குமாரசுவாமி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் வவுனியா நகர சபை இயங்கி வருகின்ற போதிலும் 2009ம் ஆண்டு முதல் மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்க முடியாது போயுள்ளது. இந்த காலகட்டத்தில் எமது பகுதிக்கான அபிவிருத்திகள் எதனையும் சாதிக்க முடியாது உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் தற்பொழுது வடக்கில் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துள்ளது.

    எனவே தான் அரசுடன் இணைந்து தமிழ் பகுதிகளுக்கான அபிவிருத்தி மற்றும் மேம்பாடு என்பவற்றை கருத்திற் கொண்டே நாம் அரசுடன் இணைந்து செயற்பட தீர்மாணித்தோம். மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் எதிர்கட்சிக்கு கிடைத்தாலும் பிரயோக அடிப்படையில் மத்திய அரசுடன் கைகோர்த்து செயற்படாவிட்டால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது போய்விடும்.

    தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து செயற்படும் கட்சியல்ல, மாறாக ஜனாதிபதி அவர்கள் நாட்டுக்கு சமாதானத்தை வழங்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நேர்மையான தலைவராவார். எனவேதான் நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டோம் என்றும் வவுனியா நகர சபை உறுப்பினர் குமாரசுவாமி தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: த.தே.கூட்டமைப்பின் குமாரசுவாமி தலைமையிலான குழுவினர் கட்சிதாவல்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top