• Latest News

    November 06, 2016

    நம்மில் பலருக்கு முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி தொியாது - சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில்

    அபு அலா - 
    இன்று எமது நாட்டின் மிகப் பிரதானமான பிரச்சினைக்குரிய விடயம் எமது தனியார் சட்டமான முஸ்லிம் சட்டம் தொடர்பான நிலமையாகும். இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் எமது நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களில் அதிகமானோருக்கு முஸ்லிம் சட்டம் தொடர்பில் எதுவுமே தெரியாமல் இருப்பதேயாகும். இதனை மாற்ற வேண்டுமா? இல்லையா? என்று யோசிப்பதை விட இச்சட்டம் பற்றி எல்லோரும் முழுமையாக அறிந்திருக்கவேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்பார் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் இன்று (06) தெரிவித்தார்.
     சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு கூறினார்.
    இலங்கை பல்வேறு சட்டமுறைமைகளைத் தன்னகத்தை கொண்ட ஒரு நாடாகும். பல வகையான சட்டமுறைமைகள் இலங்கையில் காணப்படும் அதேவேளை அதை இலங்கை மக்கள் அனுபவிப்பதில் சில கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றது. இவ்வாறான பல வகையான சட்டமுறைகள் இருப்பதன் அடிப்படைக் காரணமாக பல வகையான மதம் பின்பற்றப்படுகின்றமை, வெளிநாடட்வர்களின் ஆதிக்கம், பல இன, மொழி போன்ற பிரிவிணைகளைக் சொல்லலாம். இலங்கையில் காணப்படும் பல வகையான சட்ட முறைகளாக சிங்களச் சட்டம் (இன்று இது கண்டியச் சட்டம் என்று அழைக்கப்படுகின்றது), பௌத்தச் சட்டம், இந்துச் சட்டம் தேசவளமைச் சட்டம், இஸ்லாமியச் சட்டம், முக்குவர் சட்டம், ரோமன் டச்சுச் சட்டம், ஆங்கிலச் சட்டம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
    அவர் மேலும் தெரிவிக்கையில்,
    முஸ்லிம் சட்டம் எனப்படுகின்ற பொழுது இலங்கை பௌத்த மக்களை அதிகமாகக் கொண்ட ஒரு நாடாகும். இந்நாட்டில் காணப்படும் முஸ்லிம்களின் சில முக்கிய விடயங்களை ஆள்வதற்கு தனியான ஒரு சட்டமாக இந்த முஸ்லிம் சட்டம் காணப்படுகின்றமை இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் கிடைத்த ஒரு வரப்பிரஷாதமாகும் என்றால் மிகையாகாது. மேலும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை எடுத்து நோக்கும் பொழுது அது இன்று நேற்று தோன்றியதாக அடையாளம் காணமுடியாது. அவர்களின் வரலாறு மிகப் பழமையானது. போத்துக்கேயர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னரே அதாவது மன்னர்களின் காலத்திலேயே முஸ்லிம்கள் அவர்களது சட்டத்தாலேயே ஆளப்பட்டார்கள் என்பதைப் பின்வரும் விடயம் தெளிவாகச் சொல்கின்றது. 
    போத்துக்கேயர் 1505 ஆம் ஆண்டு இந் நாட்டுக்கு வருகைதரும்போது கொழும்புத் துறைமுகப் பிரதேசத்தில் இஸ்லாமியச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதிமன்றம் ஒன்று இயங்கிக் கொண்டிருந்ததாக “Spiritual And Temporal Conquest Of Ceylon” எனும் நூலினை எழுதிய குவெய்றோஸ் என்பவரை மேற்கோட்காட்டி அருட்தந்தை S.G.Perara எனும் வரலாற்றாய்வாளர் கூறுகிறார்.
    மேலும் முஸ்லிம் தனியார் சட்டத்தின் உள்ளடக்கத்தை நோக்கினோமானால் இது இஸ்லாமிய அனைத்துச் சட்டதிட்டங்களையும் கொண்ட ஒரு தொகுப்பு அல்ல. இம் முஸ்லிம் தனியார் சட்டம் இரு பகுதிகளைக் கொண்டதாகும். முதலாவது ஆள்சார் சட்டம் இதனுள் அடங்கும் விடயங்களாக திருமணம், பலதார மணம், விவாகரத்து, பராமரிப்பு, பிரதி பலண்களை எதிர்பாராத கொடைகள், பருவமடைதல், தத்தெடுத்தல் அல்லது மகவேற்பு, பிள்ளைகளது பாதுகாப்பு, திருமணம் செய்யத் தடுக்கப்பட்டோர், மஹரும் கைக்கூலியும் அடுத்து ஆதனம் சார் சட்டம் இதற்குள் உயில் எழுதாத சொத்து வாரிசுரிமை அதாவது உயில் எழுதாது மரணிப்பவர் சார்நத மத்ஹப் சட்டத்தின் பிரகாரம் வாரிசுகள் சொத்துகக்ளைப் பெறுவர். இவையே முஸ்லிம் தனியார் சட்டத்துக்குள் அடங்கும் விடயங்களாகும்.
    முஸ்லிம்கள் எமது இந்த நாட்டில் வாழ ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை தமக்கே உரித்தான முஸ்லிம் சட்டத்தை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் ஷரிஆச் சட்டம் முழுமையாக செயற்படுவதில்லை மாறாக பௌத்தர்கள் பெரும்பாண்மையினராக வாழும் இந்த நாட்டில் குறிப்பிட்ட சில விடயங்களில் ஷரிஆவின் ஒரு பகுதி மாத்திரமே முஸ்லிம்களின் தனியார் சட்டமாக விளங்குகின்றது. ஆனாலும் எமது நாட்டில் சில சந்தர்ப்பங்களில் ஷரிஆச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதுண்டு.
    1. விவாகப் பதிவைக் கட்டாயமாக்குவதன் மூலம் நேர்த்தியான முறையில் விவாகம் பதியப்படும் அதேவேளை ஒருவர் விவாகம் செய்ததற்கான ஆதாரமும் அதுவாகத்தான் காணப்படும்.
    2. விவாகரத்து முற்றிலும் முஸ்லிம் சட்டத்துக்கு அமைவானதாகவே காணப்படுதன் ஊடாக முஸ்லிம்கள் அவர்களது மார்கக்த்துக்கு ஏற்றது போல் தங்களது வாழ்வை மேற்கொள்வதற்கு வாய்ப்பானதாக அமையும்.
    3. காதி நீதிபதிகள் தொடர்பாக பார்க்கும் போது காதியாக நியமிக்கப்படுபவர்கள் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவர்காளாக இருக்க வேண்டும் அப்போதுதான் மற்றவர்கள் இவர்களது பேச்சைக் கேட்கும் ஒரு நிலமை ஏற்படும்.
    4. காதி நீதிமன்றத் தீர்ப்புக்களை மேன் முறையீடு செய்ய காதிச் சபையொன்று நியமிக்கப்படுவதன் ஊடாக மக்களுககு; நம்பிக்கை அதிகரிக்கும் அதேவேளை பக்கச் சார்பான முடிவுகள் இல்லாமற் செய்யப்படும். மேலும் இக் காதி நீதிபதிகள் விசாரணைகள,; தீர்ப்புக்கள் அனைத்தையும் ஒழுங்கு ரீதியில் பதிவதன் ஊடாக இயன்றளவு பிரச்சிணைகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
    மேற்கூறப்பட்ட அனைத்து நோக்கங்களையும் நிறைவேற்றும் என எண்ணி சட்டவாக்க சபையில் கொண்டுவரப்பட்ட மசோதா ஒன்றின் மூலம் 1929ம் ஆண்டைய 27ம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் சபையினால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இச் சட்டத்தில் 1962ம் ஆண்டின் 21ம் இலக்கத் திருத்தச் சட்டத்தின் மூலமும் 1982ம் ஆண்டின் 33ம் இலக்கத் திருத்தச் சட்டத்தின் மூலமும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
    இச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கை ஆராய்கின்ற போது அதன் முன்னுரையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. “கூட்டிணைக்கப்பட்டவையாயினும் சரி அல்லாதவையாயினும் சரி பள்ளிவாசல்களையும், முஸ்லிம் புண்ணியத் தலங்களையும், மார்க்க வழிபாட்டிடங்களினதும், முஸ்லிம் தரும நம்பிக்கைப் பொறுப்புக்களினதும் அல்லது வக்புகளினதும், நம்பிக்கைப் பொறுப்பாளர்களின் தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் விதித்துரைப்பதற்கும், முஸ்லிம் தரும நிதியம் ஒன்றைத் தாபிப்பதற்கும், முஸ்லிம் மரணசாசனம் இல்லா வழியுரிமை மற்றும் வக்புகள் கட்டளைச் சட்டத்தின் ஒரு அத்தியாயத்தை நீக்கம் செய்வதற்கும், அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடையே நேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான ஒரு சட்டம்” இதிலிருந்து இச் சட்டம் கொண்டுரப்பட்டதன் நோக்கம் தெளிவாகப் புலப்படுகின்றது. இன்னும் தெளிவாகக் கூறுவதாயின் இச் சட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கம் 
    1. மஸ்ஜிதுகளையும், வக்புச் சொத்துகக்ளையும் பதிதல்
    2. நம்பிக்கைப் பொறுப்புக்கள் பராமரிப்போரின் கடமைகளை வரையறுத்தல்
    3. ஜமாஅத்தினரால் தெரிவு செய்யப்படும் நம்பிக்கைப் பொறுப்பபாளர்களை வக்ப் சபையில் பதிதல்
    4. முஸ்லிம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை உருவாக்கல்
    5. ஆணையாளரை நியமித்தலும் மற்றும் ஏழு உறுப்பிணர்களைக் கொண்ட சபையை அமைத்தலும்
    6. 1982ம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் படி மஸ்ஜிதுகளுக்கு மேலாக தர்ஹாக்களையும் பதிதல்
    7. பதியப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் நிதியம் அமைக்கப் பங்களிப்புச் செய்தல்

    மேலும் இச் சட்டத்தில் 1982ம் ஆண்டு ஒரு மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலமாக வக்ப் மேன்முறையீட்டுச் சபையொன்று நிறுவப்பட்டது அத்துடன் வக்ப் ஆணையாளர் எனும் பதவி திணைக்களப் பணிப்பாளர் என மாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் தலைமைத்துவப் பதவிக்கு ஆணையாளர் கடமையாற்றுவது நீக்கப்பட்டு அங்கத்தவர்களுள் ஒருவர் தலைமை தாங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
    இச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் விளைவாக முஸ்லிம் பள்ளிவாசல்கள், சமய வழிபாட்டுத் தலங்கள், முஸ்லிம் அறஞ்சார் நம்பிக்கைப் பொறுப்புக்கள் (வக்பு) என்பன தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தியது. மேலும் இவை அனைத்தும் ஒரு கட்டுக் கோப்புக்குக் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால் முஸ்லிம்களின் பொது விடயங்கள் சிறந்த முறையில் கையாளப்பட்டதோடு மக்களுக்கு இதன் மீதான நம்பிக்கையும் அதிகரித்தது.
    மேற்கூறப்பட்ட அனைத்து விதமான நியதிச் சட்டங்கள், திருத்தச் சட்டங்கள் என்பவற்றை நோக்குகின்ற போது இவை அனைத்தும் முஸ்லிம்களின் வாழ்வியல் விடயங்களை இஸ்லாமிய ஷரிஆச் சட்டத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள ஏதுவாகவே கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. மேலும் இச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் சில விடயங்கள் இஸ்லாமிய ஷரிஆவுக்கு முரணாக அமைந்திருப்பதை அவதாணிக்க முடிகின்றது. உதாரணமாக இறுதி விருப்பு ஆவணத்தை பொதுச் சட்ட அடிப்படையிலும் எழுதி வைக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இது இஸ்லாமிய ஷரிஆச் சட்டத்துக்கு முரணானதாகும். எனவே இது சம்பந்தமாகக் கூறப்படுகின்ற 1844ம் ஆண்டின் 21ம் இலக்க இறுதி ஆவணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் அப்போதுதான் இச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதன் உன்னத நோக்கை அடைந்து கொளள் முடியும் என்பதில் மாற்றுக் கருத்துககு; இடமில்லை.
    மேலும் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் 1951ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு முஸ்லிம் தனியார் சட்டமாக அமுலில் இருந்து வந்துள்ளது அதற்கு 1954ம் ஆண்டு 31ம் இலக்கத் திருத்தச் சட்டமும், 1955ம் ஆண்டு 22ம் இலக்கத் திருத்தச் சட்டமும், 1962ல் 1ம் இலக்கத் திருத்தச் சட்டமும், 1965ம் ஆண்டு 5ம் இலக்கத் திருத்தச் சட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் 1965ம் ஆண்டுக்குப் பிற்பாடு பல வருட காலம் எந்தவிதமான திருத்தமும் கொண்டுவரப்படவில்லை. ஆனால் இச் சட்டத்தில் காணப்படும் பல விடயங்கள் திருத்தி அமைக்கப்பட்டு இஸ்லாமிய ஷரிஆ சட்டங்கள் புகுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.
    ஆகவே இன்று பல திருத்தங்களுடன் நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் மக்களின் பிரதான சட்டக் கோவையை 3 வகைப்படுத்தலாம்.
    1. 1951ம் ஆண்டின் 13ம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம்
    2. 1956ம் ஆண்டின் 51ம் இலக்க முஸ்லிம் பள்ளிவாசல் தர்ம நம்பிக்கை நிதியம் அல்லது வக்ப் சட்டம
    3. 1931ம் ஆண்டின் 10ம் இலக்க முஸ்லிம் வாரிசுச் சொத்துப் பங்கீடு தொடர்பான சட்டம்
    ஆகவே இவ்வாறுள்ள முஸ்லிம் சட்டத்தில் நியதிச் சட்டங்களும் அதில் திருத்தங்களும் கொண்டுவரப்பட்டமையானது திருப்திகரமானதாக அமைந்தாலும் இதில் தற்போதும் காணப்படுகின்ற வழக்காறு ரீதியான விடயங்கள் நீக்கப்பட்டு இஸ்லாமிய ஷரிஆச் சம்பந்தமான சட்டங்கள் புகுத்தப்படுமாயின் இச் சட்டம் சிறந்தவொரு முஸ்லிம் தனியார் சட்டமாக மிளிரும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நம்மில் பலருக்கு முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி தொியாது - சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top