• Latest News

    November 11, 2014

    ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண்

    சர்வாதிகாரி ஹிட்லருக்காக மரண அவஸ்தையை வருடக்கணக்கில் அனுபவித்த பெண்ணொருவர் தனது பழைய நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார்.

    மார்கோட் வோக் என்ற ஜெர்மானியப் பெண் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், ஹிட்லருக்காக “ புட் டேஸ்ட்டராக” பயன்படுத்தப்பட்டவர்.

    ஹிட்லரின் புட் டேஸ்ட்டர்களில் மார்கோட் வோக் மட்டுமே இன்று உயிரோடிப்பவர்.

    தற்போது 96 வயதுடைய வோக், 1917–ல் பெர்லினில் தான் பிறந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே தற்போது வசித்து வருகிறார்.

    ஹிட்லரின் ஒவ்வொரு வேளை உணவையும் ருசித்து, அதில் விஷம் கலக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்துவதுதான்” வோக் மற்றும் அவருடன் இருந்த பெண்களுக்கான பணி.

    அப்படியொரு மரண அவஸ்தையை ஒரு நாளல்ல... இரு நாளல்ல... ஆண்டுக் கணக்கில் அனுபவித்தவர் மார்கோட் வோக்.

    மார்கோட் வோக் உட்பட் அந்த வேலையில் உள்ள ஒவ்வொரு பெண்களும், உணவைச் சாப்பிட்ட பின்னர் காத்திருக்க வேண்டும்.

    ஒரு மணி நேரம் வரை அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்றால், அதன்பிறகு அந்த உணவை ஹிட்லர் சாப்பிடுவார்.

    இவ்வாறு மரணத்தை ருசிபார்த்த வோக் தனது பழைய ஞாபகங்களை மெல்ல மெல்ல மீட்டெடுத்துப் பேசுகிறார்.

    ‘அப்போது ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டு முடிந்ததும், நானும் எனது சக பெண்களும் நாய்களைப் போல கண்ணீர் விட்டு அழுவோம். நாங்கள் இன்னும் சாகவில்லை என்ற சந்தோஷத்தில் வரும் ஆனந்த கண்ணீர் அது!’’

    உள்ளூர் தொடங்கி உலகளவில் எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்த ஹிட்லருக்கு மிகுந்த உயிர்ப்பயம். அதனால், தான் சாப்பிடும் உணவு முதற்கொண்டு ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டார்.

    ஈயும் நுழைய முடியாத அதிபாதுகாப்பு மிகுந்த ஹிட்லரின் ‘பிரஷ்ஷிய ஓநாய்க் குகை’ தலைமையகத்தில் வலுக்கட்டாயமாக உணவு ருசிப்பவராக அமர்த்தப்பட்டபோது வோக்குக்கு 15 வயதுதான்.

    ஒரு ரெயில்வே ஊழியரின் மகளாக சந்தோஷமான சிறுமியாக இருந்தார், வோக். எல்லாம் 1933–ல் நாஜிகள் ஆட்சிக்கு வரும் வரையில்தான்.

    அதன் பிறகு நாட்டின் சூழ்நிலை மாறியது. 1941–ல் பெர்லினில் வோக் தனது கணவருடன் வசித்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே ஒரு குண்டு வீசப்பட்டது.

    அதைத் தொடர்ந்து வோக்கின் கணவர் கார்ல் ராணுவத்தில் போய் இணைந்தார். வோக்கோ, அப்போதைய கிழக்கு பிரஷ்ய நகரான பார்ட்ஸில் (தற்போது போலந்தில் உள்ள பார்க்ஸ்) வசித்த தனது தாயிடம் போய் தஞ்சமடைந்தார்.

    பெர்லினில் இருந்து கிழக்கே 400 மைல் தொலைவிலிருந்த அந்நகரில் வோக்கின் அம்மா வீட்டை ஒட்டியே ஹிட்லரின் ‘ஓநாய்க் குகை’ தலைமையகம் இருந்தது யதேச்சையானது. ஆனால் அதுதான் வோக்கின் துரதிர்ஷ்டம்.

    பார்ட்ஸ் நகர மேயர், தீவிர ஹிட்லர் விசுவாசி. அவரே வோக்கையும், வேறு சில பெண்களையும் ஹிட்லரின் புட் டேஸ்ட்டராக கட்டாயமாக நியமித்தார்.

    ஒவ்வொரு நாளும் வோக்கையும் மற்ற பெண்களையும் அழைத்துச் செல்ல ராணுவ வீரரோடு ஒரு ஸ்பெஷல் பேருந்து வந்து விடும். அவர்களை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பள்ளிக் கட்டிடத்துக்கு பஸ் போகும். அங்குதான் அப்பெண்கள் ஹிட்லரின் உணவை ருசிப்பார்கள்.

    ஒருநாள் அப்படி அவர்கள் அங்கே ஒரு மர பெஞ்சில் அமர்ந்திருந்தபோது அருகே திடீரென்று பேரோசை. அதில், வோக்கும் பிற பெண்களும் தடுமாறிக் கீழே விழுந்துவிட்டார்கள்.

    ‘ஹிட்லர் செத்துட்டார்!’ என்று யாரோ கத்தினார்கள். ஆம், அவரது உயிரைக் குறிவைத்து ஜெர்மானிய ராணுவ அதிகாரிகள் சிலரால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு அது.

    ஆனால் அதில் ஹிட்லர் இறக்கவில்லை. அந்தக் குண்டுவெடிப்புச் சதியில் ஈடுபட்டிருப்பார்கள் என்று சந்தேகப்பட்ட ஜெர்மானியர்களை எல்லாம் நாஜிகள் கொன்று தீர்த்தார்கள்.

    அப்படி ஒரே மூச்சில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000! அந்தச் சம்பவத்துக்குப் பின் வோக், ஹிட்லரின் தலைமையகத்துக்குள்ளேயே வலுக்கட்டாயமாக இடம்பெயர்க்கப்பட்டார். உணவு ருசிக்கும் வேலை தொடர்ந்தது.

    சில பெண்கள், சாப்பிடத் தொடங்கியதுமே பயத்தில் அழ ஆரம்பித்துவிடுவார்கள்.

    ஆனால் நாங்கள் எங்களுக்குக் கொடுக்கும் உணவை முழுமையாகச் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

    பிரிட்டீஷ்காரர்கள் ஹிட்லருக்கு உணவில் விஷம் வைக்க முயற்சிக்கிறார்கள் என்ற வதந்தி உலவிக் கொண்டேயிருந்தது.

    அதனால், ஒவ்வொரு வேளையும், இது நமது கடைசி உணவாக இருக்கலாம் என்று நாங்கள் பீதியில் நடுங்கிக் கொண்டே இருப்போம்.

    ஒரு மணி நேரம் கடந்தபிறகு, ‘நாம் இன்னும் சாகவில்லை’ என்று மகிழ்ச்சியில் கண்ணீர் வடிப்போம் என்கிறார் வோக்.

    யூதர்களை குலைநடுங்க வைத்த ஹிட்லர், அசைவமே சாப்பிட மாட்டாராம். அரிசிச் சாதம், நூடுல்ஸ், பட்டாணி, காலிபிளவர் என்று மிக எளிய சைவ உணவுகள்தான்.

    தினமும் ஹிட்லருக்கான உணவை ருசித்தபோதும், வோக் ஒருமுறை கூட அவரை நேரில் பார்த்ததில்லையாம். ஒரே ஒரு முறை, ஹிட்லரின் அல்சேஷன் நாய் பிளாண்டியைப் பார்த்தேன் என்கிறார்.

    வோக்கின் ‘உணவு’ கஷ்டம், 1945 ஜனவரியில் முடிவுக்கு வந்தது. கிடுகிடுவென்று முன்னேறி வந்த ரஷியப் படை, ஹிட்லர் தலைமையகத்தினுள் புயலெனப் புகுந்து கைப்பற்றியது, வோக் உடனிருந்த அனைத்துப் பெண்களையும் சுட்டுக் கொன்றது.

    அதிர்ஷ்டவசமாக நல்ல மனம் கொண்ட ஓர் அதிகாரி வோக்குக்கு உதவ, நாஜி பிரசார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ் பயன்படுத்திய ஒரு ரெயிலில் தொற்றிக்கொண்டு பெர்லினுக்கு தப்பியோடினார் அவர்.

    ஆனால் வோக்கின் அவதி முடிவுக்கு வரவில்லை. ரஷிய ராணுவத்தினர், கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் கற்பழித்தனர்.

    வோக்கும் 14 நாட்கள் அந்த நரகத்தில் சிக்கிச் சீரழிந்தார். அதன் பக்க விளைவாக, இவர் கருத்தரிக்கும் திறனையே இழந்தார்.

    வோக்கின் கதையை அறிந்து இரக்கம் கொண்ட ஓர் இங்கிலாந்து அதிகாரி, தன் நாட்டில் வந்து வசிக்கும்படி அழைத்தார்.

    ஆனால் தனது கணவர் உயிரோடு இருக்கக்கூடும் என்று கூறி, ஜெர்மனியிலேயே தங்கிவிட்டார் வோக்.

    அவரது நம்பிக்கையின்படியே 1946–ல் இவரது வீடு தேடி வந்துவிட்டார் கணவர் கார்ல். ஆனால் கடந்த காலத்தின் கடுமையான காயத் தழும்புகள் இருவரையும் நிம்மதியாக இணைந்து வாழ விடவில்லை. ஒருகட்டத்தில் பிரிந்துவிட்டனர்.

    அதன்பின் கார்லும் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, இப்போது தனிமையில் வசிக்கும் மார்கோட் வோக்குக்குத் துணை, துயரமான பழைய நினைவுகள் மட்டுமே.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top