• Latest News

    December 27, 2017

    தடுமாறும் முஸ்லிம் கட்சிகள்

    சஹாப்தீன் -

      நல்லாட்சி அரசாங்கத்தின் தோற்றத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிகப் பெரியதாகும். ஆட்சி மாற்றம் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருமென்று முஸ்லிம்கள் கருதினார்கள். ஆனால், முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை இது வரைக்கும் வைக்கவில்லை. முஸ்லிம் கட்சிகளும் சமூகத்தின் பிரச்சினைகளுக்குரிய தீர்வினைப் பெற்றுக் கொள்ளாது வேறு கவனங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் கட்சிகள் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அரசாங்கத்தை குறை கூறிக் கொண்டிருக்கின்றன. ஆயினும் அரசாங்கத்தின் காலடியில்தான் தஞ்சமாகிக் கிடக்கின்றன. முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றிய கலந்துரையாடல்கள், ஆய்வுகள் போன்றவற்றினை மேற்கொண்டாலும் அவற்றினை கனதியாக்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் எதிர்வரும் 2018 பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி உள்ளுராட்சி சபைகளுக்குரிய தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலை எதிர் கொள்வதற்கு முஸ்லிம் கட்சிகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் தடுமாறாது தீர்க்கமான முடிவுகளை எடுத்து வாக்களிக்க வேண்டும்.

      முஸ்லிம் கட்சிகள் எந்தப் பிரதேசத்தில் என்ன சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமே தீர்மானிக்கின்றார்கள். இன்றைய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பங்காளிக் கட்சிகளாகும். இக்கட்சிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாகவே உள்ளுராட்சி சபைகளில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தும், தனித்தும் போட்டியிடுகின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் உள்ளுராட்சி சபைகளை ஐக்கிய தேசிய கட்சியே வெற்றி கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கட்சிகளை ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் போட்டியிடச் செய்துள்ளார். இரண்டு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுவதற்கு வட்டாரப் பங்கீட்டில் ஏற்பட்ட குழப்பத்தால் சில இடங்களில் தனித்தும் போட்டியிடுகின்றன. இருப்பினும் இக்கட்சிகளுக்கு கடைசித் தருணம் வரைக்கும் என்;ன சின்னத்தில் போட்டியிடுவதென்று தெரியாது. ரணில் விக்கிரமசிங்கவின் கட்டளைக்காக காத்துக் கொண்டிருந்தன. ஒரு உள்ளுராட்சி சபையில் இக்கட்சிகளில் ஒரு கட்சிக்கே ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், முஸ்லிம் கட்சிகள் என்ன செய்வதென்று தெரியாது தடுமாறிக் கொண்டதோடு ஒரு சில உள்ளுராட்சி சபைகளுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியாத அவலத்தையும் அடைந்துள்ளன.

      முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட அரசியல் கட்சியாகவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனுக்கள் வழமைக்கு மாறாக பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை, கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை, காத்தான்குடி நகர சபை  ஆகியவற்றிக்கு உரிய நேரத்தில் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பரினால் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியாது போய் உள்ளன. இதனால், இச்சபைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுகின்றார்கள். இம்மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு நேரம் தாழ்த்தி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதால் அந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
      மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையில் மாத்திரம் போட்டியிடுகின்றது.
     வேலிகம பிரதேச சபையில் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவில் 25 சத வீதம் பெண் வேட்பாளர்கள் இடம்பெறாமையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

      வழமைக்கு மாறாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பு மனுக்கள் அதிகம் நிராகரிக்கப்பட்டமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக கட்சிச் செயலாளரினதும், தலைமையினதும் கவனக் குறைவும், அர்ப்பணிப்புமில்லாத செயலையும் குறிப்பிடலாம். இந்த இடத்தில் முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலியின் பங்களிப்பு கட்சிக்கு எவ்வாறு இருந்துள்ளது என்பதனையும் எடைபோட்டுக் காட்டுகின்றது.

      ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக அலிசாஹிர் மௌலானா உள்ளார். இவர் தமது ஆதரவு வேட்பாளர்களை ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் நிறுத்தாது. முஸ்லிம் தேசிய கூட்டமைப்பில் தராசு சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்டிற்கும், அலி சாஹீர் மௌலானாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்தான் இதற்கு காரணமாகும்.

      மேலும், முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் யானைச் சின்னத்தில் மாத்திரமல்ல. மரச் சின்னத்திலும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், துஆக் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இதனை விட வேறு சின்னங்களில் போட்டியிடுகின்றார்களா என்று உறுதி செய்யவும் முடியவில்லை. ஆயினும் புத்தளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேற்படி சின்னங்களில் தமது கட்சியின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

      இதன் மூலம் அரசியலில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒழுங்கமைக்கப்படாத நிலையில் இருந்துள்ளதென்று தெரிகின்றது. இதனால் ஏற்பட்ட தடுமாற்றமும், அவசரமும்தான் மேற்படி இடங்களில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படக் காரணமாகும்.

      மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாரை மாவட்;டத்தில் காரைதீவு பிரதேச சபைக்கு மரச் சின்னத்திலும், கல்முனை, அக்கரைப்பற்று மாநகர சபைகளுக்கும், நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில், அக்கரைப்பற்று, இறக்காமம், நாவிதன்வெளி, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச சபைகளுக்கு யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

      திருகோணமலை மாவட்டத்திலும், புத்தளத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றன. இதன்படி முஸ்லிம் காங்கிரஸ் நான்கு கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.

      அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று கட்சியின் ஆதரவாளர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ரவூப் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்தின் வெற்றி ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்க வேண்டுமென்ற ரணில் விக்கிரமசிங்கவின் ஆசையை நிராகரிக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியில் எமது வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஆயினும் நாங்கள்தான் யானைப் பாகன் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துக் கொண்டாலும் அவரது கையில் அங்குசமில்லை. அதனை ரணில் விக்கிரமசிங்கவே வைத்துள்ளார் என்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதனை வைத்து முடிவு செய்யலாம்.

      முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பல இடங்களில் தனித்துப் போட்டியிடவில்லை. சுயேட்சைக் குழு உட்பட ஐந்து கட்சிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை அக்கட்சியின் அரசியல் நகர்வின் தளம்பலைக் காட்டுகின்றது. இது போதாதென்று வன்னியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிகளைச் செய்து தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
      அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தும், தனித்தும் போட்டியிடுகின்றன. இக்கட்சி அம்பாரை மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கே ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. என்றாலும், ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வட்டாரங்களை பகிர்ந்து கொள்வதில் ஸ்ரீலஙகா முஸ்லிம் காங்கிரஸிற்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்குமிடையே ஏற்பட்ட இணக்கமின்மையால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுகின்றது.

      கிழக்கு மாகாணத்திற்கு வெளியே ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால்தான் அதிக ஆசனங்களை கைப்பற்றலாமென்பதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திட்டமாகும். ஆயினும், ரணில் விக்கிரமசிங்க தான் நினைத்த மாதிரியே வட்டாரங்களை ஒதுக்கீடு செய்வதற்கு எண்ணினார். இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டுமென்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே பல மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுகின்றது. முஸ்லிம்கள் மத்தியில் தமது கட்சிக்கே அதிக ஆதரவு இருக்கின்றதென்று காட்டும் முயற்சியில் அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் இறங்கியுள்ளார். இதே வேளை, இக்கட்சியின் அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
      என்றாலும், இக்கட்சியும் அம்பாரை மாவட்டம் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு கடைசி வரைக்கும் காத்துக் கொண்டிருந்தது என்ற உண்மையை மறைக்க முடியாது. இதனால், இக்கட்சி தனித்தா அல்லது இணைந்தா போட்டியிடுவது என்பதில் தடுமாற்றத்தை அடைந்திருந்தது. ஆயினும், முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டமையால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அளவிற்கு தடுமாற்றமடையவில்லை எனலாம்.

      அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, தூய   முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஐக்கிய மக்கள் கூட்டமைப்பாக மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
      ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஏறாவூரிலும், கிழக்கு மாகாணத்திற்கு வெளியே கொழும்பு, பதுளை உட்பட ஒரு சில இடங்களில் தனித்து வண்ணாத்திப்பூச்சி சின்னத்தில் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
      தேசிய காங்கிரஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தும், தனித்தும் போட்டியிடுகின்றன.

      இவ்வர்ற முஸ்லிம் கட்சிகள் உள்ளுராட்சி சபைகளின் தேர்தலில் போட்டியிடுகின்றன. இத்தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் அரசியல் நகர்வுகளை அவதானிக்கும் போது சமூகத்தின் மீது அக்கறை கொண்டு தீர்மானங்களை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இத்தேர்தலில் தமது கட்சியின் செல்வாக்கை காட்ட வேண்டுமென்பதற்காக யாருடனும், எத்தனை கட்சியுடனும் இணைந்து போட்டியிடுவதற்கு தயாராக இருக்கின்ற அதே வேளை, ஜனாதிபதிக்கும், பிரதம மந்திரிக்கும் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்வதற்கு தயாராக உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

      முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு நேரம் ஒதுக்கி பேசுவதற்கு மறுதலித்த ஜனாதிபதியினதும், முஸ்லிம் கட்சிகளிடம் ஒன்றும் பாராளுமன்றத்தில் இன்னுமொன்றும் சமர்ப்பித்து சட்ட மூலங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இணைந்து செயற்படுவதற்கும், அவரது கட்சி சார்ந்த வளர்ச்சிக்காக எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டும் நடக்கும் நிலையிலேயே முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் உள்ளார்கள். இதனால்தான், முஸ்லிம் கட்சிகள் ஒரு மாவட்டத்திலேயே வேறுபட்ட கட்சிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தமது கட்சியின் வளர்ச்சியை விடவும் அரசாங்கத்தை ஆளும் கட்சிகளின் வளர்ச்சியை பாதுகாத்துக் கொள்வதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் துணை போய்க் கொண்டிருப்பது அவர்கள் அரசியலில் எடுப்பார் கைப்பிள்ளையாக உள்ளார்கள் என்று காட்டுகின்றது.

      தேர்தலாக இருந்தாலும், அபிவிருத்தியாக இருந்தாலும், அரசியல் தீர்வாக இருந்தாலும், வேறு எதுவாக இருந்தாலும் அவை முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை இருள் சூழ்ந்ததாக்கி விடக் கூடாது. இன்று முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும், முஸ்லிம் அரசியல் தலைமைகளின் தீர்க்கதரிசமற்ற முடிவுகளும், சுய இச்சைகளும் துணையாக இருந்துள்ளன என்ற உண்மையை முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

      முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால சந்ததியினரை கவனத்திற் கொண்டதாக இருக்க வேண்டும். இன்றைய சூழலில் தாம் ஹீரோவாக வேண்டுமென்பதற்காக சமூகத்தை சீரோவாக்க (பூச்சியமாக்க) முடியாது. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு முஸ்லிம் கட்சிகளை அனுமதிக்கவும் கூடாது.

      முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பதவிகளின் மூலமாக திருப்தியடையக் கூடியவர்கள் என்பதனை அரசாங்கம் தீர்க்கமாக அறிந்து வைத்துள்ளது. பாராளுமன்றத்தில் காலத்திற்கு காலம் சுமார் 20இற்கும் குறையாத முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களிடம் எதனையும் அரசாங்கம் கேட்பதுமில்லை. கலந்து பேசுவதுமில்லை. அரசாங்கம் அரசியல் தீர்வு முதல் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தலையாட்டிக் கொண்டிருக்கின்றன. அரபு தேசத்தில் அறியாமைக் காலம் என்று வர்ணிக்கப்படும் காலப் பிரிவில் 'தைம்' எனும் கோத்திரம் இருந்தது. இவர்கள் ஏனைய கோத்திரங்களை விடவும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தார்hகள். ஆனால், அவர்களிடையே ஒற்றுமை இருக்கவில்லை. எதிர்காலம் பற்றி சிந்தனை இருக்கவில்லை. இதனால், இக்கோத்திரத்தாரை எந்தப் பேச்சுக்கும், தீர்வுக்கும் அழைப்பதில்லை. இது போலவே இன்று முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உள்ளார்கள். முஸ்லிம் அரசியல் தலைமைகள் தைம் கோத்திரம் போன்று இருந்தாலும் இவர்களின் நடவடிக்கைககள் எதிர் காலத்தில் முழு முஸ்லிம் சமூகத்தையும் தைம் கோத்திரம் போன்று மாற்றிவிடுமோ என்று அச்சங் கொள்ள வேண்டியுள்ளது.

      ஆதலால், முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்பதனை விடவும் முஸ்லிம் சமூகம் வெற்றி பெறும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இன்றைய நிலையில் முஸ்லிம் கட்சிகள் யாவும் பார்வைக்கு ஒரே விதமாகவே இருக்கின்றன. அவற்றில் முஸ்லிம் சமூகத்திற்கு அதிகபட்ச துரோகம் இழைத்துள்ள கட்சியை நிராகரிக்க வேண்டும். இதனை இத்தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் செய்ய வேண்டும். இதனைச் செய்யும் போதுதான் தவறுகளைச் செய்து கொண்டிருக்கும் ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கும், அரசியல் தலைமைகளுக்கும் பாடமாக அமையும். ஒரு சமூகம் விழித்துக் கொள்ளாத வரையில் அச்சமூகத்தின் தலை விதியை மாற்றியமைக்க முடியாது. சமூகம் தொடர்பான கருமங்களில் தடுமாறிக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளை நேரிய பாதையில் செலுத்த வேண்டும். இதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் விழித்துக் கொள்ளல் அவசியமாகும். எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் முஸ்லிம் சமூகத்தின் துரோகிகளை விரட்டியடிக்கும் ஒன்றாகவே முஸ்லிம்கள் கருத வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தடுமாறும் முஸ்லிம் கட்சிகள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top