அரசியல்கூட்டங்கள் மற்றும் வைபவங்களின் போது அலங்காரத்திற்காக பொலித்தீனை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதனை மீறி பொலித்தீனை பயன்படுத்தினால் ஈராண்டுகால சிறைதண்டனையும் பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்படுமென மத்திய சுற்றாடல் அதிகார சபையில் இன்று இடம்பெற்ற ஊடகவயலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பொலித்தீன் பயன்பாட்டு தடையை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி கருத்து வெளியிடும் போது,
தேர்தல் காலங்களில் பல தொன்களாக பொலித்தீன் பயன்படுத்தப்படுகின்றது. இந்த பொலித்தீன் அலங்காரங்கள் ஊடாக சுற்றாடல் பிரச்சினை ஒருபுறம், கட்சி ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்களும் ஏற்படுகின்றன. சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தி சட்டத்தை கடுமையாக நிலைநிறுத்த நடவடிக்கை எடுப்போம். இதனால் சட்டத்தை எவரும் மீற வேண்டாம் என்றும் வீண் பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். சமூக கலாசார சமய விடயங்களின் போதும் பொலித்தீன் பயன்பாட்டில் இருந்து தவிர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
பிரதி பொலிஸ்மா அதிபர் மனோஜ் பெரேரா கருத்து வெளியிடும் போது ,
தேர்தல் சட்டங்களை மீறி பொலித்தீன் பயன்பாட்டை மேற்கொண்டால் சட்டத்தை நாம் கடுமையாக நிறைவேற்றுவோம். நீதிமன்றத்தில் இவ்விடயம் சமர்ப்பிக்கப்பட்டு அரச பகுப்பாய்வாளரின் அறிக்கையை பெற்று சட்டநடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment