முஸ்லிம் ஜனாஸாக்களை பொறுத்தவரை 24 மணித்தியாலங்களுக்குள் அவற்றை நல்லடக்கம் செய்ய வேண்டியிருப்பதால் விசாரணைகளை துரிதப்படுத்தி உரியவர்களிடம் அவற்றை காலதாமதம் இன்றி கையளிப்பதற்கு இயலுமான வரை முயற்சிப்பதாக கொழும்பு நகர பிரதம மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி அஷ்ரப் ரூமி தெரிவித்தார்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மரண பரிசோதனை செயல்முறை பற்றிய தொலைக்கல்வி டிப்ளோமா பாடநெறி தொடர்பான செயலமர்வு நீதியமைச்சில் நடைபெற்ற பொழுது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சட்டத்தரணி அஷ்ரப் ரூமி இதனைக் கூறினார்.
சில வேளைகளில் மரணித்தவர் தூர பிரதேசங்களை சேர்ந்தவர்களாக இருந்தால் சாட்சியங்களை நெறிப்படுத்துகையில் அங்கிருந்து பொலிஸார் வரவேண்டியிருப்பதன் காரணமாகவும் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் சொன்னார்.
மரண விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் பற்றிய போதிய அறிவு இருப்பதுவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மரண விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்படுவோரின் கல்வித் தகைமை குறித்து போதிய கவனம் செலுத்தப்பட வேண்டியது முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர் மொழியாற்றலும், நோயாளரின் நோய் நிர்ணய அட்டையில் குறிப்பிடப்படுபவற்றை சரிவர விளங்கிக்கொள்வதற்கு மருத்துவ சொற்பிரயோகங்கள் பற்றிய அறிவும் தேவை என்றார்.
முஸ்லிம் ஜனாஸா சங்கம் பிரதான மரண விசாரணை அதிகாரியின் அலுவலகத்தை நன்கு பராமரிப்பதற்கு உதவி வருவதாகவும் அவர் கூறினார்.


0 comments:
Post a Comment