ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான வரவு
செலவுத் திட்டத்தில் நாய்களின் உணவுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இது
சிறப்பான ஒரு விடயமாகும். மனிதர்களை விட நாய்களுக்கே அதிக சலுகைகள்
வழங்குவது சிறந்ததாகும். காரணம் மனிதனின் பாதுகாப்பு முதல் பொலிஸார்
கள்வர்களை கண்டு பிடிப்பது வரை நாய்களே மேற்கொள்கின்றன. எனவே நாய்களுக்கு
சலுகைகள்
வழங்குவதை தரகுறைவாக எண்ண முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சாதாரண மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலேயே ஜனாதிபதியினால்
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொழில் இல்லாமல் வீடுகளில் தங்கியிருக்கும் பெண்கள் சுயதொழில்
செய்து முன்னேற கூடிய வகையில் இந்த வரவு செலவு திட்டம் பெரும் உதவியாக
அமைந்துள்ளது. அநேகமான முஸ்லிம் பெண்கள் வீடுகளிலேயே முடங்கி
கிடக்கின்றனர். எனவே இவர்களுக்கு இது பெரும் உதவியாக அமையும் என்பதில்
ஐயமில்லை.
எவ்வளவுதான் உதவி செய்தாலோ அல்லது கோடிகணக்கில் கொடுத்தாலோ போதாது அல்லது
இன்னும் கொஞ்சம் தந்திருக்காலாம் என்று கூறுவதான் மனிதனுடைய இயல்பு. இதை
மாற்ற முடியாது. எவ்வாறாயினும் சதாரன மக்களுக்கு வரப்பிரசாதமாக இந்த வரவு
செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய சனத்தொகையை கொண்ட இந்தியாவை பல
பிரிவுகளாக்குவதற்கு பாரிய சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ரஷ்ய நாடும் இவ்வாறே பல கூறுகளாக்கப்பட்டன. இதேபோன்று பல்லின கலாசாரம்,
சமயங்கள் மற்றும் மொழிகளை கொண்ட இந்தியாவையும் பிளவுப்படுத்த பாரிய
சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இந்தியா இதனை புரிந்து கொள்ள
வேண்டும்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை விஜயம் மேற்கொள்வது சிறப்பான
விடயமாகும். காரணம் யுத்தத்தின் பின்னர் குறுகிய காலப்பகுதியில் வடக்கில்
மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகளை நேரில் கண்டுகொள்ளலாம். இதேவேளை
பிரித்தானிய நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் போன்று ஒரு தரப்பினரை மாத்திரம்
சந்தித்காது ஏனைய தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட வேண்டும். டேவிட்
கமரூன் கனடா வாழ் தமிழர்களின் வாக்குகளை பெறவே வடக்கிற்கு விஜயம் செய்தார்.
எல்லாம் அரசியல் நோக்கம் தான். நாமும் வாக்குகளை பெற சில இராஜதந்திரியான
நடவடிக்கைகளை மேற்கொள்வது வழமையே.
பொதுநலவாய மாநாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் மன்மோகன் சிங்கை
அழைத்திருந்த போதும் தமிழகத்தின் அழுத்தம் காரணமாகவே அவர் வரவில்லை.
எனினும் தற்போது வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இலங்கை வருவது வரவேற்க
வேண்டிய விடயமாகும்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எவ்வித அநீதிகளும் இழைக்கப்படவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கில் 15 இலட்சம் தமிழர்களே வாழ்கின்றனர். ஆனால் அதனை
தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 16 இலட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர்.
மேலும் எனது தொகுதியில் 23 வீதமானோர் தமிழர்கள் ஆவர். இவர்களும் உண்டு
குடித்து சந்தோசமாகத்தான் இருக்கின்றோம். நாம் அவர்களுக்கு எவ்வித
அநீதியும் இழைப்பது இல்லை.

0 comments:
Post a Comment