• Latest News

    September 12, 2013

    இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்க கூடாது பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா கடிதம்

    தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்.
    அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:–

    தற்போதைய இலங்கை அரசாங்கத்துடன், இந்தியாவின் உறவுகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து நான் எழுதி உள்ள ஏராளமான கடிதங்கள் உங்களுக்கு நிலைமைகளை வெளிப்படுத்தி இருக்கும்.இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் இறுதி கட்டத்தில் இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் குறித்தும், தொடர்ந்து இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினர் தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாந்தர குடிமக்கள் போல வித்தியாசமாக நடத்தப்படுவது குறித்தும் தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயத்தினர் மற்றும் அரசியல் எண்ணங்களின் ஆழ்ந்த மற்றும் பரவலான உணர்வுகளை உங்களுக்கு அந்த கடிதங்களில் தெரிவித்து இருந்தேன்.

    இந்தியா, இலங்கையை நட்பு நாடாக கருதுவதை நிறுத்த வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் சரித்திரம் படைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ராணுவ மையங்களில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து இருக்கின்றன.இதனால் இலங்கை ராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டனர். சர்வதேச நிர்ப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதது மட்டும் அல்லாமல், 13–வது திருத்தத்தை நீர்த்துப்போக செய்யும் முயற்சிகளை எடுத்து, தமிழ் மக்களின் குறைந்தபட்ச அரசியல் உரிமைகளையும் நசுக்கும் வகையிலான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

    பாக். ஜலசந்தியில் மீன்பிடிக்க செல்லும் ஏழை மீனவர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியது. 97 மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, மிகுந்த மனக்கவலையுடன் இலங்கை சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த நிலையில், இந்தியாவின் 2 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விற்பனை செய்வதற்கான திட்டம் தொடர்பான செய்திகளை பத்திரிகைகளில் படித்து வருகிறேன். தமிழக மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் இந்தியா ராணுவ வன்பொருள், குறிப்பாக பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவிலும் இந்திய மீனவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தக்கூடிய வகையிலான கடற்படை போர்க்கப்பல்களை இலங்கைக்கு வழங்காது என்று நம்புகிறேன்.
    ரத்து செய்து இருக்க வேண்டும்
    ஆனாலும், இன்று (நேற்று) பிரதமர் அலுவலக ராஜாங்க மந்திரி இலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல்கள் வழங்கும் நடைமுறையை மேற்கொள்வதை உறுதிப்படுத்திய செய்தியை பத்திரிகைகளில் படித்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உணர்ச்சிகள், உணர்வுகளின் வலிமையை பிரதமருக்கு எடுத்து கூறுவேன் என்றும் மத்திய ராஜாங்க மந்திரி குறிப்பிட்டு இருக்கிறார்.மத்திய அரசாங்கம் இப்படி ஒரு முயற்சியை மேற்கொள்வதுதான் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது. முன்பு செய்யப்பட்ட பழைய ஒப்பந்தத்தின்படி இப்படி போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டிய நிலை இருந்தாலும், இப்போதுள்ள சூழ்நிலையில் அப்படிப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசாங்கம் ரத்து செய்து இருக்க வேண்டும்.

    ராணுவ பொருட்களை இலங்கைக்கு சப்ளை செய்ய முயற்சிக்கும் இந்த நடவடிக்கையில் தமிழக மக்களின் கடுமையான உணர்வுகளை மத்திய அரசாங்கம் புரிந்து கொள்ளாத நிலையைத்தான் காட்டுகிறது. இலங்கையில் தமிழ் மொழி பேசும் சிறுபான்மை தமிழக மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கு இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வைக்காமல், இந்திய அரசாங்கம் செய்யும் செயல்கள் எல்லாம் இலங்கையோடு சேர்ந்து இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், இந்திய ஏழை மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குவதாகவே கருதப்படும்.

    தமிழக மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் இந்த அவமானத்துக்கு ஆதரவு அளிப்பதை நான் கடுமையாக வெறுக்கிறேன். இந்த சூழ்நிலையில் எந்த வித தாமதமும் இல்லாமல் இது குறித்து விளக்கம் அளிக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன்.இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்க நிலுவையில் ஒப்பந்தம் இருந்தாலும், இலங்கை ராணுவத்துக்கு எந்த விதமான உதவிகளையும், எந்த வகையிலும் வழங்காமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகிறேன்.மேற்கண்டவாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதத்தில் கூறி உள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்க கூடாது பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா கடிதம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top