• Latest News

    January 12, 2018

    தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்

    - ஊடகப்பிரிவு -
    க்கரைப்பற்றுக்குள் நுழையமுடியாதவாறு கடந்த 15 வருடங்களாக எங்களுக்கு வேலி போட்டு வைத்திருந்த குதிரைக் கட்சியின் தடைகளை உடைத்துக்கொண்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றுகின்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

    அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, யானைச் சின்னத்தில் போட்டியிடும் கே.எம்.எம். தாஹிர், ஏ.எல். கால்தீன், எச்.ஐ. சஹாப்தீன் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து இன்று (12) நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

    அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

    முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்த அடையாளத்தின் மூலம் ஏணியில் ஏறிவந்து. அந்த ஏணியை மறந்துவிட்டு இப்போது தனக்காக குதிரையொன்றை வாங்கி வைத்திருக்கிறார்  இங்குள்ள முன்னாள் அமைச்சர். அவரே வட, கிழக்கை பிரித்ததுபோன்று பேசித் திரிகின்றார். தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை தடுத்தவர்களும் அவர்களே.

    அக்கரைப்பற்றில் நீண்டகால தேவையாக இருந்துவரும் வடிகான் புனரமைப்புக்காக நகர திட்டமில் அமைச்சின் ஊடாக 50 மில்லியன் ரூபாவை இப்போது ஒதுக்கித் தருகிறேன். இது ஆரம்ப நிதியொதுக்கீடு மாத்திரமே. அக்கரைப்பற்று பிரதேச சபையை எங்களிடம் ஒப்படைத்தால், எதிர்காலத்தில் இதைவிட பல மடங்கு அபிவிருத்திகளை இங்கு செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

    பிரதேச சபை அபிவிருத்திகளுக்கு ஒதுக்கப்படும் சிறியளவிலான நிதியுதவிகளில் பெரும் பகுதியை சுரண்டி தங்களது பொக்கற்றுகளை நிரப்புவர்களாக இல்லாமல் தரமான, நீதியான வேட்பாளர்களை மு.கா. இம்முறை அக்கரைப்பற்றில் களமிறக்கியுள்ளது. ஊழலற்ற பிரதேச சபை உறுப்பினர்களை தெரிவுசெய்யவேண்டிய தார்மீக பொறுப்பு இப்போது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    யானைச் சின்னத்தில் மு.கா. மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்கள், அபிவிருத்திக்காக நான் ஒதுக்குகின்ற நிதிகளில் சுரண்டுபவர்களாக இருக்கமுடியாது. அதுபோல வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குகின்றபோது, பயனாளிகளை தெரிவுசெய்வதில் கட்சிபேதம் பார்க்காமல் நீதியாக நடந்துகொள்பவர்களாக எமது உறுப்பினர்கள் இருக்கவேண்டும்.

    முஸ்லிம்களின் உரிமைகளுக்காக நாங்கள் குரல்கொடுக்கும்போது, பேரினவாத அதிகாரிகளும் பெரும்பான்மைக் கட்சியிலுள்ள சில இனவாத அரசியல்வாதிகளும் எமக்கு தடைபோடுகின்றனர். இப்படியான சூழ்நிலையில், ஐ.தே.க. சார்பாக நாங்கள் சபைகளை வென்றுகொடுக்கும்போது, கட்சியின் உயர்மட்ட தலைமையிடம் எமக்கான உரிமைகளை மேலும் அழுத்தமாக பேசமுடியும். இதனால் அவற்றை செய்துகொடுக்கவேண்டிய தார்மீக பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்படும்.

    அத்துடன், ஐ.தே.க. அமைச்சர்களை உங்களது பிரதேசங்களுக்கு அழைத்துவந்து அபிவிருத்தி நடவடிக்கைளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம். இதற்காக நீதியாகவும் நேர்மையாகவும் நடக்கின்ற வகையில், உரிமைகளை கேட்டு பெற்றுக்கொள்ளக்கூடிய உறுப்பினர்களை மக்களாகிய நீங்கள் வென்றுதரவேண்டும்.

    15 வருடங்களின் பின்னர், அக்கரைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இப்போது வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்தி அக்கரைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸிடம் ஒப்படைப்பதற்கு மக்கள் ஆணை வழங்கவேண்டும் என்றார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தடைகளை உடைத்து அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.கா. கைப்பற்றும் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top