• Latest News

    November 20, 2017

    கிழக்கு மாகாண ஆளுநரினால் நிருவாக அதிகாரிகள் யாரும் பந்தாடப்படவில்லை - பிர்னாஸ் இஸ்மாயில்

    - பைஷல் இஸ்மாயில் -

    லங்கை நிருவாக சேவையிலுள்ள அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநரினால் பந்தாடப்படுகின்றார்கள் என்று மிகப் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்ற விடயங்களில் எவ்வித உண்மைத் தன்மையுமில்லை என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

    ஏறாவூர் நகர சபையின் காரியாலய உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் உழியர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (20) ஏறாவூர் நகர சபையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பல விடயங்கள் ஆராயப்பட்டதன் பின்னர் குறித்த விடயத்தை தெளிவூட்டி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

    கிழக்கு மாகாண அமைச்சு மற்றும் திணைக்களங்களில் கடமையாற்றிய இலங்கை நிருவாக சேவைகள் அதிகாரிகளைக் கொண்டு கிழக்கு மாகாணத்தின் நிருவாகத்தை மிகச் சரியான முறையில் ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே இந்த இடம்மாற்றங்கள் யாவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இடம்பெற்ற இடமாற்றங்களில் முஸ்லிம், தழிழ், சிங்களம் என்ற இனப்பாகுபாடுகள் அற்ற ஒரு இடமாற்றங்களாகவே எங்களது இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளது.

    இலங்கை நிருவாக சேவையிலுள்ள அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநரினால் ஒருபோதும் பந்தாடப்படவில்லை. அவர்களுக்கு சரியான பொறுப்புக்களை வழங்கி வைத்துள்ளதுடன் பொதுமக்களுக்கு எங்கும் அநீதி இடம்பெறக்கூடாது என்ற சிந்தனையில் கிழக்கு மாகாண ஆளுநர் இருக்கின்றார் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.  

    அதுமாத்திரமல்லாமல், மக்களுக்கு சேவை வழங்குவதில் எவ்விதப் பாகுபாடுகளும் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் சேவைகளை உரிய முறையில் மிக விரைவாக செய்து கொடுக்கவேண்டும் என்ற ஒரேயொரு சிந்தனையின் அடிப்படையில்தான் கிழக்கின் ஆளுநர் செயற்பட்டு வருகின்றார் என்பதையும் நீங்கள் விளங்கிக்கொள்ளல் வேண்டும்.

    நமது பதவிகள் வெவ்வேறாக இருந்தாலும் எமது நோக்கங்கள் யாவும் மக்களுக்கு சேவை வழங்கவேண்டும் என்ற ஒரே நோக்குகமாகும், இதற்குள் எங்களிடையே பல பாகுபாடுகள் தோன்றிக் காணப்படுகின்றன. இவ்வாறு பாகுபாடுகளுடன் நாம் இருப்போமானால் ஒருபோதும் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க முடியாது. பாகுபாடுகள் பார்த்து செயற்படுகின்ற விடயதிலிருந்து முதலில் விடுபடவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சிறந்த சேவையினை மேற்கொள்ளமுடியும்.

    இதனை நாம் அனைவரும் கருத்திற்கொண்டு செயற்பட்டால் எமது காரியாலயத்தில் ஒருபோதும் பிரச்சினைகள் இடம்பெற வாய்பே இல்லை. அத்துடன் அரச கடமையை மிக அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும். எமக்கு ஒப்படைக்கும் வேலைகளை சரியாகவும் உரிய நேரத்துக்குள் செய்துமுடிக்க வேண்டும். இவ்வாறு நாம் அனைவரும் கடைப்பிடிப்போமானால் எமது வாழ்க்கையில் பல வெற்றிப் படிகளை அடைந்துகொள்ளலாம் என்றார். 



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு மாகாண ஆளுநரினால் நிருவாக அதிகாரிகள் யாரும் பந்தாடப்படவில்லை - பிர்னாஸ் இஸ்மாயில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top