• Latest News

    July 05, 2016

    தேவாங்கு மாதிரி உள்ள உன்னையெல்லாம் யார் காதலிப்பார் என்றதால் கொன்றேன்

    சுவாதியை கொலை செய்தது ஏன்? என தனிப்படை போலீசாரிடம் ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். விடிய விடிய நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இன்ஜினியர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் துப்புத் துலக்கிய போலீசார் ஒரு தலைக்காதலால்தான் கொலை நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்தனர்.இதுதொடர்பாக செங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ராம்குமார்(24) கடந்த 1ம் தேதி நள்ளிரவு போலீசாரிடம் சிக்கினார். அப்போது போலீஸ் தன்னை கைது செய்து விடும் என பயந்த ராம்குமார் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ராம்குமாருக்கு மருத்துவ குழுவினர் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் முதல்வர் காப்பீடு திட்ட வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ராம்குமாருக்கு டாக்டர் இளங்கோவன் செல்லப்பா தலைமையில் காது, மூக்கு, தொண்டை நிபுணர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் தொடர் சிகிச்சையளித்தனர். இதனால் வார்டுக்கு வெளியேயும், உள்ளேயும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சுவாதி கொலை வழக்கை விசாரித்து வரும் சென்னை தனிப்படை உதவி கமிஷனர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் 2ம் தேதி நெல்லை வந்தனர். நள்ளிரவு 12.30 மணிக்கு உதவி கமிஷனர் தேவராஜ், பாளையஞ்செட்டிகுளம் விஏஓ ஜெயராமன், வி.எம்.சத்திரம் விஏஓ மயிலேறும் பெருமாள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கொலையாளி ராம்குமாரிடம் மெதுவாக பேச்சு கொடுத்தனர்.

    அப்போது கொலை தொடர்பாக ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலையில்லாமல் சுற்றித் திரிந்த ராம்குமார், அடிக்கடி பேஸ்புக் பார்த்துள்ளார். அப்போது பேஸ்புக் மூலம் சுவாதியிடம் நட்பு கொண்டுள்ளார். அவருக்கு லைக் கொடுத்து அவரை காதல் வலையில் வீழ்த்த ராம்குமார் முயன்றார். இதற்காக சென்னைக்கு வேலை தேடிச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சுவாதி வீட்டின் அருகே அறை எடுத்து தங்கினார். அவரை செப்.3ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள  கோயிலில் முதன்முறையாக சந்தித்துள்ளார். அப்போதே அவருக்கு சுவாதியை ரொம்ப பிடித்துப் போனது. அன்று முதல் சுவாதி தினமும் வேலைக்குச் செல்லும் போதும், திரும்பி வரும்போதும் பின் தொடர்ந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து தனது காதலை முதன்முறையாக சுவாதியிடம் சொல்லியுள்ளார். அப்போது அவரை திட்டிய சுவாதி செல்போனில் தனது தந்தையை அழைத்துள்ளார்.

    தந்தையிடம் தன்னை காட்டிக் கொடுக்கத்தான் அழைக்கிறார் என அஞ்சிய ராம்குமார் பயத்துடன் அவரை பின் தொடர்ந்தார். ஆனால் ரயில் நிலையத்தின் வெளியே நின்ற தந்தையின் பைக்கில் ஏறிய சுவாதி தந்தையிடம் எதுவும் சொல்லவில்லை. இதனால் தன்னை அவர் காதலிக்கிறார் என ராம்குமார் தவறாக நினைத்துக் கொண்டார். வழக்கம் போல் அவரை பின் தொடர்ந்ததோடு, சுவாதி வேலை செய்யும் நிறுவனத்தில் வேலை கேட்பது போல் சென்று அவரிடம் பேச முயன்றுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு அதே ரயில் நிலையத்தில் தனது காதலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் ராம்குமாரின் தொந்தரவு எல்லை மீறியதால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ராம்குமாரை பார்த்து ‘தேவாங்கு மாதிரி உள்ள உன்னையெல்லாம் யார் காதலிப்பார்?’ என கடுமையான வார்த்தைகளால் சுவாதி கூறினாராம். இது ராம்குமாருக்கு உறுத்தலாக அமைந்தது. இதனால் தன்னை அவமானப்படுத்திய சுவாதியை பழிவாங்க ராம்குமார் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக ஊருக்கு வந்த அவர், அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது வாழைத் தோட்டத்தில் வைத்திருந்த அரிவாளை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு சென்னை சென்றுள்ளார். பின்னர் மீண்டும் சுவாதியை பின் தொடர்ந்து சென்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதியை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினார். பின்னர் அங்கிருந்து ரயிலில் புறப்பட்டு ஊருக்கு வந்துள்ளார். கொலையை பற்றி யாரிடமும் வாய் திறக்காமல் இயல்பாக கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அவரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். இந்த தகவலை ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாக்குமூலம் சுவாதி கொலையில் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. கொலையாளி ராம்குமாரை போலீசார் சென்னைக்கு கொண்டு சென்ற பிறகும் ரகசிய விசாரணை நடத்த உள்ளனர். தேறி வருகிறார்: கழுத்தை அறுத்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு நேற்று காலை பல் துலக்க பேஸ்ட், பிரஸ் ஆகியவற்றை போலீசார் வாங்கிக் கொடுத்தனர். அவர் பல் துலக்கிய பிறகு பிரட், பால் ஆகியவை சாப்பிட்டார். தொடர் சிகிச்சையில் உடல் நலம் தேறி வருகிறார்.

    பெண் நண்பர்களுக்காக ஏங்கிய ராம்குமார்
    சென்னை பெண் இன்ஜினியர் சுவாதி கொலையாளி ராம்குமார் குறித்து அவரது பள்ளி  தோழனும், தேங்காய் பறிக்கும் தொழிலாளியுமான ஆனந்த் (23) கூறும்போது, ‘நானும், ராம்குமாரும் செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்தோம். இருவரும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள். ராம்குமார் 5ம் வகுப்பு வரை நன்றாக படித்தான். வகுப்பில் முதல் ரேங்க் எடுப்பான். அதன் பிறகு அவனுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து விட்டது.
    பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்  போது சக மாணவர்களிடம் உங்களுக்கு பெண் நண்பர்கள் உள்ளனர். ஆனால், எனக்கு தான் ஆள் இல்லை என்று கூறுவான். மேலும் சக மாணவர் யாரையாவது ஒரு தலையாக காதலித்தால்  கூட அவர்கள் மீது பொறாமைப்படுவான்.
    இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு  எழுதிய ராம்குமார் சரியாக படிக்காததால் பெயிலாகி விட்டான். பின்னர் தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இன்ஜினியரிங் சேர்ந்தான். கிரிக்கெட்டில்  அவனுக்கு ஆர்வம் உண்டு. சக மாணவர்கள் அவனை ‘ஷேவாக்’’ என்று அழைப்பார்கள்’ என்றார்.

    திட்டமிட்டு கொலை
    சுவாதி  கொலையாளி ராம்குமார் குறித்து செங்கோட்டை மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் ஆமினாள் பீவி கூறும் போது,  ‘ராம்குமார் ஊமை போல் இருந்து விட்டு இவ்வளவு பெரிய செயலை செய்துள்ளது  எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு தலைக்காதல் வலையில் விழுந்ததால் சுவாதியை  கொன்று விட்டான். இவனுக்கு  ஒன்றும் தெரியாது என்று கூற முடியாது. பலநாள் திட்டமிட்டு சுவாதியை  கொலை செய்துள்ளான். இவனுக்கு மனநிலை பாதிப்பு என்று கூறுவதை  ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றார்.

    லேப்டாப், செல்போன் பறிமுதல்
    ராம்குமார் வீட்டில் நுங்கம்பாக்கம் உதவி  கமிஷனர் தேவராஜ் மற்றும் விஏஓக்கள் சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டில் இரும்பு மேஜை டிராயருக்குள் இருந்த ராம்குமார் மற்றும் சுவாதியின் செல்போன்கள், ராம்குமார் பயன்படுத்திய லேப்டாப்பை கைப்பற்றினர். பின்னர் அவர் சில தாள்களில்  எழுதி வைத்திருந்த குறிப்புகளையும் கைப்பற்றினர். பெரும்பாலானவை சினிமா  இயக்குனர்கள் மற்றும் படங்களின் பெயர்களை குறிப்பிட்டு எழுதிய தாள்களாக  இருந்தன.

    குடும்பத்தினரிடம் விசாரணை
    ராம்குமாரின் பெற்றோர் மற்றும் சகோதரிகளை தனிப்படை போலீசார் நேற்று காலை நெல்லையிலிருந்து சென்னைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுவாதி கொலை தொடர்பாக டிவி மற்றும் நாளிதழ்களில் கொலையாளியின் போட்டோவுடன் செய்திகள் வெளியானபோது வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்த ராம்குமார் மீது அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டு ஏதேனும் கேட்டறிந்தனரா என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

    கலாசார சீர்கேடுதான் காரணம்
    சுவாதி கொலை குறித்து மனநல மருத்துவர் லஷ்மி விஜயகுமார் கூறியதாவது:
     ராம்குமார் தனிமையிலேயே இருந்து வந்ததாக செய்திகள் வருகின்றன. இத்தனை காலம் தனிமையிலேயே கழித்த அவர் சுவாதியை பார்த்தவுடன் தனக்கு துணை கிடைக்க போகின்றது என்று நினைத்திருக்கலாம்.  இதனால் தான், சுவாதி கிடைக்கவில்லை என்பதை ராம்குமாரால் ஏற்று கொள்ள முடியவில்லை. இதை தொடர்ந்து, காதல் என்பதில் இருந்து பழிவாங்கும் உணர்வு மேலோங்கியுள்ளது. அதனால், தான் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். குற்றஉணர்வு இருந்தால் உடனடியாக தற்கொலை செய்து கொண்டிருப்பார். ஆனால், போலீஸ் பிடிக்க வந்ததும்தான் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதன் மூலம், தண்டனை கிடைக்குமோ என்ற பயத்தில் தான் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு, ராம்குமாரின் அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ராம்குமாருக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். தற்போது வெளியாகும் படங்கள் பெண்களை ஒரு காட்சி பொருளாக சித்திரிப்பது உள்ளிட்ட கலாசார சீர்கேடுகள் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற ஒரு காரணமாக உள்ளது.
    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை, திருச்சியிலும் மருத்துவமனைகளில் உஷார்
    சுவாதி  கொலையாளி ராம்குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மாலை 4.30 மணிக்கு சென்னை கொண்டு செல்லப்பட்டார். இந்த வாகனத்தில் 2 ஆக்சிஜன் சிலிண்டர்களும் உடன் கொண்டு செல்லப்பட்டன. நெல்லையிலிருந்து சென்னை செல்லும் வழியில் தேவைப்பட்டால் மதுரை, திருச்சி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ராம்குமாரின் உடல்நிலையை பரிசோதிக்க  சிறப்பு டாக்டர்கள் குழுவினரை தயார் நிலையில் இருக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

    நெல்லை அரசு மருத்துவமனையில் 38 மணி நேர பரபரப்பு

    * சுவாதி கொலையாளி ராம்குமார் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சனிக்கிழமை அதிகாலை 1.40 மணியில் இருந்து சென்னை கொண்டு செல்லப்பட்ட ஞாயிற்றுக்கிழமை மாலை 4.22 மணி வரை சுமார் 38 மணி நேரம் அரசு மருத்துவமனை மிகவும் பரபரப்பாக இயங்கியது.
    * மருத்துவமனை வளாகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போலீசாரும், பத்திரிகையாளர்களும் நின்று கொண்டிருந்தனர். தொலைக்காட்சிகள் தங்களது நேரடி ஒளிபரப்பு வாகனம் மூலம் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
    * நேற்று ஞாயிற்றுகிழமை என்ற போதிலும் முக்கிய கொலை வழக்கின் குற்றவாளி அனுமதிக்கப்பட்டிருந்ததால் நெல்லை மருத்துவக்கல்லூரி டீன், கண்காணிப்பாளர், ஆர்எம்ஓ மற்றும் சிறப்பு மருத்துவ பிரிவு டாக்டர்கள் அனைவரும் பரபரப்பாக இயங்கினர். அவர்கள் ராம்குமாரை சென்னை கொண்டு செல்வதற்கான பணிகளை துரிதப்படுத்தினர்.
    * மாலை 4.22 மணிக்கு ராம்குமார் ஆம்புலன்சில் சென்னை கொண்டு செல்லப்பட்டதும் சுமார் 38 மணி நேரத்திற்கு பின்னர் அரசு மருத்துவமனை இயல்பு நிலைக்கு திரும்பியது. எனினும் டீ கடையில் தொடங்கி எல்லா வார்டுகளிலும் சுவாதி கொலையும், ராம்குமார் கைது பற்றிய பேச்சுமே நீடித்தது.

    கறுப்பு துணியால் முகம் மூடல்
    கொலையாளி ராம்குமாரை பாளை. அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்து 108 ஆம்புலன்சில் ஏற்றும்போது அவரது உடல் முழுவதும் போர்வையால் மூடப்பட்டிருந்தது. தலையில் இருந்து கழுத்து வரை கறுப்பு துணியால் மூடியிருந்தனர். பார்வைக்காக கண்கள் இருந்த பகுதி மட்டும் மறைக்கப்படவில்லை.

    தள்ளுமுள்ளுவால் பரபரப்பு
    ஐகிரவுண்டு  அரசு மருத்துவமனையில் கொலையாளி ராம்குமாரை பார்க்க நேற்று காலை முதல் ஏராளமான  பொதுமக்கள் திரண்டிருந்தனர். இதனால் அசம்பாவிதம் எதுவும் நிகழக் கூடாது என்பதற்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறை அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாலை 4.22 மணிக்கு  மருத்துவமனையின் பிரதான வாசல் வழியாக ராம்குமாரை கொண்டு சென்ற போதும் அந்தப்பகுதியில் ஏராளமானோர்  திரண்டிருந்தனர். அவர்களை ஒழுங்குபடுத்த போலீசார் முயன்றபோது முண்டியடித்தனர். இதனால்  கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    தொழுவத்தில் படுத்தது ஏன்?
    சுவாதியை கொலை செய்ததும் முதலில் தற்கொலைக்கு முடிவெடுத்த ராம்குமார் பின்னர் முடிவை மாற்றி சொந்த ஊருக்கு சென்று வீட்டில் பதுங்கியிருந்துள்ளார். தன்னை போலீசார் எப்படியும் கைது செய்து விடுவர் என்று அஞ்சிய அவர் தப்பிச் செல்ல ஏதுவாக வீட்டினுள் சென்று தூங்காமல் வெளியில் உள்ள தொழுவத்தில் படுத்துள்ளார்.  ஆனாலும் போலீசார் தன்னை சுற்றி வளைத்து விட்டதாலேயே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    thanks: dinakaran
     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேவாங்கு மாதிரி உள்ள உன்னையெல்லாம் யார் காதலிப்பார் என்றதால் கொன்றேன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top