• Latest News

    November 21, 2014

    மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளர்? இன்று மாலை அறிவிக்கப்படும்- மைத்திரிபால கட்சி தாவ மாட்டார்: கெஹலிய நம்பிக்கை

    அரசாங்க, எதிர்க்கட்சி தரப்புக்களின் தகவல்களின்படி அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொதுவேட்பாளராக தெரிவுசெய்யப்படவுள்ளார் என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

    இதற்கான முடிவு இன்று வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு இன்று மாலை கூடி இந்த விடயத்தில் முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளது.

    இந்தநிலையில் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சிக்கு மாறுவார் என்ற தகவல் பெரும்பாலும் உறுதியாகியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.

    அவருக்கு ஆதரவாக ஆளும் கட்சியில் உள்ள சுமார் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக இறுதி நேரத்தில் பிரதமர் பதவி வழங்கப்பட்ட போதும் அதனை மைத்திரிபால ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கையின் செய்தித்தாள்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

    பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்கப்படுவார்?

    எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

    நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த முடிவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவளித்துள்ளனர்.

    மேலும் பொது வேட்பாளராக களமிறங்குவது குறித்து அமைச்சர் மைத்திரிபாலவும் உத்தரவாதமொன்றை நேற்று வழங்கியுள்ளார்.

    இதனையடுத்து இன்று மாலை நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவரது பெயரை அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த தகவல் கிடைத்தவுடன் நேற்று நள்ளிரவு தொடக்கம் அலரி மாளிகை வட்டாரங்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


    மைத்திரிபால கட்சி தாவ மாட்டார்! கெஹலியவின் கடைசி நேர நம்பிக்கை

    அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆளுங்கட்சியை விட்டு விலக மாட்டார் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடைசி நேர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

    அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பது தொடர்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்லவை ஊடகங்கள் தற்போது தொடர்பு கொண்டு வருகின்றன.

    இதன்போது எம்மிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ரம்புக்வெல்ல, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கட்சிதாவப் போவதாக வெளிவரும் செய்திகளை கடைசி வரை நம்ப முடியாது. ஏனெனில் அவர் ஆளுங்கட்சியின் பிரதான கட்சியான சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியை வகிக்கின்றார்.

    மேலும் ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களில் பிரதமருக்கு அடுத்தபடியாக சீனியாரிட்டி கொடுக்கப்படும் அமைச்சராகவும் மைத்திரிபால சிறிசேனவே காணப்படுகின்றார்.

    இவ்வாறான நிலையில் அவர் எதிர்க்கட்சிக்குத் தாவி பொது வேட்பாளராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவின் செல்வாக்கை யாரும் அசைக்க முடியாது.

    எனவே அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் கட்சி தாவல் குறித்து கடைசி வரை எதனையும் கூறமுடியாதுள்தாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ஆளுங்கட்சியின் சார்பில் இன்று மாலைக்குள் முக்கியமான ஊடகவியலாளர் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளர்? இன்று மாலை அறிவிக்கப்படும்- மைத்திரிபால கட்சி தாவ மாட்டார்: கெஹலிய நம்பிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top